10, 12-ம் வகுப்பு தேர்ச்சி இலக்கு 95%: ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் ஆகியோருடனான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் (எஸ்.எஸ்.ஏ.) பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன், ஆர்.எம்.எஸ்.ஏ. திட்ட இயக்குநர் கே.அறிவொளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக அவர்களை சென்றடைந்ததா என்று ஆய்வு செய்யப்பட்டது. காலாண்டு தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டுகளை விட அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

மேலும், இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி 95 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 6, 7, 8 -ம் வகுப்பு மாணவர்களின் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறனை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் வீரமணி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE