நீதிபதியிடம் பிலால் மாலிக் ரகசிய வாக்குமூலம்: வேலூர் சிறையில் அடைப்பு
வேலூரில் கடந்த ஜூலை 1-ம் தேதி இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன் கொலை வழக்குத் தொடர்பாக போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் பக்ருதீன் சிபிசிஐடி காவல் வெள்ளிக்கிழமை முடிகிறது. இதே வழக்கில் பிலால் மாலிக்கின் போலீஸ் காவல் வியாழக்கிழமையுடன் முடிந்தது.
விசாரணையின்போது, குடியாத்தம் பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை குடும்பத்துடன் தங்கியிருந்த வீட்டையும், புத்தூரில் பதுங்கி இருந்த வீட்டையும் பிலால் மாலிக் அடையாளம் காட்டியுள்ளார். மேலும், புத்தூர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சில ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், வேலூர் ஜே.எம்-3 நீதிபதி ரேவதி (பொறுப்பு) முன்னிலையில் பிலால் மாலிக்கை சிபிசிஐடி போலீசார் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர். பிலால் மாலிக்கிடம் விசாரணை நடத்திவிட்டோம். அவரை நீதிமன்ற காவலுக்கு ஒப்படைக்கிறோம் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, நீதிபதி ரேவதியிடம் தனியாக பேச விரும்புவதாக பிலால் மாலிக் தெரிவித்துள்ளார். அதன்படி, சுமார் 10 நிமிடங்கள் பிலால் மாலிக் கூறிய தகவல்களை நீதிபதி பதிவு செய்துகொண்டார். பின்னர், பிலால் மாலிக்கை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சிபிசிஐடி போலீசார் விசாரணை யின்போது வீடியோ பதிவு செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். சில தாள்களில் கையெழுத்தும் வாங்கினர். சில வழக்குகளில் தனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என நீதிபதியிடம் பிலால் மாலிக் கூறியுள்ளார்.