கடற்கரை மற்றும் ஆற்று மணலில் கிடைக்கும் தாது மணல் கனிமங்களான கார்னெட், சிலி மனைட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் உள்ளிட்டவை கள் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களில் விதிகளை மீறி வெட்டிக் கடத்தப்படுவதாக காலம் காலமாக புகார்கள் உண்டு.
ஆனால், இந்த கனிமச் சுரண்டலில் பெரும் பண முதலைகள் சம்பந்தப்பட்டிருப்பதாலும், இங்கிருந்த அதிகாரிகள் சுரண்டலுக்கு உறுதுணையாக இருந்ததாலும் நடவடிக்கை ஏதும் இல்லாமல் இருந்தது.
அரசின் கவனம் மேலூர் கிரானைட் குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடுத்து, தாது மணல் குவாரி முறைகேடுகள் பக்கமும் கவனம் செலுத்தினார் தமிழக முதல்வர். அரசு இதில் கவனம் செலுத்துகிறது என்றதுமே நிலைமைகள் மாற ஆரம்பித்தன.
கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி, தாது மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரே அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாது மணல் குவாரிகளில் நடந்திருக்கும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக வருவாய்த் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது தமிழக அரசு.
அரசின் உத்தரவுப்படி ஒரே மாதத்தில் விசாரணைகளை நடத்திமுடித்த விசாரணைக் குழு, செப்டம்பர் 17-ம் தேதி அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து தூத்துக்குடி, நெல்லை, மதுரை மாவட்டங்களில் செயல்பட்டுவந்த தாது மணல் குவாரிகள் உடனடியாக முடக்கி வைக்கப்பட்டன.
இதன் தொடர் நடவடிக்கையாக தற்போது, தாது மணல் சுரண்டலை தடுக்க புதிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். இதையடுத்து, தாது மணல் சுரண்டல் தொடர்பாக அரசு, அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது.
மதுரை கிரானைட் ஊழலில் தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கற்களை வெட்டி எடுத்ததாக அடுக்கடுக்காக புகார்கள் குவிந்தன. இதன் அடிப்படையில் பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் முதலாளிகள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செயப்பட்டு அவர்கள் கைதும் செய்யப்பட்டார்கள்.
இதேபோல் தற்போது ககன் தீப்சிங் பேடி நடத்திய விசாரணையிலும், கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் வைகுண்டராஜன் உள்ளிட்ட தாது மணல் குவாரி உரிமையாளர்கள் மீது புகார்களை கொடுத்தார்கள்.
வாழ்வாதாரம் பாதிக்குமா?
தாது மணல் குவாரிகளை நிறுத்திவிட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குவாரி தொழிலாளர்களும் தங்களின் தரப்பிலிருந்து மனுக்களைக் கொடுத்தார்கள். புகார்களின் உண்மைத் தன்மை குறித்தும் அது தொடர்பாக முறைப்படி வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.
சமூக ஆர்வலர்களின் நிலை
தாது மணல் கொள்ளைக்கு எதிராகக் களத்தில் நிற்கும் சமூக ஆர்வலர்களோ, "குளத்தூரில் விதிமுறைகளை மீறி தாது மணலை சுரண்டி இருப்பது குறித்து, அந்தப் பகுதி வி.ஏ.ஓ. போலீஸில் இரண்டு மாதங்களுக்கு முன்பே புகார் கொடுத்திருக்கிறார். மூன்று மாதங்கள் விசாரணை நடத்தினாலும் முறைகேடுகளின் முழு பரிமாணத்தையும் அறிய முடியாது. ஆனால், ககன்தீப் சிங் பேடி குழு, மூன்று நாட்கள் மட்டுமே விசாரணை நடத்தி இருக்கிறது. “தாது மணல் சுரண்டலைத் தடுப்பேன்…" என்று முதல்வர் சொல்லி இருப்பது சற்றே ஆறுதலாக இருக்கிறது. தாது" மணல் கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையும் என்கிறார்கள்.