பிரம்மாண்டமான திரைப்படங்களாக இந்தியா வாலும் தயாரிக்க முடியும் என்பதை பாகுபலி 1 மூலம் நிறுப்பித்திருந்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ மவுலி. இதனால் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் அபரிமிதமாக இருந்தது.
இந்நிலையில் ராஜ மவுலியின் இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த ஏப்ரல் 28 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு பத்து நாட்களில் ரூ. 1000 கோடியை வசூலித்து புதிய இந்திய சாதனையை படைத்துள்ளது.
காவியத் தன்மை கொண்ட கதைகளை படமாக்கும் போது வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து காட்சிகளை திரைப்படங்களில் அமைப்பார்கள். பாகுபலி திரைப்படத்தில் ராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதி மன்னர்களின் வரலாறு போர் காட்சிகளில் இடம்பெற்றுள்ளது தற்போது சமூக வலைகதளங்களான பேஸ் புக் மற்றும் வாட்ஸ் அப்களில் வெளியாக வைரலாகப் பரவி வருகிறது.
இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் வே.ராஜகுரு கூறியதாவது,
பாகுபாலியும் - ராமநாதபுரம் சீமையும்
பாகுபலி 2 ல் வரும் ஒரு காட்சியில் குந்தள தேசத்தின் கோட்டையை தாக்க வரும் எதிரி நாட்டின் பெரும்படையை, அணையை உடைத்து நீரை வெளியேற்றி அப்படையை அழித்து பாகுபலி காணாமல் போகச் செய்வார்.
ராமநாதபுரத்தை ஆண்டுவந்த செல்லமுத்து சேதுபதியின் மறைவுக்குப் பின் அவரின் தங்கை முத்துத் திருவாயி நாச்சியாரின் மகன் முத்துராமலிங்க சேதுபதி இரண்டு வயது குழந்தையாக இருக்கும் போது மன்னராக்கபட்டார். மகன் சார்பில் அரசப் பிரதிநிதியாக அவர் தாயாரே நாட்டை ஆண்டு வந்தார். இந்த சூழ்நிலையை கவனித்த தஞ்சை மராட்டிய மன்னன் துல்ஜாஜி கி.பி.1772 இல் ராமநாதபுரத்தின் மீது படையெடுத்தான். ராமநாதபுரம் ஆட்சிக்கு உரிமை கொண்டாடிய மாப்பிள்ளைத்தேவனும், அவன் சகோதரனும் தஞ்சைப் படைகளுக்கு வழிகாட்டி அழைத்து வந்தார்கள்.
4000 குதிரை வீரர்களையும், 50000 சிப்பாய்களையும் கொண்ட இப்படை ஆர்.எஸ்.மங்கலம் அருகில் இருந்த ஆறுமுகம் கோட்டையைக் கைப்பற்றி முன்னேறினர். ராமநாதபுரம் கோட்டையைக் கைப்பற்ற அதைச் சுற்றி பாசறை அமைத்து முற்றுகையிட்டு தங்கியிருந்தனர். மராட்டிய மன்னன் திருப்புல்லாணி அரண்மனையில் தங்கி முற்றுகைப் போரைக் கவனித்து வந்தார்.
அணையை உடைத்து எதிரிகளை துவம்சம் செய்த சேதுபதி படை
போர் 19 நாட்கள் நீடித்தது. இந்த முற்றுகைப்போரில் ராமநாதபுரம் சீமையின் மானம் காக்க வேண்டிய நிலையில், போரின் இருபதாவது நாள் தொடங்கும் அதிகாலை வேளையில் கோட்டைக்கு மேற்கே இருந்த ராமநாதபுரம் பெரிய கண்மாய் திடீரென உடைக்கப் பட்டது. அதில் பீறிட்டுக்கொண்டு வந்த வெள்ளம் தஞ்சைப் படைகளின் பாசறையை சில நிமிடங்களில் துவம்சம் செய்தது. அப்படைகளின் ஆயுதங்கள், அரிசி மூடைகள், வெடிமருந்து உள்ளிட்ட அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஒரு சில வீரர்களைத் தவிர பெரும்பாலோர் அந்த வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். போர் முடிவுக்கு வந்தது. தஞ்சை மன்னர் ராமநாதபுரம் அரசியிடம் சமாதானம் பேசி போர் இழப்பீடாக ஒரு லட்சம் வெள்ளி நாணயங்களைப் பெற்று தஞ்சை திரும்பினர்.
பாகுபலி 2 ல் மேலும் ஒரு காட்சியில் மாட்டின் கொம்புகளில் தீ பந்தங்களை கட்டி எதிரியுடன் பாகுபலி மோத விடுவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்க மன்னரை, மைசூர் மன்னரின் படை கைது செய்து அழைத்து சென்ற போது ராமநாதபுரம் சீமையை ஆண்ட கிழவன் சேதுபதியின் உதவியை நாயக்கரின் மனைவி ராணி மங்கம்மாள் நாடுகிறாள். கிழவன் சேதுபதியின் படை நாயக்கரை மீட்க ராமநாதபுரத்தை விட்டு கிளம்புகிறது. கடல் போன்ற மைசூர் படைக்கு எதிராக தனது வீரர்களுடன் மாடுகளையும் பயன்படுத்துகிறார். மாடுகளின் கொம்புகளில் தீ பந்தங்களை கட்டி விட்டு புதிய யுக்தியுடன் போரிட்டு நாயக்கரை மீட்டு மைசூர் படையை புறமுதுகிட்டு ஓட செய்கிறார்.
தமிழக மக்களின் மனம் கவர்ந்த கல்கியின் பொன்னியின் செல்வன், அகிலனின் வேங்கையின் மைந்தன், சாண்டிலியனின் யவனராணி என பல சரித்திர நாவல்கள் உள்ளன. பாகுபலி போன்று இனிவரும் காலங்களில் இத்தகைய சரித்திர நாவல்கள் தமிழில் திரைப்படங்களாக்க வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago