மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குக: அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

தமிழக அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி ஆணை வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: " தமிழக அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி ஆணை வழங்க வேண்டும் என்று ஆகஸ்ட் 19 இல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த மூன்று முறையும் தி.மு.க. ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டிருந்த மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. தி.மு.க. ஆட்சியில் முதல் முறையாக 2.7.1990 இல் 25,234 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். அடுத்துப் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு 13.7.1991 இல் அவர்களை பணி நீக்கம் செய்தது. மீண்டும் தி.மு.க. ஆட்சியில் 15.9.1996 இல் நியமிக்கப்பட்ட 18 ஆயிரம் பேரை அ.தி.மு.க. அரசு 31.5.2001 இல் பணி நீக்கம் செய்தது.

மூன்றாவது முறையாக ஜூலை 2006 இல் 13,500 மக்கள் நலப் பணியாளர்களை தி.மு.க அரசு நியமித்தது. ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றவுடன் 2011 நவம்பர் 8 இல் பணி நீக்கம் செய்தது. தமிழக அரசின் பணி நீக்க உத்தரவை எதிர்த்து, மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுகுணா அவர்கள், தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மாண்புமிகு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நவம்பர் 28, 2011 இல் தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காத ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் லோக் ஆகியோர் இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு வழக்கறிஞரிடம் கடும் கண்டனம் தெரிவித்தனர். “மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்வது தொடர்பாக முன்னறிவிப்புக் கொடுக்கப்படாதது ஏன்? ஒரே உத்தரவின் மூலம் பணி நீக்கம் செய்தது சட்டவிரோதமானது. மக்கள் நலப் பணியாளர்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நியமிப்பதும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீக்குவதும் கால்பந்து விளையாட்டாகப் போய்விட்டது. தமிழகத்தில் என்ன நடக்கிறது? சட்டத்தின் ஆட்சி நடப்பதாகவும் தெரியவில்லை” என்று கடுமையாகத் தெரிவித்தனர்.

இதன்பின்னரும்கூட, தமிழக அரசு மக்கள் நலப் பணியாளர்களின் பணி நீக்க உத்தரவை திரும்பப் பெறவில்லை. இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுகுணா அவர்கள் இந்த வழக்கில் தனது இறுதித் தீர்ப்பை ஜனவரி 23, 2012 இல் வழங்கினார். அதில், மக்கள் நலப் பணியாளர்களின் பணி நீக்கம் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்வதாகவும், உடனடியாக அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் ஜெயலலிதா அரசு, மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரியது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய அமர்வு மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஐந்து மாத ஊதியம் வழங்க வேண்டும், தமிழக அரசின் பணி நீக்க ஆணை செல்லும் என்று 26.4.2012 இல் தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனே உச்ச நீதிமன்றம் சென்றனர். இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நவம்பர் 12, 2013 இல் தீர்ப்பு அளித்தது. அதில், மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை இரத்து செய்வதாகவும், உயர்நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரணை செய்து 6 மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையை நடத்திய நீதிபதிகள் என்.பாலவசந்தகுமார், எம்.சத்தியநாராயணா ஆகியோர் ஆகஸ்ட் 19 அன்று தீர்ப்பு அளித்தனர்.

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும், மதுவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிராச்சாரத்திற்கு அவர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசின் அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை மக்கள் நலப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். அக்டோபர் 31, 2014 க்குள் தமிழக அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் மூன்றாவது முறையாக மக்கள் நலப் பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தியதை தமிழக அரசு ஏற்று செயல்பட வேண்டும்.

மக்கள் நலப் பணியாளர்கள் மிகக் குறைந்த தொகுப்பு ஊதியம் பெற்று வந்தனர். 1990 இல் தொகுப்பு ஊதியம் மாதத்திற்கு ரூபாய் 200 ஆகவும், 2001 இல் ரூபாய் 500 ஆகவும், 2006 இல் தொகுப்பு ஊதியம் ரூபாய் 1000 ஆகவும் வழங்கப்பட்டது. இந்தச் சொற்ப வருமானமும் பறிக்கப்பட்டவுடன், மக்கள் நலப் பணியாளர்கள் 19 பேர் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்ட சோகமும் நிகழ்ந்துள்ளது.

எனவே, மக்கள் நலப் பணியாளர் குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்திட கருணையோடும், மனிதநேயத்தோடும் இந்தப் பிரச்சினையில் நடவடிக்கை மேற்கொண்டு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி ஆணை வழங்க முன்வரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்