‘தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்’: கருணாநிதி வலியுறுத்தல்

நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

டெல்லியில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற இந்தியப் பொரு ளாதார மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘‘நஷ்டத்தில் செயல்படும் முக்கியமான சில பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதே நிலையில் விட்டால், அந்த நிறுவனங்கள் மூடப்பட்டு, அதில் பணிபுரிபவர்கள் வேலை யை இழக்கும் நிலை நேரிடும். எனவே, இரண்டாவது திட்டமான தனியாரிடம் ஒப்ப டைப்பது என்பதை அரசு தேர்வு செய்துள்ளது’’ என தெரிவித் துள்ளார்.

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்பனை செய்வதிலேயே கவனத்தைச் செலுத்துகிறது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை வாங்கிக் கொள்ளத் தனியார் முன்வருவது சிரமம். பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கினால், அரசு அந்த நஷ்டம் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை கண்டறிந்து, அந்த நஷ்டத்தைப் போக்கி லாபத்தை ஏற்படுத்த முன்வர வேண்டுமே தவிர, நஷ்டம் எனக் கூறி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது வரவேற்கக் கூடிய ஒன்றல்ல. எனவே, பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு பதிலாக அந்தத் தொழிற்சாலைகளைக் காப்பாற்றிட மத்திய அரசு முன்வர வேண்டும்.

நீதிபதி கிருஷ்ணய்யருக்கு பிறந்த நாள் வாழ்த்து

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் 100-வது பிறந்தநாளை கொண்டா டியுள்ளார்.

அவர் மேலும் பல்லாண்டு நல்ல உடல்நலத்தோடும், சுறுசுறுப் போடும் வாழ்ந்திட எனது வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன், இந்திய நீதித்துறை வரலாற்றில் கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்புகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் தொடர்ந்து வழிகாட்டக் கூடிய கலங்கரை விளக்குகளாக அமைந்திருப்பவை.

ரோகித் சர்மாவிற்கு பாராட்டு

கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா படைத்த உலக சாதனையைக் கண்டு உலகமே அவரைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. நானும் அவரை பாராட்டுகிறேன். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் அடித்த சேவாக், சச்சின், ரோகித் சர்மா ஆகிய மூவருமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இது இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி.

தமிழகத்தில் உள்ள முதலீட்டா ளர்களை தங்கள் மாநிலத்திற்கு வந்து தொழில் தொடங்கும்படி கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநில அரசுகள் வரிசையாக வந்து அழைப்பு விடுத்ததையடுத்து, தமிழக அரசு 2015ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

2016ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.

இவ்வாறு கருணாநிதி தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE