கட்சிகள் ஆதரவுடன் கிரண்பேடிக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் நாராயணசாமி மும்முரம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்பதில் ஆளுருக்கு எதிராக தனது தொடர் நடவடிக்கைகளை கட்சிகளுடன் இணைந்து தீவிரமாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளார் முதல்வர் நாராயணசாமி. ஆளுநர் விமர்சித்த தலைமை செயலருக்கு அரண் அமைத்துள்ளார் முதல்வர். அதே நேரத்தில் கிரண்பேடி ஆதரவு அதிகாரிகளுக்கு சட்டப்பேரவையிலிருந்து சம்மன் அனுப்பி அவரை மவுனமாக்கியுள்ளனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றவுடன் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்றவுடன் தொடர் நடவடிக்கைகளை கிரண்பேடி தொடங்கினார்.

அதிகாரிகளுடன் கலந்துரையாடல், தூய்மை பணிகளை பார்வையிடல் என தீவிரமான பணியினை கிரண்பேடி தொடங்கினார். தொடக்கத்தில் இருந்தே மக்கள் பிரதிநிதிகளை அவர் கண்டுகொள்ளவே இல்லை. அத்துடன் மக்களை எளிதாக சந்திக்க ஏற்பாடுகளை செய்து ஆளுநர் மாளிகையை திறந்ததால் அதிக மதிப்பு அவருக்கு மக்களிடத்தில் ஏற்பட்டது.

ஆனால் அவரது பல பணிகள் முழுமையடையவில்லை. தூய்மைப் பணிகளும் முழு தீர்வை அடையவில்லை. தன்னை முன்னிறுத்தும் பணிகளை ஆளுநர் செய்யத் தொடங்கியது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. அதே நேரத்தில் ஏரி தூய்மை பணி, மக்கள் குறை தீர்க்கும் நடவடிக்கைகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது. நாளாக, நாளாக அதுவும் குறையத்தொடங்கியது. எனினும் ஆளுநர் கிரண்பேடி வார நாட்களில் எங்கும் ஆய்வுக்கு செல்ல மாட்டார். சனி, ஞாயிறுகிழமைகளில் காலை நேரத்தில் மட்டுமே தனது ஆய்வுகளை நடத்தி வருகிறார்.

அதே நேரத்தில் முதல்வர், அமைச்சர்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு செய்யத் தொடங்கினர். அவரும் போட்டியாகத் தொடங்கி அதைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவில்லை.

முதல்வர், அமைச்சர்கள் நிதி கோரி டெல்லி சென்ற நிலையில் இவரும் தனியாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை அதே காலத்தில் சந்திக்கத் தொடங்கினர்.

ஆளுநர் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு நிதியை பெற்று தரவில்லை என்று அமைச்சர் கந்தசாமி வெளிப்படையாகவே விமர்சித்தார். ஆனால், ஆளுநரை விமர்சிப்பதை முதல்வர் நாராயணசாமி தவிர்த்தே வந்தார். அதே நேரத்தில் ஆட்சியில் முற்றிலும் தலையிடத் தொடங்கி தனக்கே அதிகாரம் உள்ளதாக கிரண்பேடி உரக்க சொல்லத் தொடங்கினார்.

துறைமுகம் தூர்வாரும் பணி, ஓய்வூதியம் வழங்குவது, அதிகாரிகள் இடமாற்றம் என பல விஷயங்கள் அவர் நேரடியாக தலையிட தொடங்கியதால் பனிப்போர் தீவிரமடைந்தது.

தற்போது நகராட்சி ஆணையர் மாற்றத்தை தடுப்பதன் மூலம் தனது இருப்பை நிருபிக்க ஆளுநர் கிரண்பேடி முயற்சித்தார். ஆனால், சபாநாயகர் வைத்திலிங்கம் ஆணைப்படி முதல்வர் நாராயணசாமி உத்தரவுப்படி நகராட்சி ஆணையர் பொறுப்பாக இயக்குநர் கணேசனை நியமித்து அவருடன் அமைச்சர்களை அனுப்பி ஆய்வு கூட்டத்தையும் நடத்தியுள்ளார் நாராயணசாமி.

தொடர்ந்து ட்விட்டர், வாட்ஸ் அப் ஆகியவற்றில் மும்முரமாக இருந்து அதிகாரம் தொடர்பான சட்ட தகவல்கள், கருத்துகளை அதிகளவில் தெரிவித்து வந்த ஆளுநர் கிரண்பேடி கருத்துகளை வெளியிடுவதை தற்போது குறைத்துள்ளார்.

ஆளுநருக்கு எதிரான தொடர் நடவடிக்கையிலும் முதல்வர் நாராயணசாமி இறங்கியுள்ளார். ஆளுநர் கோப்பினை நிறுத்தி வைப்பது தொடங்கி தலையீடு தொடர்பாக வெளிப்படையாக தற்போது தெரிவிக்கத் தொடங்கியுள்ளார். அடுத்து ஆளுநருக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் பாஜக, பாமக தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்றன. ஆளுநருக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ள அவர் மறந்தும் கூட மத்திய அரசுக்கு எதிராக எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளார். அடுத்து ஆளுநருக்கு எதிராக புகாரை டெல்லி சென்று ஜனாதிபதி, பிரதமரிடம் தர உள்ளனர்.

அரசை கடுமையாக விமர்சித்து வந்த அதிமுகவும் தற்போது காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசுடன் இணைந்து செயல்படும் நிலைக்கும் ஆளுநரின் செயல்பாடு முக்கிய காரணமாகியுள்ளது. எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களில் செல்வம் இவர்களுக்கு ஆதரவு தரத் தொடங்கியுள்ளார்.

ஆணையர் மாற்றம் தொடர்பாக தனது உத்தரவை தலைமை செயலர் மனோஜ் பரிதா நடைமுறைப்படுத்தவில்லை என்ற ஆளுநர் தெரிவித்திருந்தார். சபாநாயகர் ஆணைப்படி முதல்வர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்திய தலைமை செயலர் மனோஜ்பரிதாவை கடுமையாக கிரண்பேடி விமர்சித்து வந்தார். உத்தரவு பிறப்பிக்க கூறியது நான்தான் என்று நாராயணசாமி கூறியவுடன் அதை பற்றி ஆளுநர் பேசுவதில்லை.

அதைத்தொடர்ந்து ஆளுநர் ஆதரவு தெரிவித்து வந்த ஆணையர் சந்திரசேகரன் காத்திருப்பு பட்டியலில்தான் உள்ளார். தான் நியமித்த ஆணையருக்கு யாராவது தொந்தரவு தந்தால் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவையடுத்து அதுபற்றியும் கிரண்பேடி கருத்து தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பேரவை உரிமை மீறல் குழுவினர் ஆளுநருக்கு நெருக்கமான ஆணையராக இருந்த சந்திரசேகரன் மற்றும் துணைநிலை ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 'அதிகளவில் கருத்துகளை தெரிவிக்கும் ஆளுநர் கிரண்பேடி, எதுவும் சொல்லாமல் இருப்பது நல்லது' என்று இவ்விஷயத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர்-முதல்வர் இடையிலான மோதல் தற்போது டெல்லியைப் போன்று புதுச்சேரியிலும் விறுவிறுப்பு கட்டத்தை எட்டத்தொடங்கியுள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்