தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பண்ருட்டியை அடுத்த எஸ்.ஏரிப் பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்துக்கு உட்பட்ட எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தில் 1,800 வாக்காளர்கள் உள்ளனர். இந்தக் கிராமத்தின் ஒரு பகுதி சேமக்கோட்டை ஊராட்சியிலும், மற்றொரு பகுதி சிறுவாச்சூர் ஊராட்சியை அடக்கியும் உள்ளது.உள்ளாட்சி தேர்தல்களில் இந்த இரு ஊராட்சிகளை சேர்ந்தவர்களே வெற்றி பெறுகின்றனர்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள், எஸ்.ஏரிப்பாளைய கிராமத்தின் வளர்ச்சியில் போதிய அக்கறை செலுத்தவதில்லை எனவும், நலத் திட்டப் பணிகளையும் மேற்கொள்வதில்லை எனக் குற்றம்சாட்டி வந்த அந்தக் கிராம மக்கள் எஸ்.ஏரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வந்தனர்.

இருப்பினும் தனி ஊராட்சிக்கான நடவடிக்கைகள் ஏதும் அரசு சார்பில் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து எஸ்.ஏரிப் பாளையத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஆட்சியர் அலுலக அலுவலர்களோ தேர்தல் நேரம் என்பதால், கிராம மக்களின் மனுக்களை பெற முடியாது என தெரிவித்தனர். ஆனால் கிராம மக்கள் அதனை ஏற்க மறுத்து அலுவலக வளாகத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் மற்றும் கடலூர் புதுநகர் காவல் துறையினர் கிராம மக்களிடம் சமரச முயற்சி மேற்கொண்டு, கிராமப் பிரதிநிதிகள் 4 பேரை மட்டும் ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுமதித்தினர். அவர் களிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட கடலூர் ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், தேர்தலுக்குப் பிறகு மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE