சென்னை பட்டினப்பாக்கத்தில் திங்கள்கிழமை இரவு நடந்த வழிப்பறி சம்பவத்தில் இளம்பெண் ஒருவரும், முதியவர் ஒருவரும் பலியாகினர். மற்றொரு பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் நந்தினி (24). இவர் திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது தோழி காயத்ரி என்ற நஜீமா.
இவர்கள் இருவரும் நேற்றிரவு (திங்கள்கிழமை) இரவு மந்தைவெளியில் உள்ள ஏடிஎம்-மில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு சீனிவாசபுரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பட்டினப்பாக்கம் காவல் நிலையத்துக்கு மிக அருகாமையில் நந்தினியும் அவர் தோழியும் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நந்தினியிடம் இருந்து கைப் பையையும், அவர் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையும் பறிக்க முயன்றுள்ளார்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட நந்தினி வாகனத்தை சற்று வேகமாக செலுத்தியுள்ளார். ஆனால் வேறு பாதையில் வந்த கொள்ளையர்கள் நந்தினியின் வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் நந்தினியும், காயத்ரியும் தூக்கி வீசப்பட்டனர்.
நந்தினி சம்பவ இடத்திலேயே பலியானார். காயத்ரி முதுகுத் தண்டுவடத்தில் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நந்தினியின் வாகனத்தின் மீது மோதிய அதே வேகத்தில் சென்ற கொள்ளையரின் வாகனம் சாலையோரம் படுத்திருந்த சீனிவாசபுரத்தைச் சேர்ந்த முதியவர் சேகர் (65) மீது மோதியது. இதில் சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் இருந்த பொதுமக்களே வண்டியில் வந்த இருவரில் ஒருவரை பிடித்துக் கொண்டனர். பிடிபட்ட நபர் கருணாகரன் (35) எனத் தெரியவந்துள்ளது. அவர் குடிபோதையில் இருந்துள்ளார். பொதுமக்கள் பிடியில் இருந்த அவரை மீட்ட போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நந்தினி இறந்த சம்பவத்தையடுத்து கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்துக்கு பொதுமக்கள் தீவைத்தனர்.
வழிப்பறி, விபத்து சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையத்துக்கு அருகில் 2 பேர் பலியானதையடுத்து சம்பவ இடத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நேரில் சென்று சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து காவல் இணை ஆணையர் மனோகரன், துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
சம்பவம் குறித்து உதவி ஆணையர் ரவிசேகரன், 'தி இந்து - தமிழ்' இணையதள செய்திப் பிரிவிடம் கூறும்போது, "இறந்து போன நந்தினியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்..
சம்பவத்தை நேரில் பார்த்த சீனிவாசபுரத்தைச் சேர்ந்த பாபு, "நான் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல தயாரானேன். அப்போதுதான் பைக்கில் வேகமாக வந்த இருவர் எதிரே வந்த இன்னொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதைப் பார்த்தேன்.
விபத்தில் அந்த வாகனத்தில் இருந்த இரண்டு பெண்களும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அங்கு கூட்டம் கூடிவிட்டது. விபத்தை ஏற்படுத்திய ஒருவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அப்புறம்தான் தெரிந்தது பெண்ணிடம் இருந்து பணம், நகை பறிக்கவே அவர்களை அந்த இளைஞர் பின் தொடர்ந்திருக்கிறார் என்பது" என்றார்.
விசாரணை மேற்கொள்ளும் உதவி ஆணையர், இணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் | படம்: எல்.சீனிவாசன்.
சாலை மறியல்:
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இன்று காலை பட்டினப்பாக்கம் காவல் நிலையம் அருகே திரண்ட சீனிவாசபுரம் மக்கள் பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அப்பகுதி டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என மறியலில் ஈடுபட்டனர். காவல் இணை ஆணையர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பான கோரிக்கை அரசிடம் வைக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
விபத்துக்குள்ளான நந்தினியின் வாகனம் | படம்: எல்.சீனிவாசன்
தீக்கிரையாக்கப்பட்ட கொள்ளையர்களின் இருசக்கர வாகனம்; உள்படம்: பிடிபட்ட கொள்ளையர்களில் ஒருவரான கருணாகரன் | படம்: எல்.சீனிவாசன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago