மதுரை காவல் நிலையத்தில் தொழிலாளி சாவு: போலீஸார் அடித்துக் கொன்றதாகப் புகார்
மதுரை காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, கவிமணி தெருவைச் சேர்ந்த யாகவேல் மகன் சத்தியமூர்த்தி (38). கடலை மாவு வியாபாரம் செய்து வருகிறார். திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் விநியோகம் செய்த மாவுக்கான தொகை ரூ.15 லட்சத்தை வசூல் செய்து கொண்டு கடந்த 18-ம் தேதி அதிகாலை மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்தார். அங்கிருந்து அவர் இருசக்கர வாகனத்தில் வீடு சென்றபோது, காரில் வந்த சிலர், காமராஜர் சாலையில் சத்தியமூர்த்தியை வழிமறித்து தாக்கி ரூ.15 லட்சத்தை பறித்துச் சென்றனர்.
இது சம்பந்தமாக தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், வெங்கலக் கடை தெருவில் சுமை தூக்கும் தொழி லாளர்களான செல்லூர் மேலத்தெரு பொன்ராஜ் காலனியைச் சேர்ந்த சீனி வாசன் (45) உள்ளிட்ட சிலருக்கும், சத்தியமூர்த்திக்கும் இடையே கூலி தொடர்பாக சமீபகாலமாக பிரச்சினை இருந்துள்ளது. எனவே சீனிவாசனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்று விசாரித்தனர். அழைத்தவுடன் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரை வீட்டிற்கு அனுப்பினர்.
பின்னர், குற்றப்பிரிவு போலீஸார் சீனிவாசனை புதன்கிழமை இரவு செல்போனில் தொடர்பு கொண்டு, உடனே போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறியுள்ளனர். அதை ஏற்று, சீனிவாசன் தனது டூவீலரில் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து அவரை விளக்குத்தூண் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வெள்ளிக்கிழமை காலை வரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், போலீஸ் ஸ்டேஷன் கழிவறைக்குள் சீனி வாசன் வெள்ளிக்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, விளக்குத்தூண் போலீஸார் அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி னர். தகவலறிந்த அவரது மனைவி உமா, மகன்கள் நீதிராஜன், அரவிந்த், மகள் சவுமியா மற்றும் உறவினர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
ஆனால், சடலத்தைப் பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்க வில்லை. எனவே அவர்கள் அங்கி ருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து இது குறித்து மனு அளித்தனர். பின்னர் சீனிவாசனின் மூத்த மகன் நீதிராஜன் கூறியதாவது: "தற்கொலை பண்ற அளவுக்கு எங்கப்பா கோழை இல்லை. போலீஸ்காரங்க அவர அடிச்சு கொன்னுட்டாங்க. அதனால உடம்பைக்கூட எங்கட்ட காட்ட மாட்டேங்கிறாங்க" என்றார்.
இது குறித்து மதுரை மாநகர குற்றப்பிரிவு துணைக் கமிஷனர் தமிழ்ச்சந்திரனிடம் கேட்டதற்கு, 'மாநகர நுண்ணறிவுப் பிரிவில் இருந்து பிறகு தகவல் தெரிவிக்கப்படும்' எனக் கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார்.