ஏற்காடு இடைத்தேர்தலால் தள்ளிப்போகும் கலெக்டர் மாநாடு

ஏற்காடு இடைத்தேர்தலுக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களின் மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆண்டுதோறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள் கலந்து கொள்வர். முதல் நாள், மாநாட்டை முதல்வர் தொடங்கி வைத்து பேசுவார். அதைத் தொடர்ந்து அரசு நலத்திட்டங்கள், துறை வாரியான திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலாளர் மற்றும் இதர அரசுத் துறைகளின் செயலாளர்கள் விவாதிப்பார்கள்.

மறுநாள் கூட்டத்தில், காவல் துறை அதிகாரிகள் தங்களது மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கை கள் குறித்து விவாதிப்பார்கள். இறுதி நாளில், கூட்டுக் கூட்டம் நடைபெறும்.

இடைத்தேர்தலுக்கு பிறகு..

இந்த மாநாடு வழக்கமாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடத்தப்படும். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில்தான் மாநாடு நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் ஆட்சியர் மாநாடு தள்ளிப் போகிறது.

இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

டிசம்பர் மாதத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு, நடக்கக்கூடும். ஏற்காடு இடைத்தேர்தல் நடக்கவுள்ளதால் அதற்குப் பிறகு மாநாட்டை நடத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இடைத்தேர்தலுக்கு முன்பு மாநாட்டை நடத்தினால் சேலம் மாவட்ட ஆட்சியரை அழைப்பதில் சிக்கல் ஏற்படும். புதிய அறிவிப்புகளை வெளியிடும்போது தேர்தல் நடத்தை விதி மீறல் உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, டிசம்பரில் நடத்தினால் பிரச்சினைகள் இருக்காது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த மாதம் தேர்தல் துறை சார்பில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் எல்லா மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துவிட்டு சென்றதாகத் தெரிகிறது.

சேலம் ஆட்சியருக்கு சிக்கல்?

ஏற்காடு இடைத்தேர்தல் விவகாரத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் மீது திமுகவினர் தொடர்ந்து இரண்டாவது முறையாக புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே, திமுகவினர் அளித்த புகார் அடிப்படையில் தமிழக அமைச்சர் வீரமணியை தேர்தல் ஆணையம் எச்சரித்தது. இப்போது மாவட்ட ஆட்சியர் மீது தொடர்ந்து இரண்டாவது முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளதால், அவரது நடவடிக்கைகளையும் தேர்தல் துறை கண்காணிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE