அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படும் வி.கே.சசிகலா, இன்றே முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். டிசம்பர் 31-ல் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என சில அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்தபடி தை 12-ம் தேதிக்குள் முதல்வராக சசிகலாவை பதவியேற்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால், ஜல்லிக் கட்டு போராட்டம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் தலைதூக்கியதால் சசிகலா முதல்வராக பொறுப்பேற்கும் தேதி தள்ளிப்போனது.
இதற்கிடையே, பிப்ரவரி 5-ம் தேதி, சசிகலாவை முதல்வராக தேர்வு செய்வதற்கு உகந்த நாளாக ஜோதிடர்கள் கணித்துக் கொடுத் திருப்பதாக சொல்லப்படுகிறது. சசிகலாவுக்கு ராசியான எண் 5 என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து சென்னையில் இன்று மதியம் நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்.
இதைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்துடன் இன்றே அவர் ஆளுநரை சந்திக்கக் கூடும் என அதிமுகவின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘ஞாயிறு மாலை 5.20 மணியுடன் நவமி முடிகிறது.
அதன்பிறகு ஆளுநரை சசிகலா சந்திக்கலாம் என்றாலும் மாலை 6 மணி வரை ராகுகாலம் இருப்பதால் அதன்பிறகே சந்திப்பு இருக்கும். எங்களுக்கு கிடைத்த தகவல்படி ஞாயிற்றுக்கிழமையே சசிகலா முதல்வராக பொறுப்பேற்கலாம். முதல்வராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் 2 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கோப்பில் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது’’ என்றனர்
சசிகலா முதல்வராக பொறுப் பேற்கும்போது செங்கோட்டையன் உள்ளிட்ட சிலரும் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம். அதேபோல, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத் திலும் மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. தலைமைச் செயலாளர் பதவிக்கு நிதித்துறை செயலாளர் சண்முகத்தின் பெயரும் உள்துறை செயலாளர் பதவிக்கு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மை செயலாளரான வெ.இறையன்புவின் பெயரும் அடிபடுகிறது.
பெங்களூரு
கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, பெங்களூருவில் ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:
சென்னையில் இன்று நடக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா, முதல்வராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதிமுகவின் நலனுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் சசிகலா முதல்வராக பொறுப்பேற்பார்.கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும். அப்போது தான் தமிழகம் சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும், அதிமுக சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும் சரியாக கையாள முடியும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு கடிதமும், பொதுச் செயலாளர் சசிகலா ஒரு கடிதமும் அனுப்பினர்.
பன்னீர்செல்வத்தை சந்தித்த மோடி, சசிகலா அனுப்பிய 49 எம்.பி.க்களை சந்திக்கவில்லை. இந்தப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. சசிகலாவிடம் ஆட்சி இருந்தால், பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தே எம்.பி.க்களை சந்தித்து இருப்பார். எனவே. சசிகலா முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago