கர்நாடக நிறுவனத்தில் வெடிமருந்துகள் வாங்கினேன் - போலீஸ் பக்ருதீன் வாக்குமூலம்

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள தனியார் வெடிமருந்து நிறுவனத்தில் வெடிமருந்துகளை வாங்கியதாக `போலீஸ் பக்ருதீன்’ வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கொலை மற்றும் தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய 3 பேரையும் சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் புத்தூரில் அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து 'ஸ்லரி' என்ற வெடிமருந்தை கைப்பற்றினர். ஸ்லரி என்பது ஜெலட்டின் குச்சிகள் போன்று பயங்கரமாக வெடிக்கும் தன்மையுடையது. இதில் கருப்பு நிற ஸ்லரி, சிவப்பு நிற ஸ்லரி என இரண்டு வகைகள் உள்ளன. கருப்பு நிற ஸ்லரி அதிக சக்தி வாய்ந்தது. தமிழகத்தில் சிவப்பு நிற ஸ்லரி மட்டுமே உண்டு.

ஆந்திர மாநிலம் புத்தூரில் தீவிரவாதிகள் தங்கி இருந்த வீட்டில் இருந்து 48 டியூப்களில் கருப்பு நிற ஸ்லரி, 28 சிவப்பு நிற ஸ்லரி, 8 கிலோ ஸ்லரி ஜெல், 202 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 59 வெடிமருந்து டெட்டனேட்டர்கள், டைமருடன் மேக்னட் டிபன்பாக்ஸ் வெடிகுண்டு ஒன்று, மேக்னட் இல்லாத டிபன் பாக்ஸ் வெடிகுண்டு ஒன்று, 6 பைப் வெடிகுண்டுகள் இவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர்.

போலீஸ் பக்ருதீனை இரண்டாவது முறையாக போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அப்போது வெடிமருந்துகள் வாங்கிய இடம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் பக்ருதீன், ``கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் விஸ்வா நகரில் உள்ள 'டெக்' என்ற தனியார் நிறுவனத்தில் வெடிமருந்துகள் வாங்கினேன்’’ என்றார். 48 கருப்பு ஜெலட்டின் டியூப்களில் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் இருந்தது. இதனால் பக்ருதீன் உண்மையைத்தான் கூறியிருக்கிறார் என்பதை காவல் துறையினர் உறுதி செய்தனர்.

அதைத் தொடர்ந்து அந்நிறுவன அதிகாரிகளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசின் விதிகளை மீறி ஒரு தனி நபருக்கு வெடிமருந்து விற்பனை செய்தது எப்படி? என்று அந்நிறுவனத்தின் அதிகாரிகளிடம் துருவித் துருவி விசாரணை நடந்து வருகிறது. இங்கிருந்து வேறு யாருக்கெல்லாம் வெடிமருந்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆந்திர காவல் துறையினர் தனியாக விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE