அரசு அலுவலகங்களில் ஜெ. படம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

ஜெயலலிதாவின் புகைப்படம் அரசு அலுவலகங்களிலும், நலத்திட்டங் களிலும் இடம்பெறுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மனுதார ரின் மனுவை ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து தீர்வு காணும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல் வர் பதவியை இழந்தார். பின்னர், தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். அதன் பிறகும், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு 1978-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்களில், குடியரசுத் தலைவர், பிரதமர், மகாத்மா காந்தி, நேரு, திருவள்ளுவர், ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோரது புகைப்படங்களை வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவில், தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர்களின் பெயர் கள் இடம்பெறவில்லை.

1989-ம் ஆண்டு பிறப்பிக்கப் பட்ட அரசு உத்தரவில், பொது இடங் களில், அரசு அலுவலகங்களில் முதல்வர், முன்னாள் முதல்வர் களின் புகைப்படங்களை வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், சிறை தண்டனை பெற்று, பின்னர் பதவியை இழந்த முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை வைப்பது குறித்து எந்த தகவலும் அந்த உத்தரவில் இல்லை.

இந்த நிலையில், அரசு அலுவ லகங்கள், பொது கட்டிடங்கள், அரசு நலத்திட்டங்கள், அரசு இணை யதளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்து அவரே முதல்வர் பதவியில் நீடிக்கிறார் என்பது போன்ற தோற்றத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர். இது, தன்னிச்சையானது. தமிழ்நாட் டின் அந்தஸ்தை, கண்ணியத்தை குறைப்பதுபோல் உள்ளது.

எனவே, அரசு அலுவலகங்கள், பொது கட்டிடங்கள், அரசு இணைய தளம், இலவச நோட்டுப் புத்தகம், இலவச மடிக்கணினி திட்டம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான புத்தகப் பைகள் போன்ற அரசு நலத்திட்டங்களில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் புகைப்படத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கு, அரசியல் யுத்தத் தின் ஒருபகுதிதான் என்பதில் சந்தேக மில்லை. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், கடந்த காலத்தில் நடந்ததையெல்லாம் குறிப் பிட்டார். இந்த வழக்கில், எதிர்காலத் தைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். முன்னாள் முதல்வர் புகைப்படம் அரசு அலுவலகங் களில் இடம் பெற்றிருப்பது குறித்து அரசுக்கு அக்டோபர் 9-ம் தேதி மனு கொடுத்ததாகவும், நவம்பர் 10-ம் தேதி நினைவூட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்களில் யார், யார் புகைப்படங்கள் வைக்கலாம் என்பது குறித்து அரசு ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவுகளை கருத்தில் கொண்டு மனுதாரரின் மனுவை ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து தீர்வுகாண வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE