தேமுதிக மீது பாஜக அதிருப்தி: கூட்டணி குறித்து விரைவில் முடிவு

தேமுதிக முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று (வெள்ளிக்கிழமை) தன்னிச்சையாக அறிவித்து, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தைத் தொடங்கினார்.

கூட்டணி தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவாகாத நிலையில், தன்னிச்சையாக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை தேமுதிக வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபடுவது, கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என்று கூட்டணியில் உள்ள கட்சிகள் கருதுகின்றன.

இந்நிலையில் தேமுதிக முடிவு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார் பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக தலைவர் ஒருவர்.

மேலும் அவர் கூறுகையில், "தேமுதிக முடிவால் பாஜகவில் அதிருப்தி நிலவுகிறது. 10% வாக்குவங்கி இருப்பதாக கூறும் தேமுதிக மீது அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களே பலர் அதிருப்தியில் இருக்கின்றனர். பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மேலும் பலர் அதிமுகவுக்கு ஆதரவாளர்களாக மாறும் நிலை உள்ளது. இந்நிலையில் 10% வாக்குவங்கி என்பதில் சறுக்கல் ஏற்படும்" என்றார்.

இதற்கிடையில், விஜயகாந்தின் தன்னிச்சையான முடிவு பாஜகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை, தேமுதிக முடிவு குறித்து பாஜக தேர்தல் மத்திய கண்காணிப்பு குழுவிற்கு அறிக்கை அனுப்பப்படும் என பாஜக செய்தி தொடர்பாளர் முரளிதர ராவ் செய்தியாளர்கள் சந்திப்பில் சூசகமாக தெரிவித்ததில் இருந்து வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE