கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரஜினியை சந்திக்கப் போகிறார் அழகிரி என்கிற தகவல் வந்தது. வழக்கம்போல் ரஜினி பாணி செய்தியாக இருக்குமோ என்று பத்திரிகையாளர்கள் சந்தேகப்பட்டாலும் வர வேண்டிய நேரத்துக்கு சரியாக வந்துவிட்டார் அழகிரி.
அவருடன் துரை தயாநிதி, மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் வந்திருந்தனர். சுமார் 20 நிமிடங்கள் கழித்து மூவரும் வெளியே வந்தனர். அழகிரியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் அவர், “என் மகன் படம் எடுக்கப் போகிறான். அதைப் பற்றி பேச வந்தேன். கோச்சடையான் பற்றியும் பேசினோம். நிஜமாகவே அரசியல் பேசவில்லை” என்றார் சிரித்துக்கொண்டே.
அழகிரி தரப்பில் பேசியவர்கள் கூறியதாவது: “அழகிரியின் தற்போதையத் திட்டம், திமுக-வை மூன்றாவது இடத்துக்கு தள்ளுவதும் - அதன் மூலம் தனது இழப்பை புரியவைப்பதும்தான். அதற்காகவே டெல்லியில் அவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அவரிடம் தென் மாவட்டம் முழுவதும் பாஜக வெற்றிபெற தான் உதவி புரிவதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல்தான் அழகிரி நடிகர் ரஜினிகாந்தையும் சந்தித்தார். அவரை சந்திக்க கடந்த வியாழன் அன்றே நேரம் கேட்கப்பட்டது. உடனே நாளை காலை 10.30 ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் வைத்து சந்திக்கலாம் என்று ரஜினி தரப்பில் சொல்லப்பட்டது. அதன்படியே அழகிரி ரஜினிகாந்தை சந்தித்தார்.
ரஜினியிடம் அழகிரி, “கடந்த 96-ம் ஆண்டு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டீர்கள். அதன் பின்பு இப்போது காலம் கனிந்துள்ளது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்து 10 சதவீதம் ஓட்டுகளை எடுக்கும்போது நீங்கள் அரசியலுக்கு வந்தால் 35 சதவீதம் ஓட்டுகளை அள்ளலாம். தமிழகத்தில் சாதி, மதம் இவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டு உங்களுக்கு மட்டுமே மக்களின் செல்வாக்கு இருக்கிறது. எனவே, தயங்காமல் அரசியலுக்கு வாருங்கள். நான் உங்களுக்கு தோள் கொடுக்கிறேன். இப்போதும் 40 சதவீதம் திமுக-வினர் என்னுடன் இருக்கிறார்கள். மேலும் 10 சதவீதம் பேர் ரகசியமாக எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்” என்று சொன்னார்.
ரஜினி தரப்பில் பேசியவர்கள், “ரஜினி காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார். அவர் அரசியலில் இறங்க நினைத்திருந்தால் எப்போதோ இறங்கியிருப்பார். அழகிரி சில விஷயங்களை சொன்ன போது அமைதியாகக் கேட்டுக் கொண்டார். அவருக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்பதுதான் உண்மை. கோச்சடையான் பற்றி இருவரும் நிறைய பேசினார்கள்” என்றனர்.
இந்த சந்திப்பின் போது உடன் இருந்த கே.பி.ராமலிங்கத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
கட்சியிலிருந்து அழகிரி நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன் டெல்லி சென்று பிரதமர், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், இப்போது நடிகர் ரஜினிகாந்த் இவர்களை எல்லாம் சந்தித்திருக்கிறீர்கள். கட்சி உங்கள் மீது நடவடிக்கை எடுக்காதா?
அண்ணன் அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் திமுக தலைவர் கலைஞரின் பிள்ளை இல்லை என்றாகிவிடுமா? எனது 32 கால அரசியல் வாழ்க்கையில் அண்ணன் அழகிரிதான் எனக்கு எல்லாமே. நான் எப்போதுமே அவரது தம்பிதான். அழகிரியின் மொழிப் பிரச்சினையில் உதவி செய்வதற்காக டெல்லிக்குச் சென்றேன்.
அழகிரி பாஜக-வுக்கு ஆதரவு அளிக்கப் போகிறார். தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. அப்போதும் உதவி செய்வீர்களா?
நாளை 16-ம் தேதி அண்ண னின் வீட்டில் அவரது ஆதரவாளர் களுடன் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.
அப்போது அண்ணன் சில முடிவுகளை அறிவிப்பார். அதன் பின்புதான் நானும் முடிவு செய்வேன்.
ரஜினியுடன் என்ன பேசினார்?
அழகிரி, தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசினார். ரஜினி வருத்தம்தோய அதைக் கேட்டுக்கொண்டார். அழகிரி தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ரஜினியுடன் நிறைய பேசினார்.
நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே என்னை உட்கார வைத்திருந்தார்கள். அதனால், நான் இதற்கு மேல் வெளிப்படையாக எதுவும் சொல்லக் கூடாது.
கனிமொழிக்கு தூது
அழகிரி தரப்பில் இருந்து முன்னாள் எம்.பி. ஒருவர் கனிமொழியை சந்தித்து அழகிரிக்கு ஆதரவு தரும்படி கேட்டிருக்கிறார். இதுகுறித்து கனிமொழி வட்டாரங்கள் கூறுகையில், “கடந்த வியாழன் அன்று மதியம் அழகிரிக்கு நெருக்கமான முன்னாள் எம்.பி. ஒருவர் கனிமொழியைச் சந்தித்து அழகிரிக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரிடம் கனிமொழி, ‘கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் எதுவும் செய்ய வேண்டாம். அண்ணனை பொறுமையாக இருக்கச் சொல்லுங்கள்’ என்று சொன்னார். பிறகு மாலையில் முன்னாள் அமைச்சர் ஒருவர் அழகிரி சார்பாக கனிமொழியைச் சந்தித்துப் பேசினார். அவரிடமும் இதையேதான் கனிமொழி கூறியுள்ளார்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago