சென்னை முகப்பேரில் உள்ள நேத்ரோதயா கல்வியியல் கல்லூரியில் ஏழை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பி.எட். கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 650-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகள் செயல்படுகின்றன. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) உத்தரவின்படி, 2015-16ம் கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பை ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தற்போது பி.எட். படிப்பு 2 ஆண்டுகள் கற்பிக்கப்படுகிறது.
மாற்றுத்திறன் மாணவர்கள் பலர் ஆசிரியப் பணிக்கு செல்ல விரும்புகின்றனர். ஆனால், தனியார் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதால், ஏழை மாணவர் களால் அங்கு படிக்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், சென்னை முகப்பேரில் உள்ள நேத்ரோதயா கல்வியியல் கல்லூரி ஏழை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பி.எட். கல்வியை இலவசமாக அளித்து வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தை நிறுவிய கோவிந் தகிருஷ்ணன் பார்வைத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழை மாணவர்களுக்கு இங்கு வழங்கப்படும் இலவசக் கல்வி குறித்து அவர் 'தி இந்து'விடம் கூறியதாவது:
பார்வைத்திறன் இல்லாத ஆண்களை திருமணம் செய்துகொள்ள கண் தெரிந்த பெண்கள் முன்வருகின்றனர். ஆனால், பார்வையற்ற பெண்களை திருமணம் செய்துகொள்ள கண் தெரிந்த ஆண்கள் முன்வருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் பொருளாதார சூழல். எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி, திறமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் 'நேத்ரோதயா' கல்வியியல் கல்லூரியைத் தொடங்கினோம்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சில கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனாலும், உணவு, தங்கும் வசதி ஆகியவற்றை மாணவர்களே ஏற்கவேண்டி உள்ளது. எனவேதான், கல்வியோடு, இருபாலருக்கும் தனித்தனி தங்கும் வசதி, உணவு ஆகியவற்றையும் இலவசமாக அளித்து வருகிறோம்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன், மத்திய அரசின் ஒப்புதலோடு கடந்த ஆண்டு முதல் நேத்ரோதயா கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 30 இடங்கள் உள்ளன. இதில் பார்வைத்திறன் குறைந்தவர்கள், கை, கால் ஊனமுற்றோர், ஆதரவற்ற ஏழை மாணவ, மாணவிகள் என்ற வரிசைப்படி சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக விதிமுறைப்படி இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பி.எட். படிப்பு, மாற்றுத்திறனா ளிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்து வதோடு, அவர்கள் அரசு வேலையைப் பெறவும் உதவும். எனவே, கிராமப்புற ஏழை மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பார்வைத்திறன், கை, கால் குறைபாடுள்ள மாணவ, மாணவிகள், ஆதரவற்ற மாணவ, மாணவிகள் 'நேத்ரோதயா' கல்வியியல் கல்லூரியில் சேர விரும்பினால் 9382896636, 044-26530712, 26533680 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாணவர் சேர்க்கைக்குப் பிறகு, ஆகஸ்ட் 1-ம் தேதி வகுப்புகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago