கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை கடற்படை, தமிழக மீனவர்கள் மீது 480 முறை துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறது. இதில் 260 பேர் இறந்தனர். 102 பேர் காணாமல் போயினர். 330 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் ஏராளமான தாக்குதல் சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்திய - இலங்கை மீனவறப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை டிசம்பரில் சென்னையிலேயே நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. ‘தள்ளிப்போட வேண்டாம் ஒருமாத காலத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவேண்டும்’ என அவசரம் காட்டுகிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ‘இந்த முறையாவது தீர்வு கிட்டாதா?’ என்ற தவிப்பில் இருக்கிறார்கள் நித்தம் செத்துப் பிழைக்கும் தமிழக மீனவர்கள்!
தமிழக மீனவர்கள் விவகாரம் முக்கிய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்திய - இலங்கை கடல் பிராந்தியத்தில் ஆரம்பத்தில் என்ன நடந்தது.. இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது.. இனி, என்ன நடக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்
பின்னிப் பிணைந்திருந்த இந்திய - இலங்கை மீனவர் உறவு!
குமரி மாவட்டம் நீரோடியிலிருந்து சென்னை பழவேற்காடு வரை 1078 கி.மீ. தூரம்.. 502 மீனவ கிராமங்கள் - இதுதான் 42 லட்சம் தமிழக மீனவர்களின் வாழ்வியல் தேசம்! தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடல் பிராந்தியத்துக்கும் 63 ஆண்டுகள் பந்தம் உண்டு. 1950-ல் கட்டுமரங்களின் காலம் முடிவுக்கு வந்த நேரம். அப்போதுதான் தமிழக நாட்டுப் படகுகள் இலங்கையின் தலைமன்னார் வரை சென்று மீன்பிடிக்க உரிமம் வழங்கப்பட்டது. தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பாண்டியன் பர்னாந்து, பூவையா பர்னாந்து இவர்களுக்குச் சொந்தமான ஆறு வல்லங்களுக்குத்தான் முதன்முதலில் மீன்பிடி உரிமம் வழங்கப்பட்டது.
அப்போது, இலங்கை மீனவர்களும் இந்திய கடல் எல்லைக்குள் வந்து தங்களுக்கு தேவையான மீன்களை பிடித்துச் செல்வார்கள். நம்மவர்கள் தலைமன்னாரில் தங்கியிருப்பதுபோல் அவர்கள் நெடுந்தீவில் தங்குவார்கள். இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் மத்தியில் கொடுக்கல் வாங்கல்கூட இருந்தது. சில நேரங்களில், கடலில் தவறிப்போகும் மீன்வலைகளை இரண்டு தரப்பும் கச்சத்தீவில் வைத்து பரிமாறிக் கொண்ட பக்குவமான சம்பவங்களும் உண்டு.
ஐந்தாறு நாட்கள் கடலுக்குப் போகும் தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் சமையல் செய்து இலங்கை மீனவர்களோடு சமபந்தி போஜனம் நடத்துவர். இத்தனை அமைதி நிலவிய இலங்கை - இந்திய கடற் பிராந்தியத்தில் புயல் வீச தொடங்கியது 1983-லிருந்துதான். இலங்கையில் போராளிகளின் கை ஓங்கியிருந்த நேரம். 13.7.83-ல் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது இலங்கை கடற்படை. இந்தச் சம்பவத்தில் ஐந்து மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அன்று தொடங்கிய துப்பாக்கி முழக்கம் இன்றுவரை நின்றபாடில்லை.
தமிழக மீனவர்கள் போதைப் பொருள் கடத்துகிறார்களா?
தமிழக மீனவர்கள் போதைக் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது இலங்கை கடற்படையின் குற்றச்சாட்டு. இதை மறுக்கும் மீனவர்கள், "நாங்கள் தொழில் தர்மத்தை மதிப்பவர்கள். முன்பெல்லாம், அகதிகள் அங்கிருந்து வந்து திட்டைகளில் தவித்துக் கொண்டிருப்பார்கள். பரிதாபப்பட்டு அவர்களைப் படகுகளில் ஏற்றிக்கொண்டு கரையில் விடுவோம். இதற்காக இலங்கை கடற்படை எங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். அகதிகளை ஏற்றாவிட்டால் போராளிகள் எங்களைத் தாக்குவார்கள். இக்கட்டான சூழலில் நாங்கள் என்ன செய்வது? மீனவர்கள் யாரும் கடத்தலுக்குப் போகமாட்டார்கள். ஆனால், அவர்களது படகுகளை பயன்படுத்தி கடத்தல் புள்ளிகள் சிலர் இந்தக் காரியத்தில் ஈடுபடுவது நிஜம். சமீபகாலமாக, தங்கள் மீது பழிவராமல் இருக்கவேண்டும் என்பதற்காக பொய்வழக்குகளையும் பாய்ச்சுகிறது இலங்கை கடற்படை" என்கிறார்கள்.
எதற்காக எல்லை தாண்டுகிறார்கள்?
ஆதம் பாலத்திலிருந்து கோடியக்கரை வரை உள்ள 142 கி.மீ. நீளம் 70 கி.மீ. அகலம் இதுதான் இந்திய - இலங்கை கடற் பரப்பு. இதில் மூன்றில் இரண்டு பங்கு இலங்கைக்குச் சொந்தமானது. எஞ்சிய ஒரு பங்குதான் நமக்கு. இதில் நங்கூரம் போடத்தான் முடியுமே தவிர, மீனுக்காக வலைவிரிக்க முடியாது. இதனால்தான் நமது மீனவர்கள் தெரிந்தோ – தெரியாமலோ எல்லை தாண்டுகிறார்கள். இவர்களுக்குத் தேவையான இறால் உள்ளிட்ட அரியவகை மீன்கள் இலங்கை கடலில்தான் மிகுந்து கிடைக்கிறது.
வில்லங்கத்தை விதைத்த விசைப் படகுகள்!
நாட்டுப் படகுகள் மட்டும் இருந்தபோது இங்கே எந்தத் தொந்தரவுமில்லை. தமிழகத்தில் 1962-ல் காங்கிரஸ் அரசுதான் முதன்முதலில் விசைப்படகுகளை இறக்குமதி செய்தது. இண்டோ -நார்வே திட்டத்தின் மூலம் நார்வே ஆட்கள் வந்திருந்து விசைப்படகுகளை கட்டிக்கொடுத்தார்கள். முதன் முதலில் 62 விசைப் படகுகள் கடலில் இறக்கப்பட்டன. இதன்பிறகு, வெளியூர்களிலிருந்து பலபேர் இங்குவந்து பினாமி பெயர்களில் விசைப்படகுகளை கடலுக்குள் செலுத்தினர்.
விசைப்படகுகளில் ரெட்டை மடி மற்றும் சுருக்கு வலைகளைப் பயன்படுத்துவதால் கடலின் அடித்தளத்தில் உள்ள மீன் குஞ்சுகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் கொத்தாக அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறார்கள் நம்முடைய மீனவர்கள். இப்படி அள்ளிவரும்போது இலங்கை மீனவர்களின் வலைகளையும் அறுத்து நாசப்படுத்துகிறார்களாம். பிரச்சினைக்கு காரணமே இந்த இரண்டு விஷயங்கள்தான். ராமேஸ்வரத்தில் மட்டுமே சுமார் 1200 விசைப்படகுகளும் 2 ஆயிரம் நாட்டுப் படகுகளும் உள்ளன. இதில் சுமார் 300 நாட்டுப் படகுகளும், சுமார் 600 விசைப் படகுகளும் எல்லை தாண்டுவதாக மீனவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.
இதுவரை நடந்த தாக்குதல்களின் கணக்கு வழக்கு..
13.8.83-லிருந்து இதுவரை தமிழக மீனவர்கள் மீது 480 முறை துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறது இலங்கை கடற்படை. இதில் 260 பேர் இறந்திருக்கிறார்கள், 102 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். 330 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இதில்லாமல் ஏராளமான தாக்குதல் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. 14.10.2003-லிருந்து 12.1.2005 வரை 84 படகுகளை பறிமுதல் செய்திருக்கிறது இலங்கை கடற்படை. இதன் மதிப்பு பலகோடி ரூபாய். இந்தப் படகுகளை மீட்பது தொடர்பாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், ‘படகுகளைத் திருப்பிக் கொடுக்க முடியாது. உரிமையாளர்களுக்கான நிவாரணத் தொகையை இந்திய அரசாங்கம்தான் வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பானது. இதையடுத்து, சுனாமி நிவாரண நிதியிலிருந்து படகு உரிமையாளர்கள் 60 பேருக்கு மட்டும் தலா ரூ.25 லட்சத்தை நிவாரணமாக வழங்கியது அரசு. எஞ்சியவர்களுக்கு இன்னமும் வருகிறது.. வந்துகொண்டே இருக்கிறது!
ஐந்து மீனவர்களுக்காக நான்கு அரசாணைகள்!
கடந்த 28.11.2011-ல் தமிழக மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்து அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கை போட்டுத் தாக்கியது இலங்கை கடற்படை. இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, ஐந்து பேரையும் வழக்கிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார். நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தத்திடம் வழக்கு நடத்துவதற்கான பொறுப்பை ஒப்படைத்து அரசாணை வெளியிட்ட முதல்வர், அதற்காக ரூ.2 லட்சம் 14.12.11-ல் ஒதுக்கினார்.
அந்த மீனவர்களின் குடும்பத்துக்கும் தினமும் ரூ.250 நிவாரணம் வழங்குவதற்கான ஆணை 6.8.12-ல் பிறப்பிக்கப்பட்டது. ஐந்து குடும்பத்துக்கும் தலா ரூ. 2 லட்சம் வைப்புத் தொகை செலுத்தி அதற்கான ஆணை 19.12.12-ல் பிறப்பிக்கப்பட்டது. அடுத்தகட்டமாக வழக்கு நடத்த மேலும் ரூ.3 லட்சம் ஒதுக்கி 8.2.13-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதையெல்லாம் சுட்டிக்காட்டும் மீனவர்கள், இதற்கு முந்தைய அரசுகளைவிட இப்போது தமிழக அரசு மீனவர்கள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவதாக சொல்கிறார்கள்.
கச்சத்தீவால் மீனவர் கஷ்டம் தீராது!
கச்சத்தீவை மீட்டால் தமிழக மீனவர்கள் நிம்மதியாய் தொழில் செய்யலாம் என்று கரையில் இருப்பவர்கள் கதைக்கிறார்கள். களத்தியில் இருக்கும் மீனவர்களோ, "கச்சத்தீவை மீட்பதால் மீனவர்களுக்குப் பெரிதாய் எந்த நன்மையும் கிடைத்துவிடாது. தனுஷ்கோடியிலிருந்து 6 நாட்டிக்கல் மைல் தொலைவிலும் இலங்கைக்கு 12 நாட்டிக்கல் மைல் தொலைவிலும் கச்சத்தீவு இருக்கிறது. ஒருவேளை, கச்சத்தீவு நமக்குக் கிடைத்தாலும் அதைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் அவர்களது அனுமதியில்லாமல் நாம் பிரவேசிக்க முடியாது. சீன மீனவர்களுக்கு இலங்கையின் வடமராச்சி பகுதியில் மீன் பிடிக்க கடந்த ஜூலை மாதத்திலிருந்து சிறப்பு அனுமதியை கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், அவர்களோடு இணக்கமாக பேசி, இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க சிறப்பு அனுமதியை வாங்குவதுதான் சரியாக இருக்க முடியுமே தவிர, கச்சத்தீவு என்பது கறிக்கு உதவாத பேச்சு” என்கிறார்கள்.
ஒப்பந்தங்களை மீறிய தமிழக மீனவர்கள்!
இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் இணக்கமான சூழலை ஏற்படுத்துவதற்காக இருதரப்புக்கும் இடையில் இதுவரை மூன்று முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 2004-ம் ஆண்டு மே மாதம் 29 மற்றும் 30-ம் தேதிகளில் இலங்கையில் முதல் பேச்சுவார்த்தை. இதில் இந்தியாவிலிருந்து, நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் பாம்பன் அருளானந்தம் தலைமையில் 22 மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இலங்கை தரப்பில் மன்னார் மீனவ சமாஜத்தின் தலைவர் ஜஸ்டின் துரம், யாழ்ப்பாணம் சமாஜத் தலைவர் தவபாக்கியம், வடமராச்சி தலைவர் எமிலியான் பிள்ளை உள்ளிட்ட 18 மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
’நாங்களும் உங்களது தொப்புள் கொடி உறவுகள் தானே..’ என்று இலங்கை தரப்பில் இணக்கமாகவே பேசினர். முடிவில், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் பாரம்பரிய முறைப்படி மீன்பிடித்துக் கொள்வது, இலங்கை கடற்கரையிலிருந்து 5 நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள் இந்திய மீனவர்கள் வருவதில்லை’ என்று ஒப்பந்தமானது. ஆனால், இதை அப்பட்டமாக மீறிவிட்டார்கள் நம்மீனவர்கள். அதனால், மீண்டும் பிரச்சினைகள் புகைய ஆரம்பித்தன.
இரண்டாவது பேச்சுவார்த்தை 22.8.2010-ல்!. இந்தமுறை சென்னைக்கு வந்தனர் இலங்கை மீனவப் பிரதிநிதிகள். முன்னதாக, ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரை உள்ள மீனவ கிராமங்களுக்கு இலங்கைப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று, ‘இவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாருங்கள்’ என்று சாட்சியம் காட்டினர் தமிழக மீனவ பிரதிநிதிகள். சாந்தோமில் இரண்டு நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையில், இலங்கையின் மீன் துறைச் செயலர் பத்ரினாவும் தமிழக மீன்துறை இயக்குநர் செல்லமுத்துவும் அரசுப் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.
முடிவில், ’வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடலுக்குள் மீன் பிடிக்கலாம். தலைமன்னார் பகுதியில் இலங்கை கடற்கரையை ஒட்டிய ஐந்து நாட்டிக்கல் மைலுக்குள் இந்திய மீனவர்கள் வரக்கூடாது’ என்று ஒப்பந்தமானது. இதையும் நம்மவர்கள் மதிக்கவில்லை. ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டிய தமிழக மீனவர்களைத் தடுப்பதற்கான எந்த முயற்சியையும் இந்திய கடற்படையும் எடுக்கவில்லை. எல்லை தாண்டுபவர்கள் மீதான தோட்டா தாக்குதல்களை இலங்கை கடற்படையும் நிறுத்தவில்லை.
3-வது கட்டப் பேச்சுவார்த்தை இலங்கையில், 22.3.11-ல் நடந்தது. இந்திய வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் திருமூர்த்தி, தமிழக மீன்துறை ஆணையர் எம்.பி.நிர்மலா, இயக்குநர் செல்லமுத்து, இலங்கை தரப்பில் டக்ளஸ் தேவானந்தா, மீன் துறை செயலர் ரஷிதசேனரத்ன ஆகியோரும் கலந்துகொண்ட இந்தப் பேச்சுவார்த்தையில், இலங்கைத் தரப்பில் 22 மீனவப் பிரதிநிதிகளும் தமிழக தரப்பில் 7 பேரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், ’மீன் வளத்தை அழிக்கும் இழுவலையைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் இலங்கை மீனவர்களின் முதல் கோரிக்கையாக இருந்தது. இதை நம்மவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் ஒண்ணே கால் மணி நேரத்திலேயே எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முறிந்து போனது. இந்த நிலையில்தான், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் டிசம்பரில் நடத்தக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் முதல்வர். இந்தமுறை நிச்சயம் நல்ல தீர்வு எட்டப்படும் என்று இருதரப்புமே உள்ளார்ந்து நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
தமிழக மீனவப் பிரதிநிதிகள் சொல்வது என்ன?
நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் "ஜெர்மன் சுவர் இடிக்கப்படுகிறது, ஒரு சிறுமியை நிர்வாணமாக ரோட்டில் விட்டதால் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது. வங்கதேச பிரச்சினைக்கு ஒரு நொடியில் தீர்வை எழுதினார் இந்திரா காந்தி. ஆனால், முப்பது வருடங்களாக தமிழக மீனவன் நாயடி பேயடி பட்டுக்கொண்டிருக்கிறான்; யாராலும் தீர்க்க முடியவில்லை. இந்தியனை சுட்ட இத்தாலிக்காரன் மீது வழக்குப் போடுகிறார்கள். தமிழக மீனவனை சுட்டதற்காக ஒரு வழக்காவது இலங்கை கடற்படை மீது போட்டிருக்கிறார்களா? நாங்கள் மனிதர்கள் இல்லையா? எங்களுடைய உயிர் மட்டும் மளிகைக்கடை சரக்கா?” என்று ஆவேசப்படுகிறார்.
“மீன் வளத்தை அழிக்கும் சுருக்குமடி, ரெட்டைமடி வலைகளையும் படகுகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டு, அவர்கள் மாற்றுத் தொழில் செய்வதற்குத் தேவையான திட்டங்களை அரசு அறிவிக்கலாம். இதற்காக ஐ.நா. அமைப்பு தாராளமாக நிதியுதவி அளிக்கிறது. அதை கேட்டு வாங்கிக் கொடுக்கத்தான் ஆள் இல்லை. ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்துவது மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும். அதற்காக மூக்கையூர், தங்கச்சிமடம், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை அமைக்க வேண்டும். இதற்காக ஆயிரம் கோடி செலவானாலும் அரசுகள் அதைப்பற்றி கவலைப்படக் கூடாது. இந்திய - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கான கூட்டத்தை சென்னையில் நடத்த வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார் தமிழக முதல்வர். இம்முறையாவது நல்ல தீர்வை எட்டவேண்டும் என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு" என்கிறார் அருளானந்தம்.
இலங்கை மீனவப் பிரதிநிதிகள் என்ன சொல்கிறார்கள்?
இலங்கையின் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு மாகாண இணைப்பாளர் ஆன்டனி ஜேசுதாசன், "1980-கள்ல இருந்து இந்தப் பிரச்சினை இருக்குது. தமிழக மீனவர்களால் அதிகம் பாதிக்கப்படுவது வடக்கு மாகாண மீனவர்கள்தான். நாங்களும் தமிழர்கள்தானே. தமிழகத்து ஆட்க போல எங்கட சனம் பெரிய்ய அளவுல தொழில் செய்யுறவங்க இல்ல. சின்னச் சின்னப் படகுகள்ல போயி தொழில் பண்றவங்க. முன்பு யுத்த காலமாக இருந்ததால் வடக்கில எங்கட மீனவர்கள் தொழி லுக்கு போகல்ல. ஆனா, இப்ப அவங்களும் தொழில் பண்ணோணும். ரெட்டை மடி வலைகளை கொண்டுவந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கிறாங்க. இதனால, மீன் வளமே அழிஞ்சு போகுது. அதுமட்டுமில்லாம, எங்கட மீனவர்களோட வலையையும் அறுத்துட்டுப் போயிடுறாங்க.
கடந்த மூணு மாசத்துல ரூ.12 லட்சத்துக்கான வலைகளை சேதப்படுத்திருக்காங்க. 2010-ல் நடந்த கலந்துரையாடலின்போது, அடுத்த ஓராண்டுக்கு 72 நாட்கள் மட்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடலுக்குள் வர அனுமதிப்பது. அதற்குள்ளாக அவர்கள் மாற்றுத்திட்டங்களை ஏற்படுத்திக் கொள்வதுன்னு ஒப்பந்தமானது. ஆனால், அதை தமிழக மீனவர்கள் மதிக்க இல்ல. இப்பவும் கிழமையில மூன்று நாட்கள் ஆயிரம் படகுகள் வரை இலங்கைக்குள்ள பிரவேசித்து எங்கட மீன் வளத்தை அள்ளிக்கிட்டுப் போறாங்க. இந்த விஷயத்தில் இரண்டு அரசாங்கங்களுமே சரியான தீர்வை நோக்கி நகரவில்லை என்பதுதான் எங்களுக்கான வருத்தம். அம்மையார் அவர்கள் எங்களை கலந்துரையாடலுக்கு வரவேண்டுமென்டு அழைத்திருக்கிறார்கள். இம்முறையாவது சுமுகத் தீர்வு எட்ட வேண்டுமென்பதுதான் எங்களது உள்ளக் கிடக்கையும்” என்றார்.
அதிகாரிகளின் ஆதங்கம் என்ன?
"தமிழக மீனவர்கள் மீதுதான் தவறு இருக்கிறது" என்று அடித்துச் சொல்லும் தமிழக மீன் துறை அதிகாரிகளோ, ‘’இவ்வளவு படகுகளுக்கு மீன்பிடி அனுமதி கொடுத்ததே தவறு. ராமேஸ்வரத்தில் 300 படகுகளுக்கு மேல் அனுமதி கொடுத்திருக்கக் கூடாது. இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படை ஒருமுறைகூட வந்ததில்லை. மீனவர்கள் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபட்டால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது. பணத்தை மட்டுமே குறியாய் கொண்டு பணமுதலைகள் சிலரும் பினாமிகள் மூலம் இந்தத் தொழில் இறங்கி இருப்பதுதான் பிரச்சினைக்கு முக்கியக் காரணம்.
ராமேஸ்வரத்தில் மட்டுமே 780 விசைப் படகுகளும் 1200 நாட்டுப்படகுகளும் இருக்கு. விசைப் படகு மீனவர்கள், கில் நெட் (Gill Net) களை பயன்படுத்தி கடலின் அடித்தளம் வரை உள்ள மீன்களையும் மீன் குஞ்சுகளையும் அடியோடு வழிச்சுட்டு வர்றாங்க. பாரம்பரிய மீனவர்கள் யாரும் இந்தக் காரியத்தைச் செய்யமாட்டார்கள். பாக் ஜலசந்தி மீன்கள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற இடம். அங்குள்ள மீன்களை வழித்தெடுப்பதால் இன்னும் இருபது ஆண்டுகளில் கடல் பாலைவனமாகிவிடும். பிரச்சினை தீர ஒரே வழி, மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதுதான். தனுஷ்கோடியிலிருந்து தென்கடல் பரந்து விரிந்து கிடக்கிறது. ஐந்தாம் திட்டையில் சின்னதாய் ஒரு கால்வாய் அமைத்து அதன்வழியாக ராமேஸ்வரம் மீனவர்கள் தென் கடலுக்கு வருவதற்கு வழிவகுத்துக் கொடுத்தாலே பெருமளவு பிரச்சினை தீர்ந்துவிடும்" என்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago