அமைச்சர் ஜெயபாலுக்கு எதிரான வழக்கில் பாஸ்போர்ட் அதிகாரி பதில்

அமைச்சர் ஜெயபாலுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பாஸ் போர்ட் முறைகேடு வழக்கில் பாஸ்போர்ட் அதிகாரி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தன் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது என்ற உண்மையை மறைத்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் தட்கல் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும், ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பாஸ்போர்ட் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரி திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.கலியமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில் பாண்டியன் பதில் மனு தாக்கல் செய்தார்.

“அமைச்சர் ஜெயபால் தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தனது நிரந்தர முகவரி நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை என்றும், தமிழக அரசு சென்னையில் ஒதுக்கிய அரசு பங்களாவில் தற்போது வசித்து வருவதாகவும் கூறி, அதற்கு ஆதாரமாக அரசு வீடு ஒதுக்கியதற்கான உத்தரவின் நகலை தாக்கல் செய்திருந்தார். பிறந்த தேதியை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் அளித்திருந் தார். மேலும் தன் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என விண்ணப்பத்தில் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப் பட்டது. அதன் பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் அளித்த காவல் துறை விசாரணை அறிக்கையிலும் அவர் மீது வழக்குகள் எதுவும் இல்லை என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் ஜெயபாலுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அந்த உண்மையை மறைத்து அவர் பாஸ்போர்ட் பெற்றிருப்பதாகவும் கூறி இந்த வழக்கின் மனுதாரர் எங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதற்கு விளக்கம் கேட்டு அமைச்சர் ஜெயபாலுக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பினோம். அதற்கு நாகப்பட்டினம் நகர காவல் நிலைய குற்ற வழக்கு ஒன்றில் தவறுதலாக தன்னை சேர்த்திருப்பதாகவும், ஆனால், அந்த வழக்கில் இதுவரை நீதி மன்றத்தில் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், தனக்கு எதிராக எந்த நீதிமன்றமும் கைது வாரண்ட் அல்லது சம்மன் எதுவும் பிறப்பிக்கவில்லை என்றும் அவர் பதிலளித்துள்ளார். பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் எந்த விவரங்களையும் தான் மறைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த சூழலில், இந்த வழக்கினை விசாரித்து தகுதிக்கேற்ப சரியான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று அந்த பதில் மனுவில் பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார். இதனை யடுத்து இந்த வழக்கின் விசா ரணையை ஒரு வார காலத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE