அமைச்சர் ராமலிங்கத்தின் மீது வீட்டை அபகரித்ததாக போலீசில் புகார்

By செய்திப்பிரிவு

விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் மீது, வீட்டை அபகரித்ததாக, முதியவர் ஒருவர் போலீஸ் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் 46 புதூர், கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் ஈரோடு எஸ்.பி. பொன்னியிடம் அளித்த புகார் மனு:

எனக்கு, 46 புதூர் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில், 3232 சதுர அடி அளவில் வீடு உள்ளது. இந்த வீட்டை மிரட்டி வாங்குவதற்காக, அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் அடியாட்கள் செந்தில்ராஜன் மற்றும் புதூர் ஊராட்சித் தலைவர் பிரகாஷ் ஆகியோர் என்னை காரில் கடத்திச் சென்று, செந்தில்ராஜனின் வீட்டில் அடைத்து வைத்தனர். பின்பு, அமைச்சர் ராமலிங்கம் அங்கு வந்து, ‘நான் சொல்லும் நபருக்கு, உனது வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டு, நான் கொடுப்பதை வாங்கிக்கொண்டு, எங்காவது ஓடி விடு. இல்லாவிட்டால் நீ உயிரோடு இருக்க மாட்டாய்’ என மிரட்டினார்.

பயந்துபோன நான், அவர் சொல்வதுபோல செய்வதாகக் கூறினேன். பின்பு, ராமலிங்கம் சொன்னதன் பேரில், என்னை அவல்பூந்துறை பதிவாளர் அலுவலகத்துக்கு காரில் அடைத்து அழைத்துச் சென்றனர். என்னை காருக்குள் உட்காரவைத்து, எவ்வித பணமும் கொடுக்காமல், எனது வீட்டை கிரயமாக பெற்றனர். எனது கையெழுத்தை ஒரு வெற்றுப்பத்திரத்திலும் வாங்கிக் கொண்டனர். அதன்பின், அமைச்சர் ராமலிங்கம் கூறியபடி, என்னை செந்தில்ராஜன் வீட்டில் மூன்று மாதம் அடைத்து வைத்தனர். தினமும் அடித்து, உதைத்து எனக்கு உயிர்பயம் ஏற்படுத்தினர். என்னை கொலை செய்யவும் முயன்றனர். ஒரு கட்டத்தில் அங்கிருந்து நான் தப்பி வந்து விட்டேன்.

இதற்கு முன், 2010-ம் ஆண்டு, எனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை, காசிபாளையம் சுப்பிரமணி, வெங்கட்டு, மோகன், லட்சுமணக்குமார், வெங்கடேஸ்வரன், சங்கர் ஆகியோர் தாங்கள் வாங்கிக் கொள்வதாகக் கூறி, அவல்பூந்துறை பதிவுத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என் கையெழுத்தை பெற்றுக் கொண்டு, பணத்தை வீட்டில் வந்து தருவதாகக் கூறினர். ஆனால், இதுவரையில் எனக்கு பணம் தரவில்லை. பணம் கேட்டால், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

எனது வீடு, நிலம் இவற்றை சட்டவிரோதமாக அபகரித்துக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துசாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

அவர் புகார் அளிக்க வந்தபோது, தனது சகோதரி சிவகாமியையும் அழைத்து வந்திருந்தார். அவர் கூறுகையில், “எங்களின் வீடு மற்றும் நிலத்தின் மதிப்பு 7 கோடி ரூபாய். இவற்றை சட்டவிரோதமாக அபகரித்து விட்டனர். கடந்த 2010-ம் ஆண்டு நிலத்தையும், கடந்த மே மாதம் வீட்டையும் மிரட்டி கிரையம் செய்து வாங்கியுள்ளனர். இது தொடர்பாக, மொடக்குறிச்சி போலீசாரிடம் புகார் கொடுத்தபோது அவர்கள் அதனை ஏற்கவில்லை. எனது சகோதரரை மூன்று மாதங்களாக காணாத நிலையில், நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தேன். அதன் மூலமாகத்தான் அவர் உயிரோடு கிடைத்துள்ளார்” என்றார்.

இந்த புகார் குறித்து, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அந்த நபர் யாரென்று எனக்கு தெரியாது. நான் இதுவரை அவரைப் பார்த்ததில்லை” என்று தெரிவித்தார்.

இந்த புகார் தொடர்பாக, டி.எஸ்.பி. ஒருவர் விசாரணை நடத்த எஸ்.பி. பொன்னி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்