ராமநாதபுரம்: கடலுக்கு நன்றி செலுத்தும் மீனவர்களின் பாரம்பரிய பொங்கல்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம் அருகே மோர் பண்ணை கிராமத்தில் கடலுக்குச் நன்றி செலுத்தும் மீனவர்களின் பாராம்பரிய பொங்கல் திருநாள் சனிக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மனித இனம் தோன்றிய காலம் முதல் உலகம் முழுவதும் பல நாடுகளில் பெண்களைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. வளமை, வலிமையின் அடையாளமாக பெண்களை தமிழர்கள் பழங்காலம் முதல் கருதி வந்தனர். அதனால் அவர்களின் நாட்டார் வழிபாட்டில் முதல் வழிபாட்டுக்குரிய கடவுளாக பெண் விளங்குகிறாள். பழந்தமிழ் இலக்கியங்களில் பெண் தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்புகளும் அதிகம் உள்ளன.

மோர் பண்ணை ஸ்ரீரணபத்திரகாளி கோயிலில் பொங்கல் வைக்கும் சிறுமிகள்

அனைத்து மனித உயிர்களுக்கும் தாயாகவும், என்றும் மாறாத, அழியாத கன்னித் தன்மையுடையவள் என்ற அடிப்படையில் கன்னியாகவும் பெண் தெய்வங்களை வழிபடும் மரபு காணப்படுகிறது. நதிகள், நாடுகள் ஆகியவை பெண்களின் பெயரால் வழங்கப்பட்டு வருவதும் பெண்ணை தெய்வமாக மதிக்கும் மனப்பான்மையின் வெளிப்பாடுதான்.

சப்த கன்னியர் வழிபாடு

வளமை வழிபாடான ஏழு கன்னியர் எனப்படும் சப்த கன்னியர் வழிபாடு, உழவுத்தொழில் செழிக்க, செல்வம் பெருக, குழந்தைகள் நோயின்றி வளர, தொழில் சிறக்க அனைவராலும் வழிபடப்படுகிறது. இவ்வழிபாடு தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் காணப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைக் கொண்டு பொங்கல் வைக்கச் செய்து, தங்களுக்கு மீன்வளம் தரும் கங்காதேவியாக கடலை வழிபடுகின்றன ராமநாதபுரம் மாவட்டம் மோர் குளம் கிராம மக்கள்.

பொங்கல் அம்மனுக்குப் படைப்பட்டு தீபாராதணை

ராமநாதபுரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் தொண்டி செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது மோர்ப்பண்ணை கிராமம். கிராமத்திற்குள் நெருங்கியதும் பொங்கல் விழாவிற்காக ஏற்பாடு செய்திருந்த குலமாணிக்கம் நையாண்டி மேளக் குழுவினர் வாசித்துக் கொண்டிருந்த ''தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத் தண்ணீரில் திளைக்க வைத்தான்'' என்ற பாடல் கடல் காற்றோடு கலந்து வந்து வரவேற்கிறது.

மோர்க்குளம் கிராமத் தலைவர் கனி நம்மிடம், ''மோர் குளதில் உள்ள ஸ்ரீரணபத்திரகாளி கோயில் கருவறையில் ஸ்ரீரணபத்திரகாளி, வாழவந்த அம்மன், கட்டாரி காளி ஆகிய தெய்வங்கள் உள்ளன. இக்கோயிலை வழிபடும் கடையர் எனும் மீனவ சமுதாயத்தினர் ஒவ்வொரு ஆண்டும் ஊர் கூட்டம் போட்டு 11 முதல் 13 வயதுக்குட்பட்ட 7 சிறுமிகளை தேர்வு செய்கிறோம். வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சுனந்தாவதி, ஹர்ஷினி, மன்மதா, அனிதா, சிங்கராணி, லத்திகா, சத்தியப்பிரியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், என்றார்.

பொங்கல் நாளான சனிக்கிழமை அன்று ஊரில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்தபின்பு, குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஏழு சிறுமிகளுடன் கோயிலுக்கு வந்து வணங்குகிறார்கள். பின்பு அச்சிறுமிகள் கடலிலும், குளத்திலும் நீராடுகின்றனர். கோயில் முன்பு அமைக்கப்பட்ட வேப்பிலைத் தோரணம் எதிரில், ஏழு அடுப்புகளில் ஏழு பானைகள் கொண்டு பெரியவர்களின் உதவியோடு பொங்கல் வைக்கிறார்கள். பொங்கல் பொங்கியதும் குலவையிடுகிறார்கள். பொங்கல் தயாரானதும் அப்பானைகளை கோயில் முன் வைத்து விட்டு அவ்வூர் முனியையா கோயிலுக்கு ஆண்கள் மட்டும் சென்று வழிபடுகிறார்கள். அதன் பின் மஞ்சள் கலந்த பால் நிரப்பப்பட்ட ஏழு கரகச் செம்புகளோடு, ஏழு வாழையிலைகளில் பொங்கலை வைத்து அம்மனுக்குப் படைக்கிறார்கள்.

கடலில் விடப்படும் பாய்மரப்படகு

தென்னம்பாளையில் அழகிய வண்ணம் பூசப்பட்டு தயாரிக்கப்பட்ட சிறிய பாய்மரப் படகின் உள்ளே பூசைப்பொருட்களோடு இலையில் பொங்கல் வைத்து அதன் நடுவில் நெய் ஊற்றி திரியிட்டு விளக்கு ஏற்றுகிறார்கள். கிராமத் தலைவர் கனியிடம் அந்த பாய்மரப் படகை கோயில் பூசாரி எடுத்துத் தருகிறார். அவர் அதை கைகளில் ஏந்திக்கொண்டு முன் செல்ல சப்த கன்னியர்களான அச்சிறுமியர் கரகச் செம்பை தலையில் ஏந்தி பின் செல்ல மேளதாளத்துடன் கடலை நோக்கிச் செல்லும் அவர்கள் கழுத்தளவு தண்ணீர் உள்ள இடத்துக்குச் சென்று பாய்மரப் படகை கடலில் விட்டு விட்டு, கரகச் செம்பில் உள்ள மஞ்சள் கலந்த பாலை கங்காதேவியாக வழிபடும் கடலில் கொட்டி வழிபடுகிறார்கள்.

ஆழ்கடலில் விடப்படும் பாய்மரப்படகு

பாய்மரத்தை கடலில் விட்ட கனி மீண்டும் தொடர்கிறார், ''பாய்மரக் கப்பல் கடலில் காற்று அடிக்கும் திசையில் அடித்து ஆழ்கடல் பகுதிக்குச் செல்லும். படகில் உள்ள பூசைப்பொருட்களை கடல் கங்காதேவியிடம் கொண்டு சேர்ப்பதாக நாங்கள் நம்புகிறோம். இதனை தலைமுறை தலைமுறைகளாக தொடர்ந்து செய்து வருகிறோம். பல ஆண்டுகளுக்கு முன்புவரை பூசைப்பொருட்களோடு ஒருகிராம் தங்கமும் வைக்கும் வழக்கம் இருந்துள்ளது. தற்போது அது இல்லை, என்றார்.

சனிக்கிழமை மோர் குளத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு, செயலாளர் காளிமுத்து, இக்கிராம செயலாளர் மழைமேகம், சமூக ஆர்வலர் துரைபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பொங்கல் நிகழ்ச்சிக்காக குலமாணிக்கம் கரகாட்டக் குழுவினரின் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விவசாயப் பெருமக்களால் உழவுத் தொழிலுக்கு உதவியாய் இருக்கும் சூரியன், காளைகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் மோர் குளத்து மீனவர்களால் தங்கள் வாழ்வை வளமாக்கும் கடலுக்கு நன்றி செலுத்தி வணங்கும் திருநாளாக கொண்டாடப்படுவது சிறப்பான ஒன்றாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்