கடந்த இரண்டரை ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரியம் இதுவரை புதுப்பிக்கப்படாமல், ஒருங்கிணைப்புக்குழு செயல்படாமல் இருக்கின்றது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
டிசம்பர் 3 - உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி அவர் வெளியிட்ட செய்தியில், "செங்காந்தள்தமலர் பூத்துக் குலுங்கும் கார்த்திகை மாதம் 17-ம் நாள் 3.12.2013 உலக மாற்றுத் திறனாளிகள் தினம். கார் இருள் விலகி, விடியலைத் தரிசித்து சமூகத்தில் சகமனிதர்களைப் போன்று சுயமாகவும், சுயமரியாதையோடும் வாழ்க்கை அமைந்திட, மனித நேயத்துடன் நாம் இணைந்து பணியாற்றினால் சிறிய செயல்கள் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் மட்டும் பல்வேறு உடல் உறுப்புக் குறைபாடுகளுடன் கூடிய சுமார் 20 இருபது லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றார்கள்.
நீர், நிலம், காற்று நஞ்சாகி சுற்றுச்சூழல் மாசுபட்டு, பிறவி ஊனம் உருவாக அரசுகளும் ஒரு காரணமாக அமைகின்றது. உலக பொது மன்றம் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த உலக நாடுகளைப் பணித்தது.
அவர்களை அக்கறையுடன் கையாளாமல், பாராமுகத்துடன் இருப்பதால், வாழ்க்கையின் எல்லா நிலையிலும் எதிர்நீச்சல் போட்டு போராடும் போர்க்களமாகவே உள்ளது. மத்திய மாநில அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சட்டப்படிப் போராடிப் பெற்ற மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு இன்னும் கானல் நீராகவே உள்ளது. இது மிகப் பெரிய அநீதி.
விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கின்ற மாற்றுத் திறனாளிகளை தேர்வு செய்து பயிற்சிகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு, தாமதம் இன்றி திருமண உதவித்தொகை வழங்கி அரசு வேலை வாய்ப்பு, இலவச வீடுகள் வழங்க வேண்டும்.
தேசிய சுயவேலை வாய்ப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கட்ட வேண்டிய 5 சதவிகித பங்குத் தொகையை, மத்திய மாநில அரசுகள் பொறுப்பு ஏற்றுக் கட்டி சுயதொழில் செய்திட ஊக்குவிக்க வேண்டும். ஆனால் ஊழல் நடைபெறாத துறைகளே இல்லை என்கின்ற அளவில் ஊழல் மலிந்த மத்திய காங்கிரஸ் அரசின் வெளிவிவகாரத் துறையின் அமைச்சர், சிங்களவனின் கைப்பாவையாக விளங்கும் சல்மான் குர்ஷித், தன் குடும்பத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கிய நிதியைக் கோடிக் கணக்கில் கையாடல் செய்ததை இவர்களது கோர முகத்திரையை, ஊடகங்கள் கிழித்து எறிந்தன.
தமிழ்நாட்டில் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க கையறு நிலையில் நீதி கேட்டுப் போராடிய மாற்றுத் திறனாளிகள் மீது போடப்பட்ட வழக்குகளை, மனிதாபிமான அடிப்படையில் திரும்ப பெற தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
நிலவிலும் வான் மண்டலத்திலும் சாகசங்கள் புரியும் நாம், மாற்றுத் திறனாளிகளை மனித நேயத்துடன் கையாள்வதில் 25 ஆண்டுகள் பின்தங்கி உள்ளோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
கடந்த இரண்டரை ஆண்டுகால அண்ணா திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரியம் இதுவரை புதுப்பிக்கப்படாமல், ஒருங்கிணைப்புக்குழு செயல்படாமல் இருக்கின்றது.
இந்த ஆட்சி, மாற்றுத் திறனாளிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுகிறது என்பதற்கு சாட்சி, டிசம்பர் 3 'உலக மாற்றுத் திறனாளிகள்' தினத்தை ஏற்காடு இடைத்தேர்தலுக்காக டிசம்பர் 5-க்கு மாற்றி வைத்து இருக்கின்றது. அரசின் மெத்தனப்போக்கைக் காட்டுகிறது.
துயரச் சிலுவைகளைத் தூக்கிச் சுமக்கின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இன்னும் இளைப்பாறுதல் கிடைக்கவில்லை. அவர்களும், சக மனிதர்களைப் போன்று அனைத்து உரிமைகளும் பெறும் வரை மறுமலர்ச்சி தி.மு.க. தோள் கொடுத்து குரல் கொடுக்கும்.
மாற்றுத் திறனாளிகள் வாழ்வில், அலட்சியமும், அலைக்கழிப்பும், அவமானமும், ஏமாற்றமும் இல்லாத 2014 ஆம் ஆண்டு மாற்றம் உருவாகி, மகிழ்ச்சியுடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன்" என்று வைகோ கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago
தமிழகம்
22 hours ago