உள்ளாட்சி: நெடுவாசல் போராட்டக் களத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!

By டி.எல்.சஞ்சீவி குமார்

1947-ம் ஆண்டு இடஒதுக் கீட்டை அமல்படுத் தியது சென்னை மாகாண அரசு. நாடு முழுவதும் பிராமணர்கள் கொந் தளித்தார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலரும் எதிர்த்தார்கள். இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக் குகள் தொடரப்பட்டன. இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தை உருவாக்கிய வர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே நீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வாதிட்டார்.

இடஒதுக்கீட்டை ரத்து செய்தது நீதிமன்றம். தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. அப்போது காங்கிரஸ் தலைவரான காமராஜர், நேருவை சந்தித்து துணிச்சலாக தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்து வைத்தார். வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார் நேரு. மீண்டும் கிடைத்தது இடஒதுக்கீடு.

ஒருமுறை தமிழகம், கர்நாடகம், கேரளத்தை ஒருங்கிணைத்து ஒரே மாநிலமாக்க முயன்றது மத்திய அரசு. கர்நாடகம், கேரள முதல்வர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் காமராஜர் சரி என்று சொல்லியிருந்தால் பெரும் பிரதேசத்துக்கு அவரே முதல்வராகி இருப்பார். ஆனால், தமிழகத்தின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று திட்டத்தையே ரத்து செய்தார் காமராஜர். இந்தி திணிப்பில் மத்திய அரசு மிகத் தீவிரமாக இருந்த போதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியைக் கூட்டி தமிழகத்துக்கு ஆதரவாக தீர்மானம் போட வைத்தார் காமராஜர்.

சரி, இப்போது எதற்காக இந்த வரலாறு? தமிழகத்தில் பாஜக பிரமுகர்களின் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை பார்க்கும்போது வரலாற்றை நினைவுகூர வேண்டி யிருக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களைப் பொறுக்கி என்கிறார் ஒருவர். ஆர்.கே. நகர் தொகுதியில் பாஜக-வை வெற்றி பெற வைத்தால் அந்தத் தொகுதியை பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவோம் என்று மிரள வைக்கிறார் ஒருவர்.

விவசாயிகளுக்கு நிவாரண உதவி குறித்து கேள்வி எழுப்பினால் தேசத் துரோகி என்கிறார் ஒருவர். ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்று மத்திய அமைச்சர் ஒருவர் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே டெல்லி யில் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந் தத்தில் கையெழுத்திடுகிறது மத்திய அரசு. மத்திய அரசிடம் இவர்களுக்கு எந்த அதிகாரம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

உண்மையில் நமக்கு வாய்த்த தமிழக பாஜக தலைவர்கள், கட்சிக்கும் தாங்கள் வகிக்கும் பதவிக்கும் வாய்த்த அடிமைகள். அதுவும் பெரும்பான்மை பலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒரு தேசிய கட்சியில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய சுகபோகங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை; அவை ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, கெயில், கூடங்குளம் இவற்றை எல்லாம் மறக்கடிக்கச் செய்பவை.

மக்களை வஞ்சிப்பதில் இவர் களுக்கு எல்லாம் சற்றும் சளைத்த வர்கள் இல்லை தமிழக ஆட்சியா ளர்கள். இதனால்தான் இவர்கள் யாரையும் நம்பாமல் இந்திய அரசியல் சாசன சட்டத்தை நம்பி நேற்றைய தினம் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் நெடுவாசல் மற்றும் வடகாடு கிராம மக்கள். ஆம், நெடுவாசல், வடகாடு சுற்றுவட்டார கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று முதல்முறையாக கிராம சபையைக் கூட்டி தீர்மானம் இயற்றி இருக்கிறார்கள். எப்படி சாத்தியமானது இது?

நெடுவாசல் போராட்டம் உச்சத்தில் இருந்தபோதே அங்கு சிறப்பு கிராம சபையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவதற்காக பல்வேறு முயற்சிகள் நடந்தன. பல்வேறு ஊர்களைச் சேர்ந்த தன்னார்வலர் குழு உருவாக்கப்பட்டது. இவர்கள் வழிகாட்டுதலின்படி போராட்டத்தின் 11 அம்ச கோரிக்கைகளில் ஒன்றாக ‘ஹைட்ரோ கார்பன் திட்டம் நெடுவாசல் சுற்றுவட்டார கிராமங்களில் செயல்படுத்தக் கூடாது என்கிற தீர்மானத்தை நிறைவேற்ற சிறப்பு கிராம சபையைக் கூட்ட வேண்டும்’ என்று மக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத் தார்கள். ஆனால், அனுமதி மறுக்கப் பட்டது.

உண்மையில் பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்தால் சிறப்பு கிராம சபையைக் கூட்ட வேண்டியது ஊராட்சிகளின் ஆய்வாளரான மாவட்ட ஆட்சியரின் பொறுப்பு.

இந்த நிலையில்தான் கடந்த 27-ம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் வருகின்ற மே 1-ம் தேதி அன்று கட்டாயமாக நடத்தியாக வேண்டிய கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் இயற்றலாம் என்று மக்கள் முடிவு செய்தார்கள். இதற்கிடையே மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டதில் பசுமை வீடுகள் கட்டப்பட்டது தொடர்பான கிராம சபைக் கூட்டத்தை மார்ச் 31-ம் தேதி அன்று கூட்ட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மேற்கண்ட கிராமங்களுக்கு சுற்றறிக்கை அனுப் பினார்.

அன்றைய தினம் கூட்டத் தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றலாமா? அவ்வாறு நிறைவேற்றினால் செல்லுபடியாகுமா என்று கிராம மக்கள் சட்ட வல்லுநர்கள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள், பேராசிரியர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி னார்கள். இதில் கிராம சபை எந்த நோக்கத்துக்காக கூட்டப்பட்டா லும் அதில் தீர்மானம் நிறைவேற்றி பெரும்பான்மையினர் கையெழுத்திட் டால், அது சட்ட ரீதியாக செல்லு படியாகும் என்று தகவல் உறுதி செய்யப்பட்டது.

அதன்படி நேற்றைய தினம் (மார்ச் 31) காலை நெடுவாசல் மற்றும் வடகாடு ஆகிய கிராமப் பஞ்சாயத்துகளில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில், “நெடுவாசல் கிழக்கு மற்றும் நெடுவாசல் மேற்கு உட்பட 10.1 சதுர கி.மீ. சுற்றுவட்டாரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 9 (பஞ்சாயத்துகள்) அடிப்படையில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது கிராம பஞ்சாயத்தின் அடிப்படை உரிமையாகும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பட்டியல் 11-ன் படி கிராம மக்களின் வாழ்வாதாரங்களான வேளாண்மை, நீர் மற்றும் நில பாதுகாப்பு கிராம பஞ்சாயத்து மற்றும் மக்களின் உரிமையாகும். உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில், கிராமத்தின் இயற்கை வளங்கள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் உரிமை மற்றும் கடமை கிராம சபைக்கு உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் படிமங்களிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது எங்களின் அடிப்படை உரிமையை மீறுவது மட்டுமின்றி வாழ்வுரிமையையும் நசுக்கும் செயலாகும். எனவே இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என்பது உட்பட விரி வான தகவல்களை பதிவு செய்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

இது நெடுவாசல் கிராமத்தின் பிரச்சினை தொடர்பான தீர்மானம் மட்டும் அல்ல; அடுத்தடுத்த அபாயத் திட்டங்களில் இருந்து தமிழகத்தை காக்கச் செய்யும் முன் மாதிரி தீர்மானம் இது. தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய தீர்மானம் இது. கேரளத்தில் பிலாச்சிமடா மக்களுக்கு வெற்றியைத் தேடித் தந்த தீர்மானம் இது.

ஒடிசா நியமகிரியில் வேதாந்தா நிறுவனத்தை விரட்டியடித்த தீர்மானம் இது. கோவாவில் பன்னாட்டு நிறுவனத்தைத் தடுத்து நிறுத்திய தீர்மானம் இது. குத்தம்பாக்கத்தில் தமிழக அரசை பின்வாங்க வைத்த தீர்மானம் இது. வரலாற்றுத் தீர்மானம் இது. நெடுவாசல் போராட்டக் களத்தின் முதல் வெற்றியும் இதுவே!.

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்