ஈழத் தமிழர் பிரச்சினையில் சர்வதேச சமூகத்தின் உணர்வோடு ஒன்றிப் போகாமல், மனித நேயமற்ற முடிவினை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டித்துள்ளார்.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் புறக்கணித்திருப்பது; குதிரை குப்புறத்தள்ளியதோடு, குழி பறித்த கதையாகவும் ஆகி விட்டது என்றும் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனித உரிமை மீறல்கள் - போர்க் குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியிருக்கிறது.
தீர்மானம் நிறைவேறியதால் ஈழத் தமிழர் பிரச்சினையில் சர்வதேச சமூகம் கொண்டுள்ளஅக்கறையின் காரணமாக அடுத்த நகர்வு ஏற்பட்டுள்ளது என்பதில் நமக்கு ஓரளவு மன நிறைவு என்ற போதிலும், அந்தத் தீர்மானத்தின் போது இந்தியா கடைப்பிடித்த அணுகுமுறை, தமிழகத்திலே உள்ள தமிழர்களை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமுதாயத்தையும் மீண்டும் ஏமாற்றத்திலும், வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவாதத்தில் இந்திய அரசு பங்கேற்று, சுதந்திரமான, நம்பகத் தன்மை வாய்ந்த, சர்வதேச விசாரணை வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டும் என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோளாகும். ஏற்கனவே இரண்டு முறை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட போது, அதனை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில் தான் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது.
இப்போதும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள இந்தியப் பொறுப்பாளர்கள், இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டுவதாகச் சொல்லப்படுகிறது. இலங்கையில் தமிழ் இன அழிப்பை முற்றிலும் நிறுத்திடவும், ஈழத்தில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக இருக்கவும், சுதந்திரமான சர்வ தேச நீதி விசாரணை நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.
இந்திய அரசு ஐ. நா. மனித உரிமை ஆணையத்தில் நடைபெறவுள்ள விவாதத்தின் போது, ஈழத் தமிழர்களின் பால் அக்கறையோடு, சுதந்திரமான சர்வ தேச விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டு மென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
அதற்கு முன்பே, திருச்சியில் 2014, பிப்ரவரி 15, 16 ஆகிய நாட்களில் நடைபெற்ற தி.மு.க 10வது மாநில மாநாட்டில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழிய உள்ள தீர்மானத்தை ஆதரிப்பதோடு; சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்றும், ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும்; இந்திய அரசே தனியாகவும் ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்மொழிந்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இம்மாநில மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” என்று தி.மு. கழகத்தின் நிலைப்பாட்டையும் இந்திய அரசுக்கு நாம் வைத்துள்ள கோரிக்கையையும் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ஏற்கனவே 2012ஆம் ஆண்டு ஈழத் தமிழர் பிரச்சினையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்த போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கொடுத்த தீவிரமான அழுத்தத்தின் காரணமாகவே இந்திய அரசு கடைசிக் கட்டத்தில் அந்தத் தீர்மானத்தை ஆதரிக்க நேரிட்டது.
ஆனால் 2013ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை அரசோடு இணைந்து, அந்தத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போகச்செய்யும், தமிழ் இன விரோத நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்ட காரணத்தினால், திராவிட முன்னேற்றக் கழகம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது.
நேற்றையதினம் (27-3-2014) ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில், அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து இருக்கின்றன. 11 நாடுகள் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பைப் புறக்கணித்திருக்கின்றன.
அப்படி புறக்கணித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது உலக சமுதாயத்தின் முன் நாம் தலைகுனிந்து நிற்க வேண்டிய பரிதாபமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாக சம்பந்தமோ, பந்தபாசமோ இல்லாத அமெரிக்கா போன்ற ஒரு நாடு, சர்வதேச சமூகத்தின் நலன், மனித நேயம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானத்தை மூன்றாவது முறையாக முன்மொழிந்து, அந்தத் தீர்மானத்தை தமிழினத்தின் வேர்களைக் கொண்டிராத 23 நாடுகள் ஆதரிக்கும் நிலையில், தமிழர்களின் தாயகமான இந்தியா அந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்திருப்பது தான் பெற்ற
தாயே தன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொல்வதற்குச் சமமாகும் என்பதால் நம்முடைய கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைக்கின்றது.
மேலும் சொல்ல வேண்டுமேயானால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து, “இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலே நேரடி விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று மனிதாபிமான உணர்வோடு தெரிவித்திருக்கும் நிலையில், ஐ.நா.வுக்கான நம்முடைய இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா என்பவர் “ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை போன்ற பிற நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதாகவும், அதன் இறையாண்மையைக் குலைப்பதாகவும் அமைந்துள்ளது. இது போன்ற அணுகுமுறைகளை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது” என்று கருத்து தெரிவித் திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இன்னும் சொல்லப் போனால், மத்திய அரசின் இந்த நடைமுறையை தமிடிநநாட்டிலே உள்ள காங்கிரசாரே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
பிற நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற வெளிநாட்டுக்கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால், பண்டித நேரு அவர்கள் தென் ஆப்பிரிக்காவின் நிற வெறிப் பிரச்சினையில் தலையிட்டிருக்க முடியுமா? வங்காள தேசத்தில் விடுதலை வீரர் முஜிபுர் ரகுமானுக்கு இந்திரா காந்தி அம்மையார் உதவிக்கரம் நீட்டி விடுதலைக்கு உறுதுணை புரிந்திருக்க முடியுமா? என்ற வரலாற்றுச் சான்றுகள் அடிப்படையிலான கேள்விகளை உலகத் தமிழர்கள் எழுப்ப மாட்டார்களா என்பதை மத்திய காங்கிரஸ் அரசு எண்ணிப் பார்க்க வேண்டாமா?
26ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் உரையாற்றும் நேரத்தில், காங்கிரஸ் அரசு நன்றி மறந்த போதிலும் - கடந்த காலத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை யெல்லாம் கூடப் பொறுத்துக் கொண்டு - மதச் சார்பற்ற ஒரு அரசு இந்தியாவில் அமைக்கப்பட வேண்டுமென்ற எண்ணத்தோடு, வருங்காலத்தில் பொது மன்னிப்பு அளிக்க வேண்டிய நிலைக்குக் கூட வரலாம் என்ற ரீதியில் நான் குறிப்பிட்ட பிறகும்கூட, இந்திய காங்கிரஸ் அரசு தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரான இந்த முடிவினை எடுத்திருப்பது நிரந்தரமாக தமிழர்களுக்கான வாயிலையே அடைத்துக் கொண்டதாகவே கருத நேரிடுகிறது.
திமுக சார்பில் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி இந்திய அரசு தன்னிச்சையாக ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வராததோடு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் ஆதரிக்காமல் புறக்கணித்திருப்பது; குதிரை குப்புறத்தள்ளியதோடு, குழி பறித்த கதையாகவும் ஆகி விட்டது.
சர்வதேச சமூகத்தின் உணர்வோடு ஒன்றிப் போகாமல், முக்கியமான இந்தப் பிரச்சினையில் மனித நேயமற்ற முடிவினை மேற்கொண்டதற்காக இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்". இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago