தூத்துக்குடி துறைமுகக் கழக முன்னாள் தலைவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டன.
தூத்துக்குடி துறைமுகக் கழக முன்னாள் தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஏ.சுப்பையா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.8.23 கோடி சொத்து குவித்ததாக சிபிஐ போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கில் விவி மினரல்ஸ் பங்குதாரர்கள் வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோர் 6, 7-வது எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சுப்பையா, அவரது தாயார் ஜானகி, சகோதரர் ஜெயராமன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பதற்கு உதவியதாக வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன், சிபிஐ ஆய்வாளரின் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அதன் விவரம்: தூத்துக்குடி துறைமுகக் கழக முன்னாள் தலைவர் ஏ.சுப்பையா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ போலீஸார் 2012 டிச. 24-ல் வழக்கு பதிவு செய்தனர். இவர் 2007 முதல் 2012 வரை துறைமுகக் கழக தலைவராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8.23 கோடி சொத்து சேர்த்துள்ளார்.
சுப்பையா மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததில் விவி மினரல்ஸ் பங்குதாரர்கள் வைகுண்டராஜன், அவரது தம்பி ஜெகதீசன் ஆகியோருக்கும் பங்கு உண்டு. சுப்பையாவின் தாயார் ஜானகி, சகோதரர் ஜெயராமன் ஆகியோருக்கு காஞ்சிபுரம் தனியார் வங்கி கிளையில் உள்ள கணக்கில் வைகுண்டராஜன், ஜெகதீசன் இருவரும் 2008 நவம்பர் முதல் 2011 நவம்பர் வரை ரூ.7.5 கோடி செலுத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் துறைமுகத்தில் தொழில் நடத்தி வருகின்றனர். அப்போது சுப்பையா துறைமுகக் கழக தலைவராக இருந்துள்ளார்.
இந்த பணத்தை விருதுநகர் மாவட்டம் கரிசல்குளம் கிராமத்தில் ஜானகி, ஜெயராமன் ஆகியோர் பெயரிலுள்ள சொத்தை வாங்குவதற்கு கொடுத்ததாக இருவரும் கூறியுள்ளனர். ஆனால், கரிசல்குளத்தில் சொத்தின் மதிப்பு ரூ.7.5 கோடி அளவுக்கு இல்லை. லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதற்காக சொத்தின் மதிப்பை அதிகமாக காட்டி வங்கி பரிவர்த்தனை மூலம் லஞ்சப் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளனர். காசோலை மூலம் பணம் வழங்கியதாக கூறுவது மோசடி. காசோலை மூலம் சொத்து வாங்கினாலும், அதை வெளிப்படையாக நடைபெற்ற பரிமாற்றம் எனச் சொல்ல முடியாது.
பின்னர், சம்பந்தப்பட்ட சொத்தை வாங்கியதில் இரு தரப்பிலும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அவர்களாகவே தீர்ப்பாயம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த தீர்ப்பாயத்தில் பிரச்சினையை பேசி, சொத்து வாங்கியதற்காக கொடுத்த பணம் ரூ.7.5 கோடியை திரும்ப பெற்றதாகவும் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர். லஞ்சமாக பணம் கொடுத்ததை மறைக்க இவ்வாறு மோசடி செய்துள்ளனர்.
இதனால் வைகுண்டராஜன், ஜெகதீசன் இருவரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் தாங்கள் நேர்மையாக செயல் பட்டதாகக் கூறிக்கொண்டு லஞ்சம் கொடுத்துள்ளனர். இருவருக்கும் எதிராக முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளது. இருவரும் செல்வாக்கு மிக்கவர்கள். முன்ஜாமீன் வழங்கினால் ஆவணங்கள், ஆதாரங்களை அழிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago