ஈரோடு பட்டு வளர்ச்சித்துறையில் மானியம் வழங்குவதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் பாதியில் விசாரணையை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளனர். முறைகேட்டில் தொடர்புடையவர்களை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத்துறை முயற்சிப்பதாக, ஆதாரத்துடன் புகார் அளித்த நுகர்வோர் அமைப்பு நிர்வாகி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் பி.ஆர்.சின்னதுரை (71). இவர், கடந்த 2006 முதல் 2012-ம் ஆண்டு வரை கவுந்தப்பாடி பகுதியில் பட்டு வளர்ச்சித்துறை மூலம் எத்தனை விவசாயி களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் முழு விபரம் குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விளக்கம் கேட்டார். இந்த தகவல்களைப் பெற ரூ.340 கட்டணமாகவும் செலுத்தினார்.
பட்டு வளர்ச்சித்துறையின் பொது தகவல் அலுவலர் ராபர்ட் பன்னீர்செல்வம் அளித்த பதிலில், கவுந்தப்பாடி பகுதியில் 164 ஏக்கர் 20 செண்ட் நிலத்தில், பட்டு வளர்ப்புக்கு தேவையான மல்பெரி செடிக் காக 136 பேர் நடவு மானியம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டுக் கூடு மனை அமைப்பதற்கு 56 பேருக்கு மானியமும், 71 பேருக்கு உபகரணமும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்பெரி செடி வளர்க்க 136 பேருக்கு மானியம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பட்டு உற்பத்திக்கான மனை அமைக்க 56 பேருக்கு மட்டும் மானியம் வழங்கப்பட்டுள்ளது சின்னதுரைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுவளர்ச் சித்துறை குறிப்பிட்ட பயனாளிகள் உண்மையானவர்கள்தானா என்பதை அறிய, அதில் குறிப்பிடப்பட்ட சாகுபடி நிலங்கள் யாருக்கு சொந்தமானவை எனக்கேட்டு வருவாய்துறையில் ஆர். டி.ஏ.,வில் விண்ணப்பித்தார்.
அந்த விவரங்களில், விவசாயம் செய்யப்படாத தரிசு நிலம், நத்தம் புறம்போக்கு, நிலத்தின் உரிமையாளர் பெயரை தவறாக குறிப்பிடப்பட்டது, ஒரே நிலத்திற்கு இரண்டு பேருக்கு மானியம் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தமிழக முதல்வரில் துவங்கி, தலைமைச் செயலர், பட்டு வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத்துறை என அனைவருக்கும் ஆதாரத்தோடு கடந்த ஆண்டு புகார்களை அனுப்பியுள்ளார்.
அதன்பின் நடந்தவற்றை சின்னதுரையே கூறுகிறார்...
பட்டுவளர்ச்சித்துறையில் உயர் அதிகாரி ஒருவர் சென்னையில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் வந்தார். ‘உங்க குழந்தைங்க தப்பு செஞ்சா இப்படியா தண்டிப்பீங்க’ என்று செண்டிமெண்டாக பேசி, முறைகேட்டை மூடி மறைக்க பார்த்தார். நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின், முறைகேடுகளை மறைக்க பல முயற்சிகள் நடந்தும், ஆதாரங்கள் என்னிடம் இருந்ததால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், கடந்த 5ம்தேதியன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு, பட்டுவளர்ச்சித்துறை முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஒரு திருமண மண்டபத்தில், திருமண நிகழ்ச்சியில் இருந்த என்னை அவர்களது ஜீப்பில் ஏற்றிக்கொண்டு ஓடந்துறை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்றனர். அவர்களுடன் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவரும் வந்திருந்தார்.
இந்த விசாரணையில் நான் தெரிவித்த எந்த கருத்தையும் அவர்கள் ஏற்கவில்லை. ஓடந்துறையை அடுத்த பொய்யேறி பகுதி யில் உள்ள செல்லமுத்து கவுண்டர் தோட் டத்தில், மானியம் பெற்றதாக கூறப்படும் விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர். நாங்கள் மல்பெரி செடியே நட்டதில்லை; எவ்வித மானியமும் பெறவில்லை என்று அவர்கள் தெளிவாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். ஜீப்பில் இருந்த போலீஸ் ஸ்டிக்கரை கிழித்துவிட்டு, என்னையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து வேகமாக புறப்பட்டனர். பத்திரிகையாளர்கள் ஜீப்பை துரத்திய நிலையில், கவுந்தப்பாடி அருகே பாதிவழியில் என்னை இறக்கிவிட்டு விட்டு, மாலை 5 மணிக்கு தொடர்பு கொள்வதாக கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் என்னை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றனர். இந்த நிலையில், மாலையில் என்னை தொடர்பு கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி, 15 நாட்கள் கழித்து விசாரணைக்கு வருவதாக தெரிவித்தார்.
முறைகேடு தொடர்பாக என்னிடம் உள்ள எந்த ஆவணங்களையும் அவர்கள் பார்க்க விரும்பவில்லை. நான் அளித்த எந்த விளக்கத்தையும் கேட்காமல், அதட்டி உடன் அழைத்துச் சென்றனர். இதனால், முறைகேட்டை மறைக்கும் பணியில் அவர்கள் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கேட்டபோது, ‘பழைய புகார் ஒன்றிற்காக விசாரணை நடந்தது’ என்றனர். கவுந்தப்பாடி பட்டுவளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் வெங்கடேக்ஷை தொடர்பு கொண்ட போது, பேசுவதை தவித்து விட்டார். பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறுகையில், “அரசு விதிகளுக்கு உட்பட்டுதான் மானியம் வழக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபரை பழிவாங்கும் நோக்கோடு இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே துறை ரீதியாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
முறைகேடு நடந்தது எப்படி?
விவசாயிகளிடம் பட்டு வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து, பட்டுப்புழுக்கள் சாப்பிடும் மல்பெரி இலையை சாகுபடி செய்ய ஏக்கருக்கு நடவு மானியமாக கடந்த காலத்தில் ரூ. 1000த்தில் துவங்கி தற்போது ரூ. 6,000 வரை வழங்குகிறது. பட்டுப்புழுக்களை வளர்க்க பட்டுக்கூடு மனை அமைக்க அதன் அளவுக்கேற்ப ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி, ரூ 75 ஆயி ரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இதில் மல்பெரி செடி வளர்க்கும் விவசாயி கள் தங்களது நிலத்தின் கிரைய பத்திரம், சிட்டா, பட்டா, வி.ஏ.ஓ., சான்றிதழ் போன்ற வற்றை மானியம் பெற வழங்க வேண்டும். இந்த மானியம் ரொக்கமாக வழங்கப்படும் என்பதால், பினாமிகள் பெயரிலும், நிலம் இல்லாதவர்கள், சாகுபடி செய்யாதவர் கள் பெயர்களில் மானியம் வழங்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago