முதல்வருடன் அமெரிக்க, ஜப்பான் குழுவினர் சந்திப்பு: தமிழகத்தில் முதலீடு செய்ய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னர் மற்றும் ஜப்பான், இந்தியக் கூட்டுறவு வர்த்தகக் குழு அதிகாரிகள், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்துப் பேசினர்.

தமிழக அரசு நடத்தவுள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட் டில் பங்கேற்குமாறு, அவர் களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னர் நிக்கி ஹேலே, மேயர் மைக்கேல் ஹேலே, சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரி பிலிப் ஏ மின் மற்றும் அதிகாரிகள் குழுவினர், முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசினர்.

அப்போது தமிழகமும், அமெரிக்காவும் வர்த்தக உறவில் வலுவான நட்புறவில் இருப்பதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார். போர்டு, கேட்டர்பில்லர், டெல் போன்ற பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ததற்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தில் உலகில் இல்லாத அளவுக்கு, திறமை வாய்ந்த மனித வளம் மற்றும் தொழில் முதலீட்டுக்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளதால், தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு முதல்வர் பன்னீர்செல்வம் தெற்கு கரோலினா கவர்னருக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் தெற்கு கரோலினா மாகாண முதலீட்டாளர்களுடன் பங்கேற்கவும் முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.

இதேபோல், ஜப்பான் இந்திய வர்த்தக் கூட்டுறவு அமைப்பின் தலைவர் மியூனியோ குரவ்ச்சி தலைமையில் தென் மேற்கு ஆசிய பிரிவு மண்டல ஒருங்கிணைப்பாளர் மசாயுகி டாகா மற்றும் ஜப்பான் அதிகாரிகள், முதல்வர் பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்துப் பேசினர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 இலக்கைத் தொடும் நோக்குடன், தமிழகத்தை உலகின் உற்பத்தி மையமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும், இதற்கு ஜப்பானின் ஜைகா நிறுவனம் உள்ளிட்ட ஜப்பான் நிறுவனங்கள் நல்ல முறையில் கூட்டாக செயல்படுவதாகப் பாராட்டினார். கடந்த 2011ல் 286 ஜப்பான் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்த நிலையில், தற்போது 583 நிறுவனங்களாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

இந்த நிறுவனங்கள் எண்ணிக்கை 600 ஐத் தாண்டும் வகையில், இன்னும் பல முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யத் தமிழக அரசு தயாராக உள்ளதாக, முதல்வர் பன்னீர்செல்வம், ஜப்பான் குழுவிடம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் மே மாதம் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் ஜப்பான் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

இதற்கு சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை இன்னும் சிறப்பாக நடத்துவதற்கு உதவும் வகையில், தமிழக பிரதிநிதிகள் குழு ஜப்பானுக்கு வந்து அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க, ஏற்பாடு செய்வதாக ஜப்பான் குழுவினர் தெரிவித்தனர்.

சென்னை- பெங்களூரு தொழிற்தடம், மதுரை தூத்துக்குடி தொழிற்தடம் திட்டங்கள் குறித்தும், தமிழகத்தில் உள்கட்டமைப்பு முதலீடுகளை ஜப்பான் மேற்கொள்வது குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

இச்சந்திப்பில் தமிழக தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், நிதித்துறை முதன்மைச் செயலர் உதயச்சந்திரன், சிறப்புத் திட்டங்கள் துறை முதன்மைச் செயலர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE