தேர்தல் வெற்றி: களைகட்டியது சென்னை பா.ஜ.க அலுவலகம்

By செய்திப்பிரிவு

நான்கு மாநிலங்களின் தேர்தல் வெற்றியால், சென்னையிலுள்ள பா.ஜ.க., அலுவலகம் விழாக்கோலம் பூண்டது. காங்கிரஸ் தோல்வியைத் தழுவியிருந்தாலும், புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டதால், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனும் பரபரப்பாக காட்சியளித்தது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில், பா.ஜ.க. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரச்சாரத்தால் இந்த வெற்றி கிடைத்ததாக பா.ஜ.க.வினர் கூறியுள்ளனர்.

தேர்தல் முடிவு வரத் தொடங்கிய தும், தமிழக பா.ஜ.க.வினர் சென்னை தி.நகரிலுள்ள கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் கூடி ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த வெற்றி குறித்து கட்சியின் தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

நாடு முழுவதும் மோடி அலை அடிக்கிறது. இது பா.ஜ.க.வுக்கு வெற்றி அலையாக மாறியுள்ளது. இந்த அலை வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்குப் பின்பும் நீடிக்கும்.

பா.ஜ.க. பல்வேறு சோதனை களுக்கு நடுவில் இந்த இமாலய வெற்றி பெற்றுள்ளது. வெற்றி எண்ணிக்கையில் மட்டுமல்ல, மக்களின் எண்ணங்களும் பா.ஜ.க.வை நோக்கியே உள்ளன என்று அவர் கூறினார்.

இதேபோல், மாநில செயலாளர் வானதி சீனிவாசன் கூறும்போது, ‘காங்கிரஸ் மீதான கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பா.ஜ.க. என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்து, மக்கள் அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களித்துள்ளனர். இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும்’ என்றார்.

இதற்கிடையில், 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்த போதும், தமிழகத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் பரபரப்பாக காட்சியளித்தது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின், கடந்த சனிக்கிழமை இரவு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டதால், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரசின் புதிய மாவட்டத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து தங்கள் நன்றியைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டதற்கு அவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதனால், காங்கிரஸ் அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது.

ஏற்காடு இடைத் தேர்தலில் தி.மு.க. தோல்வியுற்ற நிலையில், அதன் தலைமையகமான அறிவாலயம் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு வழக்கம் போல் பணிகள் நடந்தன. அதேநேரம், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகத்தில் நடந்த கட்சியின் தணிக்கைக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE