தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய புதிய அரசாணை பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து கடந்த 2016 ஜூன் 28-ல் தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணை சட்ட விரோத மானது என்றும் அதை ரத்து செய்து விட்டு, பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்து நேற்று வெளியிடப்பட்டது. நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம் வருமாறு:
தமிழகத்தில் வானிலை ஒழுங்காக இல்லை. பருவமழை பொய்த்து விட்டது. மழைப்பொழிவும் மிகமிகக் குறைந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள அணைகள் எல்லாம் வறண்டு கிடக் கின்றன. காவிரி நதி நீர் பிரச்சினையால் மேட்டூர் அணையும் தண்ணீரின்றி கிடக் கிறது. புல்கூட கிடைக்காமல் கால் நடைகள் பரிதாபமாக இறக்கின்றன. இந்த கடும் வறட்சியால் விவசாயிகள் ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்து வருகின்றனர். அவர்களால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியவில்லை.
அதேநேரம் கொடுத்த கடனை வட்டியுடன் வசூலிப்பதற்காக கூட்டுறவு வங்கிகள், பொதுவுடைமை வங்கிகள், நிதி நிறுவனங்கள் எல்லாம் விவசாயிகளுக்கு எதிராக சட்டப்படியான கடும் நடவடிக் கைகளை எடுத்து வருகின்றன. வங்கி களின் இந்த நெருக்கடியை தாங்கிக் கொள்ள முடியாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மனுதாரர் உள்ளிட்ட விவசாயிகளும் விவசாய அமைப்புகளும் தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து முறையிட்டு போராட்டமும் நடத்தி வருகின்றனர். ஆனால், தமிழக விவசாயிகளின் இந்த கூக்குரல் மத்திய, மாநில அரசுகளின் காதுகளுக்கு இதுவரை கேட்கவில்லை.
கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்தது. அனைத்துக் கட்சிகளும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி அளித்தன. அதன்படி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆளுங் கட்சி, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து வெளியிட்ட அரசாணை யில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக் கும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயி களுக்கு மட்டும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளது.
இவ்வாறு விவசாய நிலத்தின் அளவைக் கொண்டு ஒருதலைபட்ச மாக கடன் தள்ளுபடி வழங்க தமிழக அரசு எப்படி முடிவு செய்தது என்பது தெரியவில்லை. கடன் தள்ளுபடி என்றால், அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். விவசாய பாதிப்பு என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு மட்டும் ஏற்படவில்லை. அனைத்து விவசாயிகளுக்கும்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதில் எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது.
5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள 16 லட்சத்து 94 ஆயிரத்து 145 விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்துள்ளதால் ரூ.5,780 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அனைத்து விவசாயிகளுக்கும் கடனை தள்ளுபடி செய்தால் கூடுதலாக ரூ.1,980 கோடி இழப்பு ஏற்படும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. கடும் நிதி நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவது என்பது அரசுக்கு சிரமமான காரியம் என்ற வாதத்தை ஏற்க முடியாது.
அதேநேரம் தமிழக அரசின் இக்கட்டான நிதி நெருக்கடியை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்கக் கூடாது. தமிழக அரசின் நிதிச் சுமையை மத்திய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும். இதை மத்திய அரசு செய்யும் என நம்புகிறோம்.
தற்போது தமிழகமே வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வறட்சியால் வருமானம் இழந்து பட்டினி கிடக்கும் விவசாயிகளுக்கு கடன் சுமை ஏற்பட்டுள்ளது. விவசாய சமுதாயத்தை காப்பாற்றும் பொறுப்பை மொத்தமாக தமிழக அரசின் தலையில் சுமத்தக் கூடாது. மத்திய அரசும் இதில் பொறுப்பேற்க வேண்டும். இதற்குத் தேவையான நிதியை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
எனவே, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயி களுக்கு மட்டும் கடனை தள்ளுபடி செய்யாமல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அனைத்து பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.
இந்த வழக்கை முடித்து வைப்ப தற்கு முன்பாக அய்யன் திருவள்ளுவர் எழுதிய
‘இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்’ என்ற குறளையும் குறிப்பிட விரும்புகிறோம்.
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்பு டைய தொழிலாளர் பிறரிடம் சென்று இரக்க மாட்டார், தம்மிடம் இரந் தவர்க்கு எதையும் ஒதுக்கி வைக் காமல் கொடுப்பார் என்பதுதான் அக்குறளின் பொருள். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேளாண்மை தொழிலில் செல்வ செழிப்பாக கொடி கட்டிப் பறந்த தமிழக விவசாயிகளின் நிலை தற்போது எப்படி உள்ளது? என்பதை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் இந்த வழக்கைத் தொடர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு மற்றும் வழக்கை திறம்பட நடத்திய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.முத்துகிருஷ்ணன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆகியோருக்கு இந்த நீதிமன்றம் மனமார்ந்த பாராட்டுகளை தெரி வித்துக் கொள்கிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago