"தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது என்பது யாரை ஏமாற்றும் நாடகம்?" என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 250 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதமரைக் கேட்டுக் கொண்டு வழக்கம் போல முதல்வர் ஜெயலலிதா 7-1-2014 அன்றும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம், அதுபற்றிய தகவல் கிடைத்ததும், முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதி, நாளேடுகளில் வெளியிடச் செய்வதோடு தன்னுடைய கடமை முடிந்து விட்டதெனக் கருதுகிறார்.
முதலைக் கண்ணீர் வடிப்பது, மீனவர் துயர் துடைத்திடப் பயன்படுமா? நான் அறிவுறுத்தியபடி, 7-1-2014 அன்று நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தைச் சந்தித்து, இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் பற்றிய எனது மனக் குமுறல்களை வெளிப்படுத்தியதோடு, பொங்கல் திருநாளுக்கு முன்பாகவாவது மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற எனது வேண்டுகோளையும் வலியுறுத்தி இருக்கிறார்.
ஏற்கெனவே, மீனவர் பிரச்சினைக்காக நாகை மீனவர்களும், பாம்பன் மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது - நாகை மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்த செய்தியை அறிந்த நான், உடனடியாக நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவை நாகைக்கு அனுப்பி, அவர்களின் உண்ணாவிரதத்தை நிறுத்தச் செய்ததோடு, மீனவர் பிரதிநிதிகளை டெல்லிக்கே அழைத்துச் சென்று பிரதமரையும், வெளியுறவுத் துறை அமைச்சரையும் 27-12-2013 அன்றும், 28-12-2013 அன்றும் சந்திக்கச் செய்தேன்.
அப்போது பிரதமர் அவர்கள், 2013 - டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வாக்கில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும், அந்தக் கூட்டம் நடைபெற்றால் பிரச்சினை தீர்ந்து விடும் என்றும் உறுதியளித்தார். மேலும் மத்திய அரசின் சார்பில், இரண்டு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளைச் சந்திக்க வைக்க நாள் குறிப்பிட வேண்டுமென்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் இரு நாட்டு மீனவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான தேதியை தமிழக அரசு முடிவு செய்ய வேண்டுமென்றும், பேச்சுக்குப் பின் பரஸ்பரம் இரு நாட்டு மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். மத்திய அமைச்சர்கள் நாராயணசாமியும், வாசனும் இதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, "இந்திய இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான தேதியை இறுதி செய்யும் விவகாரத்தில் மத்திய அரசுடன் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை" என்று அ.தி.மு.க. அரசு மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
இவையெல்லாம் போக 7-1-2014 அன்று ஆங்கில செய்தி சேனல் ஒன்று "தமிழக மீனவர் பிரச்சினையை வாக்குகள் பெறுவதற்காக ஜெயலலிதா பயன்படுத்திக் கொள்கிறார்" என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தி என்ன தெரியுமா?
"இலங்கைப் பகுதியில் மீன் பிடிப்பதாகச் சொல்லி, தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் திரும்பத் திரும்பக் கைது செடீநுயப்படுகிறார்கள். தற்போது 200 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கடுமையான பிரச்சினையில் பயனற்ற அணுகுமுறையை மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடிப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குறை சொல்லி வருகிறார். ஆனால் அதே நேரத்தில் ஜெயலலிதாவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் காலதாமதம் செய்து வருகிறார். 16-3-2013லிருந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீனவர் பிரச்சினை குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 11 கடிதங்கள் எழுதியிருக்கிறார்.
இந்திய மீனவர் பிரதிநிதிகளும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளும் சந்தித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு தமிழக முதல்வர் ஒத்துழைத்திட வேண்டும் என்று, தான் எழுதிய பெரும்பாலான கடிதங்களில் பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார்.
இரு தரப்பினரும் கலந்து பேசும் கூட்டம் ஒன்றை நடத்துவது, இரு நாட்டு மீனவர்களின் சமூகப் பொருளாதார நல்வாழ்வுக்கும் வாழ்வாதாரப் பாதுகாப்புக்கும் உரிய தீர்வு காண்பதற்கு அடிப்படையாக அமைந்திடும் என்று பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.
எனினும் இரு நாட்டு மீனவர்களும் கலந்து பேசுவது தொடர்பாக சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திலேதான் ஜெயலலிதா எண்ணிப் பார்த்தார். 9-11-2013 அன்று இந்தியப் பிரதமர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்தில், "இரு நாட்டு மீனவர்களும் 2013 டிசம்பர் மாதத்தில் சந்தித்துப் பேசுவதற்கான கூட்டத்தை நடத்துவதற்கு தாங்கள் 20-9-2013 அன்று அனுப்பிய கடிதத்தின் மூலம் அளித்திருக்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
எனினும் ஜெயலலிதா தன்னுடைய கடிதத்தின் மூலம் இந்தியப் பிரதமருக்கு உறுதியளித்தபடி, 2013 டிசம்பர் மாதத்தில், இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெறவே இல்லை. தமிழக அரசு அந்தக் கூட்டத்தை நடத்துவதற்குப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும், அதில் தமிழக அரசும் பங்கெடுத்துக் கொள்வது பற்றியும் ஆலோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இரு நாட்டு மீனவர்களையும் இணைத்து கூட்டம் நடத்துவதாக ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் மூலம் வழங்கிய உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவே இல்லை. மீனவர்கள் தொடர்ந்து துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்"
இவ்வாறு தமிழக மீனவர் பிரச்சினையில் ஜெயலலிதா எந்த அளவுக்குக் காலம் தாழ்த்திக் கபட நாடகம் ஆடுகிறார் என்பதை ஆங்கிலத் தொலைக்காட்சி தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
உண்மை இவ்வாறிருக்க, இதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல், தமிழக மீனவர்களின் முக்கியமான இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு மட்டும் அக்கறை இல்லாமல் இருக்கிறது என்பதைப் போல, மற்றவர் மீது பழி சுமத்தித் தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தோடு, தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது என்பது யாரை ஏமாற்றும் நாடகம்?" என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago