தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டக் கடலோர பகுதிகளில் 25 ஆண்டுகளாக நடந்துவந்த கார்னெட் கொள்ளைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக அரசு. கிரானைட் கிங் பி.ஆர்.பி. மீது வீசப்பட்ட ஏவுகணைகளைபோல இதுவும் வீணாகி விடக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் கிழக்கு கடற்கரையின் தென் பகுதி மக்கள்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கார்னெட் உள்ளிட்ட கனிமவள வியாபாரம் தொடக்கத்திலிருந்தே வைகுண்டராஜன் கையில் சிக்கிக் கொண்டது. இந்த மாவட்டங்களில், வி.வி.மினரல்ஸ், பீச் மினரல்ஸ் , இண்டஸ்ட்ரியல் மினரல் நிறுவனங்கள் மற்றும் எஸ்.டி.எஸ்.மாணிக்கம், தயா தேவதாஸ், நாகராஜன் ஆகியோரின் நிறுவனங்கள் கார்னெட் ஏற்றுமதியில் ஏகபோகத்தில் உள்ளன. இதில், வி.வி., பீச் , இண்டஸ்ட்ரியல் மினரல் நிறுவனங்கள் வைகுண்டராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமானவை. கிரானைட் வியாபாரத்தில் பி.ஆர்.பி. என்றால் கார்னெட் வியாபாரத்தில் வைகுண்டராஜன். இவர் ராஜாவுக்கெல்லாம் ராஜா.
1974-ல் கனிமவளத்துறை முன்னாள் அதிகாரி செல்வராஜும், தூத்துக்குடி மணல் மாணிக்கமும் இணைந்து முதலில் கார்னெட் மணல் நிறுவனத்தை தொடங்கினர். ஒருகட்டத்தில் செல்வராஜ் துரத்தப்பட்டார். அவரை அழைத்து வந்து கார்னெட் தொழிலை தொடங்கினார் வைகுண்டராஜன். செல்வராஜ் 150 ரூபாய்க்கு எடுத்துக் கொடுத்த கார்னெட் உரிமம்தான் இன்றைக்கு வைகுண்டராஜனை பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபராக்கி உள்ளது.
கனிம வளத்தை எப்படிச் சுரண்டுகின்றன கார்னெட் நிறுவனங்கள்..?
தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட கடற்கரையில் எடுக்கப்படும் கார்னெட் உள்ளிட்ட கனிமங்களை கொரியா, அபுதாபி, ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதில் வைகுண்டராஜன் தரப்புக்கு தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகளில் சுமார் 15 கி.மீ. நீளத்திற்கான கடற்கரை ஏரியாவை அரசே 30 ஆண்டுகளுக்கு சொற்பமான குத்தகைக்கு தந்திருக்கிறது. உதாரணத்திற்கு இருக்கன்துறை கிராமத்தில் 100 ஏக்கர் அரசு நிலத்தை ஆண்டுக்கு வெறும் ரூ.16.47-க்கு தந்திருக்கிறார்கள். இதுதவிர 2300 ஏக்கருக்கான பட்டா நிலங்களையும் தங்கள் வசம் வைத்திருப்பதாக அந்த நிறுவனமே தனது இணைய தளத்தில் விவரம் தந்திருக்கிறது. தூத்துக்குடி - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு இடங்களில் கார்னெட் மணல் நிறுவனத்தினர் கடலை ஒட்டியே தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர். அதற்குள்ளே என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாபடி பாதுகாப்பு அரண்களை பலப்படுத்தி இருக்கிறார்கள்.
வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் வளர்ந்த கதை...
நெல்லை மாவட்டம், திசையன்விளை - கீரைக்காரன்தட்டு கிராமத்தைச் சேர்ந்த வைகுண்டராஜன் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் அரிசி ஆலை, லாரிகள் வைத்து சாதாரணமாகத் தொழில் செய்தவர். கனிம தொழிலில் கால்பதித்த பிறகுதான் இந்திய பணக்காரர்களில் ஒருவரானார். இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளதோடு, உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மிகவும் எளிமையானவர், காலில் செருப்புக்கூட அணிய மாட்டார், தனக்கு உதவியவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார் - இதெல்லாம் வைகுண்டராஜனுக்கு வெளியில் இருக்கும் புகழாரங்கள். ஆனால், உள்ளுக்குள் அவருக்கு இன்னொரு முகமும் உண்டு. பத்து வருடங்களுக்கு முன்பு, சாத்தான் குளம், திசையன்விளை பகுதிகளில் வரவிருந்த டாடா-வின் டைட்டானியத் தொழிற்சாலையை தடுத்து நிறுத்தியபோது வைகுண்டத்தின் தலையும் உருண்டது. அனைத்து அரசியல் கட்சிகளிலும் அமைப்புகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடியிடம் கார்னெட் அதிபர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணியினரும், தென்னிந்திய திருச்சபையினரும் மனு கொடுத்ததே இதற்கு சாட்சி!
கடலோர மக்களின் போராட்ட வரலாறு...
கார்னெட் கொள்ளைக்கு எதிராக சுமார் 20 ஆண்டுகளாக அந்த ஏரியா மக்கள் குறிப்பாக மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், பணபலம், அரசியல் பலம் இவைகளுக்கு முன்பாக அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. கார்னெட் நிறுவனங்களுக்கு காவடி தூக்கும் காவல்துறை அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளும் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்கள் மீது வழக்குகளை பாய்ச்சியதுதான் கடந்த கால வரலாறு.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், முத்தையாபுரம், பெரியசாமிபுரம், மேல்மாந்தை கடற்பகுதி. இவை மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதிக்குள் வருகின்றன. அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ள பகுதி இது. பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதியில் பல கிலோ மீட்டர்களுக்கு கடற்கரையை வெட்டி மணலை கடத்தி இருக்கிறார்கள். சில இடங்களில் கடலுக்கு உள்ளேயும் போய்விட்டார்கள். இங்கிருந்த சவுக்கு மற்றும் பனை மரங்களை பிடுங்கி எடுத்து இஷ்டத்திற்கு மணலை சுரண்டி இருக்கிறார்கள்.
பெரியதாழை பகுதியில் கடலில் கழிவு மண்ணை கொட்டி பாலைவனமாக்கி இருக்கிறார்கள். மீனவர்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவுகளும் முழுவதுமாய் நாசம்! நெல்லை மாவட்டம் உவரியில் பசுமை தீர்ப்பாயத்தின் தடையையும் மீறி இஷ்டத்திற்கு தாது மணலை சுரண்டிவிட்டு, அந்தப் பள்ளத்தை கழிவு மண்ணை கொட்டி மூடி வைத்திருக்கிறார்கள். இங்கேயும் கடலுக்குள் மணலை அள்ளி இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்...
வடக்கில் பாம்பன் தீவு முதல் தெற்கே தூத்துக்குடி வரை 21 தீவுகள் உள்ளன. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தின் கீழ் வரும் இப்பகுதியைப் பாதுகாக்க ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதியில்தான் இத்தனை அத்துமீறல்கள் நடந்திருக்கு. கடல்சார் உயிரினங்களைப் பெருக்கம் செய்யும், சுனாமியின் வேகத்தை தடுத்து மக்களைக் காக்கும், சதுப்பு நிலக்காடுகளை அழிச்சிட்டாங்க" என்கிறார் தூத்துக்குடிமாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான காந்திமதிநாதன் கீழவைப்பாறு கிராமத்தைச் சோ்ந்த அந்தோணிசாமி, "கடலுக்குள்ள கழிவு மணலை கொண்டாந்து கொட்டுறதால மீன் பாடே குறைஞ்சு போச்சு. சுனாமியை தடுக்குறதுக்காக தொண்டு நிறுவனங்கள் கடலோரமா நட்டுக்குடுத்த கண்ணா செடிகளையும் வனத் துறை நட்ட சவுக்கு மரங்களையும் நாசம் பண்ணிட்டாங்க. கார்னெட்டை பிரிக்கிறதுக்காக கெமிக்கல் கலந்த தண்ணியைப் பயன்படுத்துறாங்க. அந்த கழிவுநீரால நிலத்தடி நீரும் கெட்டுப் போச்சு. இதனால, எங்க ஊருக்குள்ள புற்று நோய், கல் அடைப்பு, கிட்னி பிரச்னைகளால் பல பேர் பாதிக்கப்பட்டு, இதுவரை ஐம்பது பேர் வரைக்கும் போய் சேர்ந்துட்டாங்க" என்கிறார்.
பெரியதாழை ஆல்ஸ்டன், அமலன் ஆகியோர் கூட்டாக, "கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆட்சியரிடம் மனு குடுத்தோம். அவரு சோதனைக்கு வந்தப்ப, மத்த அதிகாரிகள் அவரை, பாதிப்பு இல்லாத வேற பகுதிக்கு கூட்டிட்டு போனாங்க. நாங்கதான் அவரை இங்க கூட்டிட்டு வந்து காட்டுனோம். ஆட்சியரே மிரண்டு போயிட்டாரு. இப்ப, இந்தப் பகுதியில கழிவு மணலைக் கொண்டாந்து கொட்டி கற்றாழை செடிகளை கொண்டாந்து நட்டு, இயற்கையா இருக்காப்புல செட்-அப் பண்ணிட்டாங்க. இந்த தகவல்களை எல்லாம் ககன் தீப்சிங் பேடியிடம் சொல்லி இருக்கிறோம். கடலை ஒட்டிய உள்பகுதியில் கனிமங்கள் உள்ள செம்மண்ணை வெட்டி எடுக்காங்க. அதை சுத்திகரித்து வெளியாகும் கழிவுநீரை கடல்ல விடுறதால, கடல் நீரே சிவப்பாகி, மீன்களும் அழிஞ்சு போகுது. மொத்தத்துல, அவங்க கொழிக்கிறதுக்காக எங்களை ஒழிக்கப் பாக்காங்க" என்றார்கள்.
தங்களோட சப்போர்ட்டுக்கும் ஆளுங்க வேணும்கிறதுக்காக கார்னெட் முதலாளிகள் பல கிராமங்களை ரெண்டுபடுத்தி வைச்சிருக்காங்க. தூத்துக்குடியில் ககன்தீப்சிங் பேடிக்கிட்ட நாங்க மனு குடுக்க போயிருந்தப்பக் கூட, தலைக்கு ஆயிரமும் பிரியாணி பொட்டலமும் குடுத்து ஆட்களை கூட்டி வந்திருந்தாங்க. கம்பெனிக்கு ஆதரவாக பிஷப் ஒருத்தரும் வந்திருந்தாரு. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் கார்னெட் முதலாளிகளால் பதவிக்கு வந்தவர்களும் வந்துருந்தாங்க" என்று வேதனையை கொட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராம கமிட்டிகளின் கூட்டமைப்பு தலைவர் ஜோசப், ’சின்ன வயசுல, செருப்பில்லாமல் ஊரில் நடப்போம். இப்ப நடந்தா கால் பொத்துடும். இயற்கையான மணலை சூடுபடுத்தினால் குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் போகாது. எவ்வளவு சூடுபடுத்தினாலும் அதே வெப்பநிலையில் இருக்கும். கார்னெட் சுரண்டலால் மணலின் இயற்கைத் தன்மை மாற்றப்பட்டதால், கதிரியக்கத் தன்மை உருவாகி மணலின் வெப்பம் பல மடங்கு அதிகரிச்சிருச்சு" என்றார்.
வேளாண் விஞ்ஞானி ஆர்.எஸ். லால்மோகன், "மோனோசைட்டை தனியார் வைத்திருக்கக் கூடாது. அது சட்டவிரோதம், சமூகவிரோத செயல். மோனோசைட்டில் தோரியம் இருப்பதால் இதற்கு சர்வதேச சந்தையில் நல்ல விலை கொடுக்கிறார்கள். இதனால், இங்கிருந்து சட்டவிரோதமாக கன்டெய்னர்கள் மூலம் மோனோசைட்டை கடத்துறாங்க.
இங்குள்ள கார்னெட் கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எந்தவித தடுப்புக் கவசங்களும் இல்லை. இதனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துட்டு இருக்காங்க. இப்பகுதியில் கதிர்வீச்சு இருக்கதால கழலைக் கட்டி, இதய நோய்கள், வால்வு பிரச்னைகள் வரும். கேன்சர் வரலாம். நாங்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் 31 பேரும் , தோவாளையில் 12 பேரும், நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 42 பேரும் மூளை குன்றிய பிள்ளைகள் இருக்கிறார்கள். கதிரியக்கமானது மரபணுக்களைத் தாக்கி, அடுத்த தலைமுறைக்கும் புற்றுநோயைக் கடத்தும். இது தொடர்பாக பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால், பயத்தால் முடிவுகளை வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள்" என்கிறார்.
முன்னாள் அரசுச் செயலரும், நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சியருமான சுந்தரம், "அந்த முக்கிய நிறுவனம் பல ஆயிரம் கோடிக்கு கார்னெட் மணலை சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தி இருக்கிறது. அதுகுறித்த ஆவணங்களை நான் திரட்டினேன். மூன்று மாவட்டங்களிலும் நடந்த கடற்கரை மணற்கொள்ளை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் 1500-க்கும் மேற்பட்ட புகார்களை அளித்தேன். தமிழக அரசின் தலைமைச் செயலர் தொழில்துறை செயலர் உள்ளிட்டவர்களுக்கும் மனு அனுப்பினேன் எந்த நடவடிக்கையும் இல்லை.
அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.96,120 கோடி
2011 மே மாதம் வரை தமிழ்நாட்டில் 43 உரிமங்கள் கடற்கரை மணல் எடுக்க வழங்கப்பட்டிருந்தன. அவற்றில் 36 வைகுண்டராஜனின் நிறுவனங்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மேலும் எட்டு உரிமங்களை வைகுண்டராஜனுக்கு கொடுத்தார்கள். 1999-ம் ஆண்டிலிருந்து அந்த முக்கிய நிறுவனத்தால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 96,120 கோடி ரூபாய். கார்னெட் நிறுவனங்களுக்காக அரசு புறம்போக்கு நிலங்கள் மிகவும் சொற்பமான தொகைக்கு 30 ஆண்டுகால லீசுக்கு விடப்பட்டுள்ளன. 1996ல் நெல்லை மாவட்டம் , இருக்கன் துறை கிராமத்தில் 34.35 ஹெக்டோ் கடற்கரை புறம்போக்கு நிலத்தை ஆண்டுக்கு வெறும் 16.74 ரூபாய்க்கு வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். இப்படி பல இடங்களில் அரசின் கடற்கரை புறம்போக்கு நிலங்கள் மணல் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன.
2007-ம் ஆண்டுதான் இல்மனைட், ரூடைல், சிர்கான் போன்ற அரிய கனிமங்களுக்கு அணுசக்தி சட்டம், 1962-லிருந்து விலக்களிக்கப்பட்டது. ஆனால் இவற்றை, 1998-லிருந்து ஏற்றுமதி செய்வதாக அந்த முக்கிய நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான வரியையும் அந்த நிறுவனம் செலுத்தவில்லை" என்றார்.
விதிமீறல்கள் என்னென்ன...
கார்னெட் மணலை சுத்திகரிக்கும்போது கிடைக்கும் மோனோசைட்டை திரும்ப அரசிடம் ஒப்படைக்கவில்லை. இது அணு சக்தி சட்டம் 1962 ற்கு முரணானது . மோனோசைட் போன்ற கதிர்வீச்சு கனிமங்களைப் பிரித்தெடுக்க அணுசக்தித் துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. இதுவும் அணுசக்தி சட்டம் 1984 ற்கு முரணானது.
மோனோசைட்டில் தோரியம் உள்ளதால் மோனோசைட் கையாளப்பட்டது தொடர்பான ஆண்டறிக்கை அணுசக்தித் துறைக்கு ஒவ்வோராண்டும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வறிக்கை கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் கார்னெட் நிறுவனங்கள் முறையான அனுமதி பெறவில்லை. கார்னெட் ஏற்றுமதிக்கு முன்பாக அணுசக்தித் துறையின் கனிமப்பிரிவிடம் மாதிரிகளை அனுப்பி மோனோசைட் இல்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும். அவ்வாறு பெறப்படவில்லை. பாதுகாக்கப்பட்ட நிலங்கள், காடுகளில் கனிமங்கள் எடுப்பது சட்டப்படி குற்றம். கார்னெட் நிறுவனங்கள் இந்த குற்றத்தைத் தெரிந்தே செய்திருக்கின்றன.
தமிழ்நாடு சிறு கனிம சட்டம் 1959 விதி 36(C)-ன்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி, தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி தொழில் செய்ய வேண்டும். கார்னெட் நிறுவனங்கள் இதையும் கண்டுகொள்ளவில்லை.
உண்மை அறியும் குழு என்ன சொல்கிறது..
கார்னெட் நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கம் குறித்தும் அவர்களின் அத்துமீறல்களால் உருக்குலைந்து கிடக்கும் மீனவ கிராமங்கள் குறித்தும் ஐந்து நாட்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு.
இதுகுறித்து வாஞ்சிநாதனிடம் பேசினோம். "மூன்று மாவட்ட கடலோர கிராமங்களிலும் கார்னெட் மாஃபியாக்கள் கைக்கூலிகளை வைத்து பொது அமைதியை குலைத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு காரணமான கார்னெட் அதிபர்கள் மீது குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்னெட் மணல் நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்திற்காக அரசின் பல்வேறு சட்டங்களை மீறிய குற்றங்களை இழைத்துள்ளன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலை ஊட்டி வளர்த்த உள்ளூர் அதிகாரிகளை வைத்து இந்த முறைகேடுகளை விசாரிப்பது கண்துடைப்பு நாடகம். மத்திய மாநில அரசுகளும் இதில் குற்றவாளிகளாக இருப்பதால் ஸ்பெக்ட்ரம் வழக்கைப் போல உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழுவால் இந்த முறைகேடுகள் விசாரிக்கப்பட வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் போல, அரசு இத்தொழிலை நடத்தி சந்தை விலைக்கு கனிமங்கள் விற்கப்பட்டிருந்தால் இவ்வளவு தொகை கிடைத்திருக்கும் என்ற முறையில் இழப்பீடு கணக்கிடப்பட வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் 2 மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டதில் 1,95,300 டன் தோரியம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு அளவிட முடியாதது. கார்னெட் நிறுவனங்கள் மோனோசைட்டைக் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஆகவே இதுவரை பிரித்தெடுக்கப்பட்ட மோனாசைட் குறித்து அணு விஞ்ஞானிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண்டும். கார்னெட் மணல் நிறுவனங்களின் சட்டவிரோத மணல் கொள்ளையால் மீனவர்களுக்கு புற்றுநோய், சிறுநீரக நோய், தோல்நோய், எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய சிகிச்சையும், இழப்பீடும் வழங்க வேண்டும். இந்த முறைகேடுகளில் சம்பந்தபட்ட அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டவிரோதமாக கார்னெட் மணலை கொள்ளையடித்த நிறுவனங்களின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். ககன்தீப் சிங்கின் அறிக்கையை உடனடியாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்றார்.
என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
*
கொள்ளை போகும் கனிமங்கள்...
தென் மாவட்ட கடற்கரைகளில் உள்ள கார்னெட், இல்மனேட், ரூடைல், சிர்கான், மோனோசைட் ஆகிய கனிமங்கள் மிகவும் அரிய வகையைச் சேர்ந்தவை. ஊட்டி முதல் கன்னியாகுமரி வரையுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து ஆறுகளால் கடத்தி வரப்பட்ட இந்தக் கனிமங்கள், தென் மாவட்டக் கடற்கரைகளில் குவிந்துள்ளன. பல லட்சம் வருடங்களாக குவிக்கப்பட்ட இந்தக் கனிமங்கள் தான் இப்போது கொள்ளைபோய்க் கொண்டிருக்கின்றன.
கார்னெட்
மாசு இல்லாத இந்தக் கனிமம் கோமேதகம் வகையைச் சேர்ந்தது. உப்புக்காற்றால் சேதமடைந்த கப்பல்கள், கட்டிடங்கள், சிலைகளைத் தூய்மைப்படுத்த, கண்ணாடி, செயற்கை கற்கள், அலுமினியம், டைட்டானியத்தைத் துண்டிக்க, நீரை சுத்தப்படுத்த, கணினித் திரை, மூக்குக் கண்ணாடி, வால்வுகள் பாலீஷ் செய்ய இப்படி பலவகைகளில் கார்னெட் பயன்படுகிறது.
இல்மனைட்
தேவை அதிகம் உள்ள இக்கனிமம் பெயின்ட், பிளாஸ்டிக் உயர்தர காகிதம், வெல்டிங்ராடு, டைட் டானியம், அணுசக்தி நீர்மூழ்கிக் கட்டமைப்பு, விளையாட்டு, மருந்து, அழகு சாதனப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.
சிர்கான்
18,000 சென்டிகிரேடு வெப்பத்தில் மட்டுமே உருகும் தன்மை கொண்ட சிர்கான் உருக்கு, வார்ப்பு தொழிற்சாலைகள், செராமிக் டைல்ஸ், இரும்பு, உருக்கு ஆலைக் கற்கள் தயாரிக்க, துருப்பிடிப்பு மற்றும் அரிப்பைத் தடுக்க பயன்படுகிறது. அணுஉலைக் கட்டமைப்பில், மருந்து, சமையல் பாத்திரங்கள், குளியலறை- கழிவறை உபகரணங்கள் தயாரிப்பிலும் சிர்கான் பயன்படுத்தப்படுகிறது.
ரூடைல்
டைட்டானியத்தின் மூலப்பொருள் இது. பெயின்ட், பிளாஸ்டிக், ஜவுளி உற்பத்தி, வெல்டிங்ராடு, நகை, விண்வெளி உபகரணங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
மோனோசைட்
தோரியத்தை உள்ளடக்கிய கனிமம் இது. அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago