பால் விலை உயர்வைக் கண்டித்து போராடும் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யக் கோரிய வழக்கு: பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பால் விலை உயர்வைக் கண்டித்து போராடும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் திமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பழனி அருகே கணக்கன் பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் ராமசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துபோனதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் விவசாய குடும் பங்களை காப்பாற்றிவரும் ஒரே ஜீவாதாரமாக அவர்கள் வளர்க்கும் கறவை மாடுகள் மட்டுமே உள்ளன. சுமார் 73 லட்சம் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த தொழிலை நம்பியே உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் மாட்டுத்தீவனத்தின் விலை 3 மடங்குக்கு மேல் அதிகரித்து விட்டது. இதனால் சாதாரண விவசாய குடும்பங்கள் தங்களின் மாடுகளை வளர்க்க முடியாமல் அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு விவசாயத்தைத் தவிர்த்து வேறு பணிகளுக்கு செல்லும் சூழல் ஏற்பட்டு வந்தது.

தற்பொழுது தமிழக அரசு பால் விலையை ஏற்றியுள்ளது. இந்த செய்தி விவசாயிகளுக்கு சென்றடைவதற்கு முன்பே சில அரசியல் கட்சிகள் பால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், போராட் டங்கள் நடத்துகின்றன. கறவை மாடுகளுக்கு கொடுக்கப்படும் தீவனங்கள் விலை உயர்வைக் கண்டிக்காத அரசியல் கட்சிகள் பால் விலை உயர்வைக் கண்டித்து அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடத்துகின்றன.

தமிழகத்தில்தான் பால் விலை மிகக் குறைவாக உள்ளது. எனவே பால் விலைக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகளின் அங்கீ காரத்தை ரத்து செய்ய மாநில தலைமைத் தேர்தல் ஆணை யருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலர், திமுக பொதுச் செயலர், பாமக தலைவர், தேமுதிக தலைவர் ஆகியோர் டிசம்பர் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE