கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மதுரை வந்த மு.க.அழகிரிக்கு தாரை தப்பட்டை முழங்க ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர்.
தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் கடந்த 24-ம் தேதி தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி, ஞாயிற்றுக்கிழமை மாலை விமானம் மூலம் மதுரை திரும்பினார். ‘சஸ்பெண்டாகி முதன்முறையாக மதுரை வந்த அழகிரிக்கு வரவேற் பளிப்பதற்காக அவரது ஆதர வாளர்கள் விமான நிலையத்தில் விமானம் வருகைக்கு ஒரு மணி நேரத்துக்கும் முன்னதாகவே திரண்டனர்.
அவர்கள் விசில் அடிப்பதும், கோஷமிடுவதுமாக இருந்தனர். சிலர் இரு சக்கர வாகனத்தில் நின்றபடி வலம் வந்தனர். அதை போலீஸார் கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. விமானம் தரையிறங் கையிலேயே, ‘அஞ்சாநெஞ்சன் அழகிரி வாழ்க’ என்றும், சிலர் ‘கலைஞர் வாழ்க’ என்றும் கோஷமிட்டனர்.
6.40 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து தன் மனைவி காந்தி அழகிரியுடன் வெளியே வந்த அழகிரிக்கு தொண்டர்கள் மாலை, சால்வை அணிவித்து தாரை தப்பட்டை முழங்க வரவேற்பளித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவரை 300 இருசக்கர வாகனங்கள், 100 கார்கள் புடை சூழ ஊர்வலமாக அழைத்து வந்தனர் ஆதரவாளர்கள். வழிநெடுகிலும் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. 10 பேர் நின்று வரவேற்பளித்தாலும், அங்கு நின்று அவர்கள் தரும் பொன்னாடையை வாங்கிய பின்னரே அழகிரி புறப்பட்டார்.
இதனால், ஆங்காங்கே போக்கு வரத்து ஸ்தம்பித்தது. நேரம் ஆக ஆக அவருடன் வந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அந்தச் சாலையில் வேறு வாகனங்களே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி, விசில் அடித்தபடி வந்த ஆதரவாளர்களால் பொதுமக்கள் மிரண்டனர். வில்லாபுரத்தில் இரு சக்கர வானத்தின் மீது ஆதரவாளர்களின் கார் மோதியது.
இவ்வளவு களேபரங்கள் நடந்தபோதிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ, பாதுகாப்பு பணிக்கோ போலீஸார் யாரும் வரவில்லை. அழகிரி வீடு அருகே திரும்பும் சாலையில் மட்டும் சில போலீஸார் நின்றபடி, ஊர்வலத்தையும், அவர்களது செயல்களையும் வீடியோவில் பதிவு செய்தனர். ஊர்வலம் மெல்ல நகர்ந்ததால், அழகிரி தன் வீடு வந்து சேர இரவு 7.40 மணி ஆகிவிட்டது. போலீஸார் பதிந்த வீடியோ ஆதாரங்களைக் கொண்டு, அழகிரி ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பி.எம்.மன்னன், உதயகுமார், முபாரக் மந்திரி ஆகியோர் தலைமையில் சுமார் ஆயிரம் பேரும், தேனியில் இருந்து (சமீபத்தில் இறந்த) கம்பம் நகரச் செயலர் ஈஸ்வரனின் மருமகன் கம்பம் நகர் இளைஞரணி அமைப்பாளர் கராத்தே ராமகிருஷ்ணன், தேனி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வீரராகவன், திருச்சியில் இருந்து ரங்கம் ரெங்கநாதர் கோயில் முன்னாள் அறங்காவல் குழுத் தலைவர் வெங்கடாச்சலம் ஆகியோர் தலைமையில் சுமார் 300 பேரும் வந்திருந்தனர்.
அவர்கள் கூறுகையில், “இது வெறும் சாம்பிள்தான். பிறந்த நாளன்று இன்னும் அதிக வாகனங்களில் வந்து மதுரையைக் குலுங்க வைப்போம்” என்றனர்.
ஆரவாரத்துடன் பிறந்த நாளுக்கு வாங்க!
மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரி அளித்த பேட்டி:
இங்கு குவிந்துள்ள தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
நன்றி!
வழக்கம்போல இந்த ஆண்டும் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெறுமா?
திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். ஏழை, எளிய மக் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தொண்டர்களை சந்திப்பேன்.
பிறந்த நாள் விழாவில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுமா?
அதை இப்போது சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வீட்டுக்கு எதிரே உள்ள தன் அலுவலகத்துக்குள் வந்த அழகிரி அங்கு கூட்டத்தினர் மத்தியில் பேசியபோது, “என் பிறந்த நாளான 30ம் தேதியன்று இன்று வந்ததைவிட இன்னும் சிறப்பான ஆதரவாரத்துடன் வாங்க. அதுவரையில் அமைதி யாக இருப்போம். வெற்றி பெறு வோம்” என்றார்.
பின்னர் பேசிய மன்னன், “எல்லோரையும் அண்ணன் கலைந்து போகச் சொல்விட்டார். ஜன. 30-ம் தேதி காலையில் எல்லாரும் இங்கு வாங்க. வரும்போது அந்தந்தப் பகுதியில் இருந்து ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு வாங்க” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago