தமிழகத்தில் அதிமுக ஆட்சி: மீண்டும் முதல்வர் ஆகிறார் ஜெயலலிதா; வலுவான எதிர்க்கட்சியாக திமுக!

By பாரதி ஆனந்த்

இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக தேர்தல் முடிவு வெளியாகிவிட்டது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைகிறது. 6-வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா.

தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அதிகளவு பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரத்து 486 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

தமிழகம் முழுவதும் இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு 8 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி 134 தொகுதிகளையும், திமுக கூட்டணி 98 தொகுதிகளையும் (திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1) வசப்படுத்துகின்றன. | >தமிழக தேர்தல் முடிவுகள் 2016 - முழு நிலவரம் அறிக |

சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 86,474 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளார்.

1984-க்குப் பிறகு..

1984-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் அமோக வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறை முதல்வரானார். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த அவருக்கு ஆதரவாக மக்கள் பெருவாரியாக வாக்குகளை வாரி வழங்கினர். அப்போது அவர் 132 தொகுதிகளில் வெற்றி பெற்றார். அதன் பின்னர், தமிழகத்தில் அதிமுக ஆட்சி, திமுக ஆட்சி என மாறி மாறி இரண்டு கட்சிகளும் ஆட்சிப் பீடத்தில் இருந்து வந்தன.

இந்நிலையில் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வரலாற்றை மீள் பதிவு செய்திருக்கிறது. தொடர்ச்சியாக 2-வது முறையாக ஜெயலலிதா ஆட்சியை தக்க வைத்துள்ளார். தேர்தல் வெற்றி குறித்துப் பேசிய ஜெயலலிதா, "வரலாற்று சிறப்புமிக்க வெற்றி தமிழக மக்களாலேயே சாத்தியமானது" எனக் கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்குப் பின் தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக ஆட்சி செலுத்தும் பெருமையை ஜெயலலிதா தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

'வலுவான எதிர்க்கட்சி'

தமிழக சட்டப்பேரவையில் வலுவான எதிர்க்கட்சியாக திமுக இடம் பிடித்துள்ளது இத்தேர்தலின் மற்றுமொரு சாதனை என்றே கூற வேண்டும். கடந்த 2011-ல் திமுக 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. 2006-ல் அதிமுக கூட்டணி 69 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியாக இருந்தது. 2001-ல் திமுக கூட்டணி 37 இடங்களுடன் எதிர்க்கட்சியாக இருந்தது. அதற்கும் முன்னதாக 1996-ல் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா தோல்வியடைந்தார். ரஜினிகாந்த் திமுகவுக்கு ஆதரவாக செய்த பிரச்சாரம் அத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிமுக பெரும் சரிவை சந்தித்தது.

இப்படி தமிழக சட்டப்பேரவையின் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியாக இருந்த கட்சிகள் சொற்ப அளவிலான தொகுதிகளை மட்டுமே தன் வசம் வைத்திருந்த நிலையில் ஒரு வரலாற்றுச் சாதனை என்று சொல்லும் அளவுக்கு திமுக கூட்டணி இத்தேர்தலில் 98 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இது அத்தனையும் வெற்றியாக மாறும் நிலையில் வலுவான எதிர்க்கட்சி என்ற மற்றுமொரு சாதனையை நிகழ்த்துவது உறுதி.

'கேள்விக்குறியான மூன்றாம் அணி'

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை வலுவான மூன்றாவது அணி என்ற அடையாளத்துடன் களமிறங்கியது தேமுதிக, மதிமுக, விசிக, தமாகா இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று, ஊழலுக்கு எதிரானது என்று தங்கள் கூட்டணியை அடையாளப்படுத்தி முழங்கினர் அக்கூட்டணி தலைவர்கள்.

ஆனால், தேர்தல் முடிவுகள் மூன்றாவது அணி உண்மையிலேயே மாற்று அணியாக தமிழக மக்களிடம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது. 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செலுத்திய திராவிடக் கட்சிகளை அகற்ற வேண்டும் என்ற முனைப்போடு களம் காணும் அணி எப்படியெல்லாம் தங்களை தகுதிப்படுத்தியிருக்க வேண்டும் என்ற மிகப் பெரிய படிப்பினையை கற்றுக் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கூட்டணியில் இருக்கும் கட்சிகளை அதிகரிப்பது மட்டுமே பலம் அல்ல என்ற பாடம் புகட்டப்பட்டிருக்கிறது.

மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது ஆரம்பம் முதலே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மக்களுடனும், ஆண்டவனுடம் தான் கூட்டணி எனச் சொல்லி வந்த விஜயகாந்த் தன்னை முதல்வர் வேட்பாளராக ('கிங்'காக) அறிவிப்பவர்களுடனேயே கூட்டணி என்ற நிலையில் இருந்து சற்றும் தளரவில்லை. விஜயகாந்த் வழிக்குச் சென்று மக்கள் நலக் கூட்டணி அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. வைகோ, நல்லகண்ணு போன்ற மூத்த தலைவர்களும் திருமாவளவன் போன்ற உறுதிமிக்க தலைவர்களும் இருக்கும்போது விஜயகாந்தை ஏன் முதல்வர் வேட்பாளராக அடையாளப்படுத்த வேண்டும் என்ற சலசலப்பே ஒரு சறுக்கல்.

அதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகளும் ம.ந.கூட்டணி மீதான மக்கள் நம்பிக்கையை தளர்த்தியது. தேமுதிகவில் இருந்து அதிருப்தியாளர்கள் விலகி தனிக் கட்சித் தொடங்கியது. மாற்றுக் கூட்டணியாக அறிவிக்கப்பட்ட ஒரு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளார் நிதானமற்று பேசியது. தேர்தல் அதிகாரி அலுவலகம் வரை வந்துவிட்டு தேர்தலில் போட்டியில்லை எனக் கூறி மாற்று வேட்பாளரை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தது என பல்வேறு காரணிகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

சின்னங்களை மட்டுமே பார்த்து வாக்களிக்கும் பெரும்பான்மையான மக்களைக் கொண்டுள்ள தமிழகத்தில் ஒரே சின்னமல்லாது கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சின்னம். மாற்றுக் கூட்டணி ஒரே சின்னத்தில் தங்களை அடையாளப்படுத்தியிருந்தால் மக்களிடம் கூட்டணியை சற்றே வலுவாக கொண்டு சேர்த்திருக்கலாம். இந்தத் தேர்தலில் தமிழகத்தில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க சாத்தியமில்லை என எல்லோருக்குமே தெளிவாக தெரிந்திருந்தாலும், இத்தேர்தல் மாற்றுக் கூட்டணிக்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்திருக்கும். நல்லதோர் வாய்ப்பு வீணாக்கப்பட்டுள்ளது. விஜயகாந்துக்கு இருந்த 'தேவை' இனி அடுத்துவரும் தேர்தலில் இருக்குமா என்பது கேள்விக்குறியே. முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்புடன் களம் கண்ட விஜயகாந்துக்கு அரசியலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

முகவரியை நிலைநாட்டுவதற்கு பதிலாக முகம் தொலைத்துள்ளது.

பாமகவின் சோதனை முயற்சியும் பலனும்..

இத்தேர்தலில் ஆரம்பம் முதலே பாமக ஒரே நிலைப்பாட்டை முன்வைத்தது. யாருடனும் கூட்டணி இல்லை என்பதே அந்த நிலைப்பாடு. அதற்கேற்ப 234 தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் முன்னிறுத்தப்பட்டார். தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே அன்புமணி முனைப்புடன் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி பிரச்சாரம் எவ்வளவு தூரம் பலனை வழங்கியுள்ளது என்பதற்கு தேர்தல் முடிவுகள் ஒரு சாட்சி.

சாதி வாக்குகள் அரசியல் சாதுர்யமா என்பதற்கு ஒரு பதில். பாமகவின் தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும்கூட சாதி அரசியலும் பாமகவும் பிரிக்கப்படாத வரைக்கும் மாற்றமும், முன்னேற்றமும் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்டதே. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் உடுமலை சங்கர் கொலை குறித்த கேள்வியை ராமதாஸ் புறக்கணித்தை மக்கள் வாக்களிக்கும்போது மறக்கவில்லை. மாற்றம், முன்னேற்றமும் தேவை பாமகவுக்கு.

'இலவசம் எனும் வியூகம்'

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கேஸ் அடுப்பு, கிரைண்டர், மிக்ஸி, ஆடு/மாடு என இலவசங்களின் பரிணாம வளர்ச்சி தமிழக அரசியலில் பிரம்மாண்டமானது. இப்போது அது மானிய விலையில் ஸ்கூட்டர் என்ற நிலையில் வளர்ந்து நிற்கிறது.

இந்தத் தேர்தலில், முதன்முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாமக கல்வியும், மருத்துவ சேவையும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. அடுத்ததாக வந்த திமுக தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்பு ஏதும் இல்லை.

எல்லா கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் கடைசியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதிமுக. ஏற்கெனவே, எதிர்பார்க்கப்பட்டது போலவே இலவச அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அம்மா கைபேசி, மகளிருக்கு 50% மானியத்தில் ஸ்கூட்டர் என்ற இலவச அறிவிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், பொருட்கள் அல்ல மக்கள் சேவைகளே இலவசங்களாக வேண்டும் என்று மக்கள் தங்கள் மனநிலையை மாற்றுவது நல்லது.

எடுபட்டதா மதுவிலக்கு அரசியல்?

தேர்தல் நெருங்குவதற்கு முன்னர் ஓராண்டுக்கு முன்னதாகவே பல்வேறு கட்சிகளாலும் கையில் எடுக்கப்பட்டதுதான் மதுவிலக்கு அரசியல். ஆரம்பம் முதல்வே பாமக பூரண மதுவிலக்கு பிரச்சாரம் செய்து வந்த நிலையில் திமுக அதிரடியாக ஆட்சி அமைந்தால் எங்கள் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறியது. ஆனால், அதிமுகவோ படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றது. பூரண மதுவிலக்கு சோதனைகள் அமெரிக்கா முதல் அண்டை மாநிலங்கள் வரை பரவலாக நடைமுறையில் தோல்வி கண்ட நிலையில் பூரண மதுவிலக்கு அரசியல் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை.

தவிடுபொடியான கருத்துக் கணிப்புகள்:

அண்மைகாலமாக, தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கான எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 16 தமிழக தேர்தல் தினத்தன்று மாலை வட இந்திய ஊடகங்கள் எக்ஸிட் போல்ஸ் என்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. அவற்றில் 4 திமுகவுக்கு சாதகமாக இருந்தன. ஒன்று மட்டுமே அதிமுக வெற்றி பெறும் எனக் கணித்திருந்தது. தேர்தலுக்கு முன்னர் பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் நடத்திய கருத்துக் கணிப்புகளும் பெரும்பாலானவை திமுகவுக்கு ஆதரவாகவே இருந்தன. சில இழுபறி நிலை, தொங்கு சட்டசபை என்றெல்லாம் கூட கணித்திருந்தன. ஆனால், கணிப்புகளை தவிடுபொடியாக்கி அதிமுக தனிப் பெருங்கட்சியாக ஆட்சி அமைக்கிறது.

எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு வங்கி?

2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இரவு 8 மணி நிலவரபப்டி அதிமுகவுக்கு 40.8%, திமுகவுக்கு 31.5%, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு 6.5%, பாமகவுக்கு 5.03%, பாஜகவுக்கு 2.9%, தேமுதிகவுக்கு 2.4%, மதிமுகவுக்கு 0.9% வாக்குகள் கிடைத்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்