சென்னை அருகே திருமழிசையில் துணைநகரம் அமைப்பதற்கான சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் ரூ.70 கோடியில் 70 சதவீதம் முடிந்துவிட்டன.
சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு புறநகர் பகுதியில் துணைநகரம் (சாட்டிலைட் சிட்டி) உருவாக்க அரசு திட்டமிட்டது. அதன்படி, சென்னையில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருமழிசையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 311.05 ஏக்கரில் திருமழிசை துணைநகரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான சாலைகள், தெருவிளக்குகள், பாலங்கள், தரைமட்டத் தொட்டிகள், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் கால்வாய் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
துணை நகரத்துக்கு அணுகு சாலை அமைப்பதற்காக தனியாரிடம் இருந்து 12.87 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. அந்த நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு ஒரு சென்ட்டுக்கு (436 சதுரஅடி) ரூ.6 ஆயிரம் வீதம் நஷ்டஈடு வழங்கப்பட்டது. அத்தொகையை கூடுதலாக வழங்கக் கோரி சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கூடுதல் தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், அதனை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே, “பூந்தமல்லி தாலுகாவில் உள்ள செம்பரம் பாக்கம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், வெள்ளவேடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இடத்தில் திருமழிசை துணை நகரம் அமைப்பதற்காக முதல் கட்டமாக 120 ஏக்கரில் மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. 100 அடி மற்றும் 60 அடி அகல சாலை அமைத்தல், தெரு விளக்குகள், பாலங்கள், தரைமட்டத் தொட்டிகள், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் கால்வாய் உள்ளிட்டவை வேகமாக அமைக்கப்படுகின்றன. நுழைவு வாயில் பகுதியில் 120 அடி அகலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.70 கோடியில் 70 சதவீத மேம்பாட்டுப் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 30 சதவீத பணிகள் அடுத்த மூன்று மாதங்களில் முடிக்கப்படும். வர்த்தகப் பயன்பாட்டுக்காக மட்டும் 20 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஷாப்பிங் மால், தகவல் தொழில்நுட்ப நிறுவனம், வங்கி உள்ளிட்டவை இடம்பெறும்” என்று வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
துணைநகரத்தின் மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்ததும், பகுதி பகுதியாக 19 மாடிகளுடன் 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். தனியார் கட்டுநர்களுடன் வீட்டு வசதி வாரியம் இணைந்து இந்த கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன. ஒப்பந்தப்படி 60 சதவீத இடத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் வீட்டு வசதி வாரியத்துக்கும், 40 சதவீத இடத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் தனியார் நிறுவனத்துக்கும் கிடைக்கும்.
பின்னர், வீட்டு வசதி வாரியத்துக்கு கிடைக்கும் வீடுகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். 2019-ம் ஆண்டு இறுதிக்குள் அடுக்குமாடி குடியிருப்புகள் பகுதி பகுதியாக கட்டி முடித்து நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு விற்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago