பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காவிரிப் பாசனப் பகுதிகளில் விவசாயிகள் டிசம்பர் 3 ஆம் தேதி நடத்த இருக்கின்ற போராட்டத்தை மதிமுக ஆதரிப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
மேலும், காவிரி பாசனப் பகுதி விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக மாநிலம் முரண்டு பிடித்ததாலும், காவிரி பாசனப் பகுதிகளில் உரிய நேரத்தில் குறுவை, சம்பா பயிர் சாகுபடி தொடங்க முடியவில்லை. 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பயிர்களும், 14 லட்சம் ஏக்கம் சம்பா சாகுபடி பயிர்களும் 90 சதவீதம் காப்பாற்ற முடியாமல் கருகிப் போயின.
விவசாயிகளுக்கு இழப்பு ஈடு வழங்குவதற்காக, தமிழக அரசு அமைச்சர்கள், அதிகாரிகளை கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அக்குழு காவிரி பாசனப் பகுதிகளில் ஆய்வு நடத்தியது. மத்திய அரசின் சார்பில் அனுப்பப்பட்ட குழுவினரும், பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் பார்த்து சேதத்தை மதிப்பிட்டுச் சென்றனர்.
பயிர் சேதமுற்ற விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இழப்பு ஈட்டுத் தொகையும் வழங்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பு ஈட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்று, இப்போதும் காவிரி பாசன விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குவதிலும் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 117 செலுத்தி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் காவிரி பாசனப் பகுதிகளில் ஜூன் 12 இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு அதன்பின்னர் பயிர் சாகுபடி பணிகள் தொடங்குகின்றன. ஆனால், பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள், தமிழ்நாட்டில் சாகுபடி காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான சாகுபடி காலத்தைக் கணக்கிடுவதால், தமிழக விவசாயிகளுக்கு முழுமையான பலன் கிடைப்பது இல்லை.
பயிர்க் காப்பீட்டுக்கான நடைமுறைகளை ஆகஸ்ட் மாதத்தில்தான் தொடங்குகின்றனர். செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, காவிரி பாசனப் பகுதிகளில் சாகுபடி வேலைகள், அறுவடைப் பணிகள் முடிந்துவிடுகின்றன.
இதனால் பயிர்ச் சேதத்திற்கு விவசாயிகள் காப்பீடு செய்து இருந்தாலும் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து காப்பீட்டுத் தொகையைப் பெற முடிவது இல்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, பயிர்க் காப்பீடு சாகுபடி காலத்தை, தமிழகத்திற்கு ஏற்றால்போல் மாற்றி அமைக்க வேண்டும்.
கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு தமிழக அரசே காப்பீட்டுத் தவணைத் தொகையைச் செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் சார்பில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய தொகை ரூ 370 கோடி வழங்காததால், விவசாயிகள் காப்பீட்டுத் தொகை பெற முடியாத நிலை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
நடப்பு பருவத்தில் பயிர்களைக் காப்பாற்ற, கர்நாடக மாநிலம் 26 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டு இருக்கின்றது. உடனடியாக காவிரி நீரை பெற்றால்தான் இந்த ஆண்டாவது காவிரிப்பாசன பகுதிகளில் பயிர்களைக் காப்பாற்ற முடியும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காவிரிப் பாசனப் பகுதிகளில் விவசாயிகள் டிசம்பர் 3 ஆம் தேதி நடத்த இருக்கின்ற போராட்டத்தை மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஆதரிக்கின்றது.
கடந்த ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை, விவசாயிகளுக்கு உடனடியாகக் கிடைத்திட, தமிழர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago