ஓய்வூதிய பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை: ஓய்வூதியர் நலச்சங்க நிர்வாகிகள் தகவல்

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பென்ஷன் தொகையை உயர்த்தி தரக்கோரி, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர்.

தொழிலாளர் சேம நல நிதியின் மூலம், அரசு மற்றும் தனியார் துறைகளில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு அறிவித்தது. ஆனால், அறிவித்தபடி காங்கிரஸ் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. இந்நிலையில், மத்தியில் பதவி ஏற்றுள்ள பாரதிய ஜனதா அரசு அனைவருக்கும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது.

ஆனால், அறிவித்தபடி அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே முழு பென்ஷன் தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அறிவித்த தொகையை விட குறைவாகவே வழங்கியது. இதைக் கண்டித்து, ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் சார்பில் அண்மையில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தொழிலாளர் சேம நல நிதி மூலம், அனைவருக்கும் ரூ.6,500 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, ஓய்வூதியதாரர்கள் நலச்சங்கத்தின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர். இக்குழுவில் தமிழகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் டெல்லியில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் இபிஎப் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து, பென்ஷன் தொகையை உயர்த்தி தருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இத்தகவலை, அகில இந்திய ஓய்வூதியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் மோகன்ராம் ‘தி இந்து’ விடம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE