17 வயதுக்குட்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2017-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே அடிக்கடி களைகட்டும் கால்பந்து திருவிழா 2017-ல் இந்தியாவில் நடைபெறவிருப்பதால் இங்குள்ள ரசிகர்கள் அனைவரும் அதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இந்தப் போட்டியை நடத்துவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள புது டெல்லி, புணே, கோவா, மும்பை, பெங்களூர், கொச்சி, குவாஹாட்டி, கொல்கத்தா ஆகிய 8 நகரங்களில் உள்ள மைதானங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்தி முடித்துள்ளது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) குழு.
ஆனால் சென்னையில் உள்ள 40 ஆயிரம் இருக்கைகளுடன் கூடிய ஜவஹர்லால் நேரு மைதானம் கால்பந்து போட்டிக்கான பிரத்யேகமான மைதானமாகத் திகழ்ந்தாலும் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு அதற்கு கிடைக்கவில்லை. இந்த நேரு மைதானம்தான் இந்தியாவிலேயே தலைசிறந்த மைதானம் என கூறப்படுகிறது.
கால்பந்து சங்கத்தின் மீது குற்றச்சாட்டு
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு ஒரு மைதானத்தில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என பிபா குறிப்பிட்டுள்ளதோ, அவையனைத்தும் நேரு மைதானத்தில் இருந்தபோதும்கூட உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை சென்னை இழந்ததற்கு தமிழ்நாடு கால்பந்து சங்கம்தான் காரணம் என கால்பந்து வீரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கால்பந்து சங்கத்தின் கோஷ்டி பூசல் காரணமாக, நாங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது உலகக் கோப்பையை ரசிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளோம் என கால்பந்து வீரர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பெயரைத் தெரிவிக்க விரும்பாத கால்பந்து சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “உலகக் கோப்பை போட்டிக்கான மைதானங்களை இறுதி செய்வதற்கு முன்னதாக, உலகக் கோப்பை போட்டியை நடத்த விரும்பும் சங்கங்கள், அது தொடர்பாக எங்களுக்குத் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டு அனைத்து மாநில சங்கங்களுக்கும் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் கடிதம் எழுதியது.
ஆனால் அந்த நேரத்தில் கோஷ்டி பூசல் காரணமாக தமிழ்நாடு கால்பந்து சங்க அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. அதனால் தமிழ்நாடு கால்பந்து சங்கம், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு உரிய பதில் அளிக்கவில்லை. அதனால்தான் உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோனது. கோஷ்டி பூசல் பிரச்சினை தீர்ந்தபிறகு உலகக் கோப்பை போட்டியை சென்னைக்குக் கொண்டுவர தமிழ்நாடு கால்பந்து சங்கம் முயற்சி எடுத்ததா என தெரியவில்லை” என்றார்.
பதில் இல்லை
இது தொடர்பாக தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவர் கிளிட்டஸ் பாபு, செயலாளர் ரவிக்குமார் டேவிட் ஆகியோரின் கருத்தை கேட்க தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்கள் இருவரும் அழைப்பை ஏற்கவில்லை.
விருந்தாக அமையும்
இந்திய கால்பந்து அணிக்காக 9 ஆண்டுகள் விளையாடி வரும், இந்திய ஜூனியர் அணி, 23 வயதுக்குட்பட்டோருக்கான அணி, தமிழக சந்தோஷ் டிராபி ஆகியவற்றுக்கு பயிற்சியாளராக இருந்தவருமான சபீர் பாஷாவிடம் கேட்டபோது, அவர் கூறியது:
17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றால் தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.
இதுபோன்ற பெரிய போட்டிகள் இந்தியாவில் எப்போதாவதுதான் நடக்கிறது. அதில் ஒன்றிரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்றால் அது இங்குள்ள ரசிகர்களுக்கு மிகப்பெரிய பாக்கியமாக அமையும்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு சென்னையில் உகந்த சூழல் இருக்கிறது. இங்குள்ள சர்வதேச தரமிக்க ஜவஹர்லால் நேரு மைதானத்துக்கு இணையான மைதானம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை.
எனவே உலகக் கோப்பை போட்டியின் ஒரு சில ஆட்டங்களை நடத்தும் வாய்ப்பை சென்னைக்கு வழங்குவதற்கு இந்திய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் கால்பந்து ரசிகர்கள் அதிகம். சமீபத்தில் நடந்த சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி தகுதிச்சுற்றின்போதுகூட அதிக அளவில் ரசிகர்கள் வந்திருந்தனர். அப்படியிருக்கையில் இங்கு உலகக் கோப்பை போட்டியை நடத்தினால் மைதானமே நிரம்பி வழியும் அளவுக்கு ரசிகர்கள் வருவார்கள்.
இங்கு போட்டி நடைபெறும்போது இளைஞர்களிடையே கால்பந்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படும். தமிழகத்தில் பள்ளிகள் அளவில் எடுத்துக் கொண்டால் பெரும்பாலான மாணவர்கள் கால்பந்துக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள். பள்ளிகள் அளவிலான போட்டியில் ஏராளமான அணிகள் பங்கேற்கின்றன.
அதனால் இங்கு உலகக் கோப்பை போட்டியை நடத்தும்போது அது ஒரு சாதகமான விஷயமாக அமையும். தமிழக கால்பந்து ரசிகர்களும் அதற்கு அமோக வரவேற்பு கொடுப்பார்கள்” என்றார்.
உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டதால் நாங்கள் அனைவரும் வருத்தமடைந்ததோடு நின்றுவிட்டோம். ஆனால் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப், உலகக் கோப்பை போட்டியை மீண்டும் சென்னைக்கு கொண்டு வருவதற்காக கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.
இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டால் நிச்சயம் உலகக் கோப்பை போட்டியை சென்னைக்கு கொண்டு வரமுடியும். உலக செஸ், உலகக் கோப்பை கபடி என விளையாட்டுத் துறைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து வரும் முதல்வர், உலகக் கோப்பை கால்பந்து போட்டியை மீண்டும் சென்னைக்கு கொண்டு வர முயற்சி எடுப்பார் என நம்பிக்கையில் இருக்கிறோம் என கால்பந்து ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கையெழுத்து இயக்கம்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் சில ஆட்டங்களை சென்னையில் நடத்த வலியுறுத்தி சென்னையைச் சேர்ந்த நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் ரோஹித் ரமேஷ் முயற்சி எடுத்துள்ளார்.
அதற்காக கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ள நேதாஜி ஸ்போர்ட் கிளப், தனது அறிக்கையில் ‘FIFA’ குறிப்பிட்டிருக்கும் அனைத்து வசதிகளும் சென்னை நேரு மைதானத்தில் உள்ளது.
இதுதவிர நேரு கோப்பை, தெற்காசிய விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட ஏராளமான சர்வதேச போட்டிகளை நடத்தியுள்ள சென்னைக்கு உலகக் கோப்பை வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது வருத்தமூட்டும் செயலாகும்.
உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்ததற்காக யார் மீதும் குற்றம்சாட்ட இந்த கிளப் விரும்பவில்லை. உலகக் கோப்பை போட்டியை சென்னையில் நடத்தும் வாய்ப்பை நாம் தவற விட்டுவிடக்கூடாது என தமிழக அரசுக்கும், தமிழக கால்பந்து ரசிகர்களுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
தமிழகத்தில் உலகக் கோப்பை போட்டியின் சில ஆட்டங்களை நடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக அனைத்து கால்பந்து ரசிகர்களும் http://t.co/fgFFcAixlU என்ற இணையதளத்தில் தங்களின் ஆதரவை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago