ராமானுஜருக்கு தனி கோயில் : சேலத்தில் ரூ.6 கோடியில் மணிமண்டபம்

இந்தியாவில் முதல் முறையாக சேலத்தில் ஸ்ரீபகவத் ராமானுஜருக்கு ரூ.6 கோடி மதிப்பில் தனி கோயில் உருவாகி வருகிறது.

ஸ்ரீ ராமானுஜர் தமிழகத்தில் வைணவம் தழைத்தோங்க வைத்த வர். மடாலயங்களை ஏற்படுத்தி இறை பணியில் ஈடுபட்ட இவர், வைணவர்களின் தலைமை குருவாக வும் விளங்கியவர். இன்றைக்கும் ராமானுஜருக்கு பெருமாள் கோயில் களில் தனி சந்நிதியும் வழிபாடும் நடைபெறுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதிய முறையை ஒழித்திடும் விதமாக ஹரிஜன மக்கள் ஆலய பிரவேசம் செய்திட வழி வகை செய்து, புரட்சிகரமான சீர்திருத்தக் கருத்துக்களை பாமர மக்களிடையே பரப்பியவர். பக்தி இலக்கியங்களால் தமிழுக்குத் தொண்டாற்றிய ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாள் வரும் 2017-ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது.

இந்தியாவில் முதல்முறையாக சேலத்தில் ராமானுஜருக்கு சேலம், எருமாபாளையத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில், ரூ.6 கோடி மதிப்பில் 85 அடி உயர ராஜகோபுரத்துடன் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அதில் 74 மடாதிபதிகளை குறிக்கும் விதமாக 74 தூண்கள், ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்க கூடிய சுதை சிற்பங்களும் அமைக்கப்படுகிறது.

மணிமண்டபத்தில் 40 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய மினி தியேட்டரும், அதில் வைணவ சித்தாந்தம், ராமானுஜர் வாழ்க்கை வரலாற்று படங்கள் திரையிடப்பட்டு பக்தர்களுக்கு காட்டப்படும். பிரதான மணிமண்டபத்தில் 10 அடி உயர பீடத்தில் 18 அடி உயரத்தில் ராமானுஜர் சிலை நிறுவப்படவுள்ளது. ராமானுஜர் கோயிலுக்கு முன்புறம் ராமானுஜர் நகர் ஏற்படுத்தப்பட்டு, அதில் 70 வைணவர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு நடைபெற உள்ள ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவில் வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜாதி வேறுபாடு கடந்து ராமானுஜர் ஆற்றிய சமயப் பணியை மெச்சிடும் வகையில், ஆயிரமாவது மணிமண்டபம் மக்களின் மனதில் உயர்ந்தெழுந்து நிற்கும் என்று ஸ்ரீ பகவத் ராமானுஜர் கைங்கர்ய சொஸைட்டி தலைவர் ஆடிட்டர் ஸ்ரீராமன், செயலாளர் முரளிதரன், பொருளாளர் நரசிம்ம மூர்த்தி பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

சீர்திருத்தவாதியாக வலம் வந்த ராமானுஜர்

சோழர் ஆட்சி காலத்தில் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்த ராமானுஜர், அப்போது ஏற்பட்ட கலவரத்தால், அங்கிருந்து வெளி யேற்றப்பட்டார். இதையடுத்து, கொங்கு நாட்டை உள்ளடக்கிய சேலம் மாவட்டம் சிங்களாந்தபுரம் வழியாக மைசூர் மேலக் கோட்டை என்ற பகுதிக்குச் சென்று தங்கினார். மேலக்கோட்டையை ஆட்சி செய்த மன்னரின் உதவியுடன் திருநாராயண புரம் சம்பத்குமார பெருமாள் கோயிலை ஏற்படுத்தி, அங்கு தங்கி வைணவ கருத்துக்களை போதித்து வந்தார்.

திருநாராயணபுரத்தில் பெரும் ஏரியை உருவாக்கினார். ஆயிரம் ஆண்டுக்கு முன்பே ஹரிஜன மக்களும் கோயிலுக்குள் வந்து, இறை வழிபாட்டில் ஈடுபட வழி ஏற்படுத்தினார். மேலக்கோட்டையில் இன்றளவும் சம்பத்குமார பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் வைரமுடி சேவையில் ஹரிஜன மக்களே முன்னின்று செய்து வருகின்றனர். வைணவத்தில் அனைத்து மக்களும் ஆண்டவனின் அடியார்கள் என்ற கொள்கை அடிப்படையில் சாதி வேறுபாடுகள் கலைந்து, வைணவத்தை பின்பற்றிடும் ஹரிஜன மக்களின் கைகளில் சங்கு, சக்கர முத்திரை குத்தி, திருகுலத்தோர் என்றழைத்திட கூடிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE