சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்: ஜெயலலிதா

By செய்திப்பிரிவு

சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரமும், சுற்றுச்சூழலும் பாதிக்கும் என்பதால்தான், அதை அதிமுக எதிர்ப்பதாக, ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

மேலும், மின் விநியோகத்தை தான் உன்னிப்பாக கவனித்து வருவதால், மின்சாரத்தை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் அன்வர் ராஜாவை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பேசியது:

மின் பிரச்சினையில் கவலை வேண்டாம்!

"தமிழகத்திலே மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த அரசு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. கடந்த 33 மாத கால ஆட்சியில் தமிழக மக்களுக்கு என்னென்ன நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை,

தொலைநோக்குத் திட்டங்களை அளிக்க முடியுமோ அவற்றையெல்லாம் நான் அளித்திருக்கிறேன்; அளித்து கொண்டு வருகிறேன்.

மின் உற்பத்தியை எடுத்துக் கொண்டால், எனது அரசின் பகீரத முயற்சியின் காரணமாக தற்போது கிட்டத்தட்ட 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது. இது தவிர, 3,300 மெகாவாட் மின்சாரம் நீண்ட கால அடிப்படையில் வாங்கப்படும்.

ஒரு வாரத்திற்கு முன்பு சில மின் நிலையங்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஓரிரு நாட்கள் மின்வெட்டு ஏற்பட்டது. அவை விரைந்து சரி செய்யப்பட்டுவிட்டன. இருப்பினும் இதைப் பற்றி பல அரசியல் தலைவர்களும் பெரிதுபடுத்தி, தீராத மின்வெட்டு வந்துவிட்டது போல பேசினர். அவர்களுடைய எண்ணம் நிறைவேறாது.

தற்போது அனைத்து மின் நிலையங்களும் நன்றாக செயல்பட்டு வருகின்றன. மின் விநியோகத்தை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். எனவே, மின்சாரத்தை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். விரைவிலேயே மின் வெட்டே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சேது சமுத்திரத் திட்டம்

சேது சமுத்திரத் திட்டத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்பு ஆதரித்தது; நான் ஆதரித்தேன் என்பது உண்மை தான். நான் முதலமைச்சராக முதன் முறை இருந்த சமயத்தில் 1994-ஆம் ஆண்டு பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிகள் நிறுவனம் மூலம் இதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க சொன்னேன்.

இந்த நிறுவனம் இதன் அறிக்கையை 1996-ஆம் ஆண்டு அரசுக்குச் சமர்ப்பித்தது. இந்தத் திட்டத்தினை NEERI அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்தன. இந்த ஆய்வுகளில் சேது சமுத்திரக் கால்வாய் அமைய உள்ள இடத்தில் 12 மீட்டர் ஆழம் மட்டுமே தோண்ட இயலும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

2004-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தவுடன் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை வகுத்துள்ள விதிமுறைகளின்படி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு மாநில அரசின் 'தடையின்மைச் சான்றிதழ்' பெறப்பட வேண்டும்.

இதன்படி தடையின்மைச் சான்றிதழ் கோரி மத்திய அரசு தனது கருத்துருவினை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியது. இந்தக் கருத்துருவின் மேல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்யும் வகையில் வல்லுநர் குழு ஒன்றை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அமைத்தது. சுற்றுச்சூழல் பாதிப்பினை விரிவாக ஆய்வு செய்த இந்த வல்லுநர் குழு தனது அறிக்கையினை அரசுக்கு சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்குவதற்கு முன்னதாக, விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என எச்சரித்திருந்தது. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்று தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தால், அதாவது NEERI அமைப்பினால் தெரிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் இந்த வல்லுநர் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறது.

அகழ்வுப் பொருட்கள் கொட்டப்படும் இடத்தைக் கருத்தில் கொண்டு, அகழ்வுப் பணிகள் காரணமாகவும், அகழ்வுப் பொருட்களைக் கொட்டுவதாலும் அப்பகுதியில் ஏற்படக் கூடிய பாதிப்பு பற்றிய மதிப்பீடு, கால்வாய்ப் பணி நிறைவுற்று போக்குவரத்து நடைபெறும் காலத்தில் ஏற்படுகின்ற பாதிப்பு, எண்ணெய் சிந்துவதால் ஏற்படுகின்ற பாதிப்பு போன்ற பல்வேறு ஆய்வுகள், நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த வல்லுநர் குழு திட்டவட்டமாகப் பரிந்துரைத்து இருந்தது.

ஆனால், இவற்றையெல்லாம் முற்றிலும் புறக்கணித்துவிட்டு இத்திட்டத்திற்கான தடையில்லா சான்றிதழைக் கூட மாநில அரசிடம் இருந்து பெறாமல் இந்தத் திட்டம் 2005-ஆம் ஆண்டு மத்திய அரசால் அவசர கதியில் தொடங்கப்பட்டது.

விரிவான ஆய்வு நடத்தப்பட்டு இருந்தால், சேது சமுத்திரத் திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும், மீனவர்களை பாதிக்கும் என்பது தெளிவாகி இருக்கும். ஆனால், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கான அகழ்வுப் பணிகள் பாக் ஜலசந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்டன.

அகழ்வுப் பணியில் ஈடுபட்ட கப்பல்களின் நடமாட்டத்தால் அப்பகுதியில் மீன்களைப் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகள் சேதம் அடைந்தன. மீன்கள் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் இடங்களான கடல் புதர்கள், கடலுக்குள் வளருகின்ற செடி கொடி முதலான கடல்வாழ் தாவரங்கள் அகழ்வுப் பணியால் அழிக்கப்பட்டன. சேதுசமுத்திரப் பணிகளின் விளைவாக ஆழ்கடல் பகுதியின் இயற்கைச் சூழலே மாறி, மீன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிக அளவு இறால் மீன்கள் கிடைத்த நிலை மாறி, இறால் மீன் கிடைப்பதே அரிது என்ற நிலை ஏற்பட்டது. கடல்வாழ் உயிரினங்களும், அரிய வகை மீன்களும் இடம் பெயரத் தொடங்கின.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கடலின் இயல்பு பாதிக்கப்படும் என்றும், பாரம்பரியமாக நடந்து வரும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என்றும், கப்பல் செல்லும் பாதையில் மீன் பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்றும், பவளப் பாறைகள் அழிக்கப்படும் என்றும், மீன்வளம் குறையும் என்றும், மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்றும் மீனவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். இது நியாயமானது தான்.

சேது சமுத்திரக் கால்வாயின் ஆழம் 12 மீட்டர். ஆனால், அதில் பயணிக்கும் கப்பலின் ஆழம் 10 மீட்டருக்கு மேல் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்தக் கால்வாயில் 20,000 டன் எடை கொண்ட கப்பல்கள் தான் செல்ல முடியும். 30,000 டன் எடை கொண்ட கப்பல்களை எடுத்துக் கொண்டால் தற்போதுள்ள கப்பல்களில் ஒரு சில கப்பல்கள் மட்டுமே இந்தக் கால்வாயில் செல்ல முடியும். ஏனெனில், ஒரு சில கப்பல்கள் தான் 10 மீட்டர் ஆழத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு மேல் எடை கொண்ட கப்பல்கள் இந்தக் கால்வாயில் செல்ல முடியாது.

தற்போது உலகில் ஆழம் அதிகம் கொண்ட கப்பல்கள் தான் பெரும்பாலும் வடிவமைக்கப்படுகின்றன. 2011-2012 ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சென்ற கப்பல்களின் எண்ணிக்கை 1,492 ஆக இருந்தாலும், இதன் எண்ணிக்கை 2012-2013 ஆம் ஆண்டு 1,294 ஆகக் குறைந்துவிட்டது. இந்த எண்ணிக்கை குறைந்ததற்குக் காரணம் பெரிய கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்தது தான். இந்தப் பெரிய கப்பல்கள் சேது சமுத்திரக் கால்வாய் வழியாக செல்லவே முடியாது.

எனவே சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் பெரிய கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வர முடியும் என்பது வடிகட்டிய பொய். இந்தத் திட்டத்தால் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து போகும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதும் பொய்.

தமிழ்நாட்டின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியில் உள்நாட்டிலிருந்து பெறப்படும் நிலக்கரி ஒடிசாவில் உள்ள பரதீப், மேற்கு வங்காளத்தில் உள்ள ஹால்டியா, ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் போன்ற கிழக்கு துறைமுகங்களில் இருந்து, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு எடுத்து வரப்படும் நிலக்கரியில் 30 விழுக்காடு நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேருகிறது. இந்தப் பணி பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த கப்பல்களின் ஆழம் 10.9 மீட்டர் முதல் 13.5 மீட்டர் வரை உள்ளது. சேது சமுத்திரக் கால்வாயில் 10 மீட்டர் ஆழம் உள்ள கப்பல்கள் மட்டுமே பயணிக்க முடியும்.

எனவே, பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்கள் கூட சேது சமுத்திரக் கால்வாயின் வாயிலாக செல்ல இயலாது. தமிழகத்திற்குத் தேவையான நிலக்கரியை எடுத்து வரும் கப்பல்கள் கூட சேது சமுத்திரக் கால்வாயில் பயணிக்க முடியாது. இந்தத் திட்டத்தினால் யாருக்கு என்ன பயன்?

சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் இடம் தூத்துக்குடியின் வட பகுதியில் உள்ளது. ஆனால், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு அல்லது தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் தென்பகுதி வழியாக பயணிக்கின்றன. இதற்கும் இந்தத் திட்டத்தினால் பயன் இல்லை. இப்படி, எதற்கும் பயன் இல்லாத திட்டம் தேவை தானா?

சேது சமுத்திரக் கால்வாய் இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளையும், கிழக்குக் கடற்கரை பகுதிகளையும் இணைக்கும் என்பது தான் உண்மை. அதன் காரணமாக தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பது உண்மையல்ல. அப்பொழுதும் கப்பல் போக்குவரத்தில் சரக்குகள் அனுப்பப்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில், மேற்கு கடற்கரை துறைமுகங்களில் இருந்து உள் நாட்டுக்கு சரக்குகளை லாரிகள் மூலமே கொண்டு செல்ல இயலும்.

சிறிய கப்பல்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய சேது சமுத்திர கால்வாய் பகுதியில், ஒரு கப்பல் சென்ற பின் மண் அரிப்பு ஏற்பட்டு கால்வாயின் ஆழம் குறையும் என்பதால், அக்கால்வாயில் தூர்வாரும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். சேது கால்வாய்க்குள் கப்பலை ஓட்டிச் செல்ல சிறப்புக் கால்வாய் மாலுமிகளை கூடுதல் செலவு செய்து அமர்த்த வேண்டும். இந்தக் கப்பலுக்கு என்று ஒரு பைலட் ஷிப் செல்ல வேண்டும்.

இதற்கெல்லாம் மிக அதிக அளவில் கூடுதல் செலவு ஏற்படும். இந்தத் திட்டத்தால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. மாறாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, மீன் வளம் குறைந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இந்தத் திட்டத்தினால் தென் தமிழகம் எந்த விதத்திலும் வளர்ச்சி அடையாது. மாறாக மீனவர்களின் வாழ்வாதாரம் தான் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இவற்றையெல்லாம் மீறி கருணாநிதி இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்வது எதற்காக? யாருடைய நன்மைக்காக? என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

ஏற்கெனவே இந்தத் திட்டத்திற்காக கிட்டத்தட்ட 830 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுவிட்டது. அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். அப்பாவி மீனவர்களை நிர்கதியாக்கத் துடிக்கும் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். மீன் வளத்தை பாழ்படுத்துகின்ற திட்டம் சேது சமுத்திரத் திட்டம். மொத்தத்தில் தமிழக மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்காத திட்டம்.

மக்களுக்காகவே திட்டங்கள் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. திட்டங்களுக்காகவே மக்கள் என்று தி.மு.க. கருதுகிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தென் தமிழகம் உண்மையிலேயே வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், தென் தமிழகத்தில் தொழில் தொடங்க முனைவோருக்கு ஆயத் தீர்வை நீக்கம் உள்பட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளிக்க வேண்டும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் போது, இது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற உறுதியை இந்தத் தருணத்தில் உங்களுக்கு நான் அளிக்கிறேன். தன்னலத்திற்காக திட்டங்களைத் தீட்டும் தி.மு.க-வினரையும், அதற்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ் கட்சியையும் இந்தத் தேர்தலில் நீங்கள் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்