கடற்கரையில் அழகுபடுத்தும் திட்டங்களை மாநகராட்சி கைவிட வேண்டும்: கடற்கரை வள மையம் வேண்டுகோள்

கடற்கரையை ஆக்கிரமித்து அழகுபடுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என்று கடற்கரை வள மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கடற்கரை வள மையத்தைச் சேர்ந்த நித்தியானந்த ஜெயராமன், கா.சரவணன் ஆகியோர் கூறியதாவது:

கடற்கரையில், அலைகள் எழும் பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது என்று தேசிய கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை விதிகளை மீறி, மாநகராட்சி நிர்வாகம் கடற்கரையோரத்தில் 15 இடங்களில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவுக்கு ஆக்கிரமித்து, கட்டுமானக் கழிவுகளைக் கொட்டி சாலை அமைத்துள்ளது. மேலும் ரூ.100 கோடி செலவில் மெரீனா மற்றும் நீலாங்கரை ஆகிய இரு கடற்கரைகளை அழகுபடுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை செயல்படுத்த மாநில கடற்கரை மண்டல மேலாண்மை குழுமத்தின் அனுமதியையும் பெறவில்லை.

இவ்வாறு விதிகளை மீறி கடற்கரை பகுதியில் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்படுவதால், பேரிடர் காலங்களில் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பான, மேடான பகுதிக்கு கொண்டுசெல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்த அறிக்கையை தயாரித்து மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூரிடமும் புகாராக கொடுத்திருக்கிறோம்.

எனவே கடற்கரை அழகுபடுத்தும் திட்டம் என்ற பெயரில் விதிகளை மீறி கடற்கரையை ஆக்கிரமிப்பதை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். கடற்கரை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்கும் பொறுப்பு மாநகராட்சியிடம் கொடுக்கப்பட்டிருப்பதை மாநில கடற்கரை மண்டல மேலாண்மை குழுமம் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE