அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற காரணம் என்ன?- மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம்

By செய்திப்பிரிவு

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற நேர்ந்ததற்கான காரணம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தி இந்து நிருபருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

மத்தியில் பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற ஒரு மாற்று அரசை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே எங்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த நோக்கத்துக்காக புதுடெல்லியில் நாங்கள் நடத்திய கூட்டத்தில் அதிமுக பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

அதன் அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என நாங்கள் தீர்மானித்தோம். கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசியத் தலைவர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்டிருப்பதாக அறிவித்தார்.

அதன் பிறகு ஜனவரி 5-ம் தேதி அதிமுக பேச்சுவார்த்தை குழுவினர் எங்கள் கட்சித் தலைவர்களுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசினர். அப்போது ஒரு தொகுதி மட்டும் ஒதுக்க முன் வந்தனர். அதனை நாங்கள் ஏற்கவில்லை. அதன் பின்னர் 6 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடந்தும், ஒரு தொகுதி என்றே கடைசி வரை அதிமுகவினர் பேசினர்.

இதற்கிடையே பிப்ரவரி 24-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்த ஜெயலலிதா, இடது சாரி கட்சிகளுடன் கூட்டணி ஏற்படும் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படு வார்கள் என்று கூறினார். பின்னர் 3-ம் தேதி அவர் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்.

இதனையடுத்து கடந்த 3-ம் தேதி ஜெயலலிதாவுக்கு நாங்கள் ஒரு கடிதம் எழுதினோம். “தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. எங்கள் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஆகவே, விரைவாக தொகுதி உடன்பாட்டை முடிக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்தோம்.

இந்நிலையில் ஜனவரி 4-ம் தேதி இரவு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுகவைச் சேர்ந்த 3 பேர் எங்கள் கட்சியின் அலுவலகத்துக்கு வந்தனர். “ஜெயலலிதாவின் பிரச்சாரம் தொடங்கிய 3-ம் தேதிக்கு முன்னதாகவே தொகுதி உடன்பாட்டை நீங்கள் முடித்தி ருக்க வேண்டும்” என்று அவர்கள் எங்களிடம் கூறினர்.

“நாங்கள் தயாராகத்தானே இருந்தோம். ஆனால் ஒரு தொகுதிக்கு மேல் தர இயலாது என நீங்கள்தானே கூறி வந்தீர்கள். அப்போது கூட தொடர்ந்து பேசுவோம் என்றுதானே கூறினீர்கள்” என்று நாங்கள் தெரிவித்தோம். அதனைத் தொடர்ந்து “மகிழ்ச்சியாக ஒன்று சேர்ந்தோம். அதேபோல் மகிழ்ச்சியாக பிரிவோம்” என்று கூறி அவர்கள் விடைபெற்றுச் சென்றனர். ஆக, அதிமுகவின் இத்தகைய அணுகுமுறைதான் கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேற காரணம் என்றார் ராமகிருஷ்ணன்.

“அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்ட போது, வகுப்புவாதத்துக்கு எதிராகவும், கடந்த 10 ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் மற்றும் அந்த அரசின் ஊழல்களுக்கு எதிராகவும் போராடுவது என்பதுதான் எங்கள் கட்சியின் அகில இந்திய நிலைப்பாடு. இதற்கேற்ப தமிழ்நாட்டில் எங்கள் தேர்தல் உத்தியை வகுப்போம்.

இது தொடர்பாக விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சனிக்கிழமை (இன்று) சந்தித்துப் பேச உள்ளதாக அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE