தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: தலைமறைவான தொழிலதிபர், கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைப்பு

கோடம்பாக்கம் தனியார் பள்ளியில் புகுந்து ஆசிரியர் தாக்கப்பட்ட வழக்கில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான தொழிலதிபர் மற்றும் கும்பலை தனிப்படையினர் தேடிவருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி 4–வது குறுக்கு தெருவில் லயோலா மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு வகுப்பறையில் விசிலடித்த மாணவனை உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் ராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டியுள்ளார். இதையடுத்து, ஒரு கும்பல் பள்ளியில் புகுந்து அந்த ஆசிரியரை சரமாரியாகத் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீஸில் பள்ளி நிர்வாகம் புகார் கொடுத்தது. மாணவ னின் தந்தையான தொழிலதிபர் அருளானந்தம் தூண்டுதலின் பேரில் தான் ஆசிரியர் தாக்கப்பட்டார் என் றும், அருளானந்தத்தின் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள்தான் பள்ளியில் புகுந்து தாக்குதல் நடத்தினர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அருளானந்தம் நடத்தும் ரிச் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் 25 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அருளானந்தம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அருளானந்தத்தின் உறவினர்கள் திருச்சியில் இருப்பதால், அங்கு ஒரு தனிப்படை விரைந்துள்ளது. மற்ற 2 தனிப்படையினர் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேடி வருகின்றனர்.

காந்தப் படுக்கை மோசடி வழக்கு

சில ஆண்டுகளுக்கு முன்பு காந்தப் படுக்கை மோசடி தொடர்பாக தமிழகத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். திருச்சியில் காந்தப் படுக்கை மோசடி தொடர்பாக அருளானந்தம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை இப்போதும் நடந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE