ராமதாஸ், அன்புமணிக்கு ஆயுத போலீஸ் பாதுகாப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்திருந்தார். ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
தற்போதைய சூழ்நிலையில் அச்சுறுத்தல் மேலும் அதிகரித்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். ஆனால் இதற்கு மாறாக ராமதாசுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு விலக்கிக் கொண்டுள்ளது. அதேபோல் அன்புமணிக்கும் தற்போது பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் அவர்கள் இருவருக்குமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார்.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவருக்கும் தற்போது அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால் அவர்களுக்கு பாதுகாப்பு எதுவும் வழங்கத் தேவையில்லை என்று அந்தக் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.
இந்த முடிவு சட்ட விரோதமானது. ஆகவே, ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீது நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். உயிருக்கு அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் ராமதாஸ், அன்புமணிக்கான போலீஸ் பாதுகாப்பை விலக்கிக் கொண்டது சட்ட விரோதமானது என மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, வழக்கறிஞர். கே.பாலு ஆகியோர் வாதிட்டனர்.
தற்போதைய சூழலில் அவர்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும், அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நேரங்களில் தேவைக்கேற்ப அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில் ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவருக்கும் பாதுகாப்பு வழங்க தலா 2 பேர் வீதம் ஆயுதமேந்திய போலீசாரை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும்.
இந்தப் பாதுகாப்பானது 24 மணி நேரமும் வழங்கப்பட வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.