சேலம் மாவட்டம் பனமரத்துப் பட்டியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான சென்ட் தயாரிப்பு ஆலை மற்றும் குளிர்பதன கிடங்கு, தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் அளிக்கும் வாசமில்லா வெற்று வாக்குறுதியாகவே இருந்து வருவதாக வேதனை பொங்க விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரையில் அரசியல்வாதிகள் தங்களின் வெற்றியை தக்க வைக்க கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரமாக தேர்தல் கால வாக்குறுதிகள் உள்ளன. அப்பாவி பொதுஜனங்களும், விவசாயிகளும் அரசியல்கட்சிகளும், அரசியல் தலைவர்கள் அள்ளி வீசும் வாக்குறுதிகளை மலைபோல நம்பி, தேர்தல் முடிந்த பின் ஏமாறுவது வழக்கம்.
சேலம் மாவட்டத்தில் மலர் சாகுபடியில் பல ஆயிரக்கணக்கான விவசாய குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பனமரத்துப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியான வாழக்குட்டப்பட்டி, பெரமனூர் ஆகிய இடங்களில் குண்டுமல்லி பூ அதிகளவும், கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி, குரால்நத்தம் ஆகிய பகுதிகளில் அரளி, ரோஜா, சம்பங்கி, கோழிக்கொண்டைஉள்ளிட்ட பூக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன.
அயோத்தியாப்பட்டணம், வலசையூர், வீராணம், கன்னங்குறிச்சி, ஓமலூர் உள்ளிட்ட இடங்களில் குண்டுமல்லி சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு விளையும் மலர்கள் சேலம் வஉசி மார்க்கெட்டில் இயங்கி வரும் பூ மார்க்கெட்டிற்கு அதிகாலை 4 மணியில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். விவசாயிகளிடமிருந்து நுகர்வோருக்கு செல்லுவதற்குள் நான்கு இடைத்தரகர்களை கடந்து செல்வதால், விவசாயிகளுக்கு கூலிக்கு கூட பூக்கள் விற்பனையால் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இருப்பதில்லை என ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.
அரளி பூக்களை ஒரு கிலோ பறிக்க விவசாயிகள் ரூ.25 கூலியாகவும், குண்டு மல்லி பூ பறிக்க கிலோவுக்கு ரூ.10-ம் வழங்குகின்றனர். சீசன் காலங்களில் குண்டு மல்லி கிலோ 20 முதல் ரூ.30 வரையிலும், அரளி கிலோ ரூ.20 வரையிலும் விற்பனையாகிறது. சீஸன் அல்லாத பனி பொழியும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குண்டு மல்லி கிலோ ஆயிரம் முதல் ரூ.1,500 வரை விற்பனையாகும். சேலத்து குண்டு மல்லி சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதிக வரத்து வரும் போது, குண்டு மல்லிக்கு விலை கிடைக்காத நிலையில், கோவை, துடியலூர் உள்ளிட்ட பிற இடங்களில் இயங்கும் மலர் சென்ட் ஆலைக்கு குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டியுள்ளது
அரசு குளிர்பதன கிடங்கு அமைத்து கொடுத்தால், பூக்களை விவசாயிகள் இருப்பு வைத்து விலை கிடைக்கும்போது, விற்பனை செய்து நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும். சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பனமரத்துப்பட்டியில் மலர் சென்ட் ஆலையும், குளிர்பதன கிடங்கு அமைத்து கொடுப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் பல ஆண்டுகளாக தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு பின் வாக்குறுதி மாயமாய் மறைந்து விடுகிறது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், பனமரத்துப்பட்டியில் மலர் சென்ட் ஆலையும், குளிர்பதன கிடங்கும் அரசு அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டு மொத்த விவசாயிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அரசு கருணை தேவை
சேலம் விவசாயிகள் உற்பத்திக்குழு தலைவரும், தேசிய தோட்டக்கலை வாரிய உறுப்பினருமான ஏஆர் சண்முகம் கூறியது:
சேலம் மாவட்டத்தில் குண்டுமல்லி, ரோஜா, அரளி, சம்பங்கி உள்ளிட்ட மலர்களை ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள விவசாயிகள் குண்டு மல்லி சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து சாகுபடி செய்து வருகின்றனர். கூலிக்கு கட்டுப்படியாகாத நிலையிலேயே மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் தொழில் நசிவை நோக்கி நகர்ந்து வருகிறது. குளிர்பதன கிடங்கு மற்றும் மலர் சென்ட் ஆலை அமைத்து கொடுப்பதாக அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள் காற்றோடு காணாமல் போய்விட்டது.
மலர்களை பொருத்தவரை சில மணி நேரங்கள் மட்டுமே அதன் ஆயுள். காலையில் மலருக்கு இருக்கும் வரவேற்பு மாலையில் இருக்காது. அதுவே இரவு கடந்தால் குப்பை தொட்டியில் தாராளமாக பார்க்கலாம். விவசாயிகள் வெறும் கையும், காலியான வயிறுடன் தான் வீடு திரும்பும் நிலை உள்ளது. குளிர்பதன கிடங்கு அமைத்து கொடுப்பதால், விவசாயிகள் சில நாட்கள் மலர்களை வைத்து, விலை கிடைக்கும் போது விற்பனை செய்வர். அதீத உற்பத்தியாகும் போது, மலர் சென்ட் ஆலைக்கு சாகுபடி செய்யும் குண்டு மல்லியை உள்ளூரிலேயே நல்ல விலைக்கு விவசாயிகளால் விற்பனை செய்ய முடியும்.
எனவே, அரசு பனமரத்துப் பட்டியில் விரைந்து மலர் சென்ட் ஆலையும், குளிர்பதன கிடங்கும் அமைத்து கொடுத்து, மலர் சாகுபடி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago