உணவுப் பகுப்பாய்வு கூடங்களில் 50% காலிப்பணியிடம்: தரப்பரிசோதனை செய்வதில் சிக்கல்

By எஸ்.விஜயகுமார்

உணவுப் பொருட்களில் ரசாயனங்கள் கலப்பது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் உணவுப் பகுப்பாய்வு கூடங்களில் 50 சதவீதம் பணியிடங்கள் காலியாக இருப்பதால், உணவுப் பொருட்கள் தர ஆய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மக்களுக்கு கடும் உடல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவில் குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பதும், மேகி நூடுல்ஸ் பாக்கெட்டில் காரீயம் அதிகமாக கலந்திருப்பதும், பிரெட்டில் பொட்டாசியம் புரோமைட் கலந்திருப்பதும் ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. இது, நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கலப்படங்களை கண்டறியக்கூடிய உணவுப் பகுப்பாய்வாளர் பணியிடங்கள் தமிழகத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உணவுப் பகுப்பாய்வு கூட அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் சராசரியாக 5 மாவட்டங்களுக்கு ஒன்று என்ற கணக்கில் சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், நெல்லை ஆகிய 6 இடங்களில் உணவுப் பகுப்பாய்வு கூடங்கள் உள்ளன. இங்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 120 உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு வரும். இந்த மாதிரிகளை 15 நாட்களுக்குள் பரிசோதித்து அறிக்கை தர வேண்டும்.

மேலும், ரூ.1,500 (சேவை வரி ரூ.225) என்ற கட்டணத்துக்கு உணவு உற்பத்தி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் கொடுக்கும் உணவுப் பொருளின் தரம், கலப்படம் ஆகியவற்றையும் பகுப்பாய்வு கூடங்கள் ஆராய்ந்து அறிக்கை தர வேண்டும். ஆனால், பகுப்பாய்வு கூடங்களில் பணியிடங்கள் காலியாக இருப்பதால், தனியார் உணவு மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்வதில்லை. இதனால், உணவு தயாரிப்பாளர்கள் பலர் தர ஆய்வு செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையுள்ளது.

சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்தில் தலைமை அலுவலர் பணியிடமான உணவு பகுப்பாய்வாளர், முதுநிலை பகுப்பாய்வாளர் இரு பணியிடம், இளநிலை பகுப்பாய்வாளர் 4 பணியிடம் என அனைத்துமே காலியாக உள்ளன. இதனால், சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எடுக்கப்படும் உணவு மாதிரிகள் அனைத்தும் தஞ்சாவூர் பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்படுகின்றன.

அங்கு 3 முதுநிலை பகுப்பாய்வாளர்களில் 2 இடங்கள் காலியாக உள்ளன. 5 இளநிலை பகுப்பாய்வாளர்களில் 3 இடங்கள் காலியாக உள்ளன. மதுரை மண்டல பகுப்பாய்வு கூடத்தில் உணவு பகுப்பாய்வாளர் பணியிடம் காலியாக உள்ளன. மேலும், முதுநிலை பகுப்பாய்வாளர்களில் மூன்று பணியிடத்தில் 1 பணியிடமும், 5 இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்தில் 5-ம் காலியாக உள்ளன.

நெல்லை பாளையங்கோட்டை யில் உள்ள பகுப்பாய்வு கூடத்தின் உணவு பகுப்பாய்வாளர், மதுரை யையும் கூடுதலாக கவனித்து வருகிறார். மேலும், முதுநிலை பகுப்பாய்வாளர்களில் 3 பணியிடத் தில் 2 இடம் காலியாக உள்ளன. கோவை பகுப்பாய்வு கூடத்தில் உணவு பகுப்பாய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இங்கு 4 முதுநிலை பகுப்பாய்வாளர்களில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அந்த ஒருவரும் உணவு பகுப்பாய்வாளராக கூடுதல் பொறுப்பையும் கவனித்து வருகிறார்.

சென்னை பகுப்பாய்வு கூடத்தில் ஓரளவு பணியாளர்கள் உள்ளனர். எனினும், அங்கு துணை உணவு பகுப்பாய்வாளர் பணியிடம் காலியாகவும், முதுநிலை பகுப்பாய்வாளர்களில் 8 பணியிடங்களில் 4 இடங்கள் காலியாகவும், இளநிலை பகுப்பாய்வாளர்களில் 13 பணியிடங்களில் 4 இடங்கள் காலியாகவும் உள்ளன.

மேலும், பகுப்பாய்வு கூடங்களில் பழமையான கட்டமைப்பு வசதிகளே உள்ளது. இது தமிழகம் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் இந்நிலை நீடிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த துறையில் கவனம் செலுத்தாமல் இருப்பதாக, தேசிய அளவிலான பகுப்பாய்வாளர் சங்கம் மத்திய அரசிடம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியும் நடவடிக்கை இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்