ஒற்றுமையுடன் செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்: டி.ஜெயக்குமார்
சென்னை க்ரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அமைச்சர்கள் தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் இல்லங்களில் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பலர் கூடி ஆலோசித்தனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். அமைச்சர் விஜயபாஸ்கரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், "இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் இரு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதலாவதாக இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய பிரமாண பத்திரம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இரண்டாவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. அந்தக் கருத்தை வரவேற்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருக்கிறார். கழகத்தை வலிமைப்படுத்தி ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியம். அதிமுகவை வலிமைமிக்க இயக்கமாக வைத்திருப்பது அவசியம். அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஒற்றுமையுடன் செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்பதே எங்கள் இலக்கு. இருதரப்பும் ஆலோசித்து முக்கிய முடிவெடுக்கும். உரிய நேரத்தில் உரிய முடிவெடுக்கப்படும்" என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, அது குறித்த தகவல் ஏதும் இல்லை எனத் தெரிவித்தார்.