சினிமா ஆசையில் வந்தவரை சிறைக்கு அனுப்பிய காவல்துறை

சென்னைக்கு நாளை நரேந்திர மோடி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருவொற்றியூரில் ஒரு லாட்ஜில் சோதனை நடத்தியபோது 20 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணத்துடன் ஒருவர் தங்கி இருந்தார். அவரை விசாரித்தபோது சரியான பதில்களை கூறவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆய்வாளர் கோபிநாத் மற்றும் காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, "பிடிபட்டவரின் பெயர் நூருல் அமீது (வயது41). பட்டுக்கோட்டை மாவட்டம், அபிராமபட்டணம் புதுமனை தெருவில் வசிக்கிறார். இவருக்கு ஜிரோரியா என்ற மனைவியும், ஷகீனா (10), முகமது (7), எட்டு மாத குழந்தை கதீஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர். பட்டுக்கோட்டையில் ஓட்டல் கடை வைத்திருந்தவர், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் சென்னைக்கு சென்று சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று கூறி, தெரிந்த கவுன்சிலர் ஒருவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி, மேலும், மனைவியின் 20 சவரன் நகைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டு விட்டார்.

ஆனால் நூருல் அமீது சென்னை வராமல், கன்னியாகுமரி, மதுரை, ஊட்டி என்று ஊர் சுற்றி பார்த்திருக்கிறார். அனைத்து இடங்களுக்கும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு சென்று ஓட்டல்களில் தங்கி, தினமும் மது வாங்கி குடித்து பணத்தை செல வழித்திருக்கிறார். கடைசியாக சென்னை வந்த நூருல், திருவொற்றியூரில் ஒரு லாட்ஜில் தங்கி இருக்கிறார். திருவொற்றியூர் அருகே குமரன் நகரில் இருக்கும் ஒரு ஐடிஐயில் நூருல் படித்திருக்கிறார். இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த சிலர் நூருக்கு நண்பர்களாக உள்ளனர்.

சென்னையில் தங்கி இருக்கும் நூருல், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மது, சினிமா என்று பணத்தை செலவு செய்து குடும்பத்தை பற்றிய கவலையே இல்லாமல் சந்தோஷமாக இருந்திருக்கிறார். செலவு செய்ததுபோக மீதி ரூ.2 லட்சம் பணம் மற்றும் கொஞ்சம் நகைகள் மட்டும்தான் அவரிடம் மீதி இருந்தது.

நூருல் பற்றி பட்டுக்கோட்டையில் விசாரித்தபோது, கடன் வாங்கிக் கொண்டு ஊரை விட்டு வந்துவிட்டதால் பலர் அவரை தேடி வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. இருந்தாலும் அவர் வைத்திருந்த பணத்திற்கும், நகைகளுக்கும் சரியான ஆவணங்கள் இல்லாததால் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்து விட்டோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE