நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீரைத் தேக்குவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே அறிவித்தவாறு வருகிற 20-ம் தேதிக்குள் மூவர் குழுக் கூட்டம் நடைபெறுமா? என்று தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீரைத் தேக்கவும், அணையைக் கண்காணிக்கவும் கேரள, தமிழகப் பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு இதுவரை 4 முறை கூடியுள்ளது.
நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவது, அணைப் பகுதியில் மின் இணைப்பு அளிப்பது, வல்லக்கடவு வழியாக அணைக்கு புதிய புதிய சாலை அமைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்டன. ஆனால், எந்தப் பணிகளையும் நிறைவேற்ற விடாமல் கேரள வனத் துறை தொடர்ந்து இடையூறு செய்து வந்தது.
இதையடுத்து, இதுகுறித்து அக். 10 முதல் அக். 20-க்குள் மூவர் குழுவின் அடுத்தக் கூட்டம் நடைபெறும்போது கேரள வனத் துறை உயரதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டது. ஒருவேளை முன்னதாகவே அணையில் நீர்மட்டம் 140 அடியை எட்டினால், உடனடியாக மூவர் குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறும் என்றும் குழுவின் தலைவரான எல்.ஏ.வி. நாதன் தெரிவித்தார்.
இதனிடையே, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால், முதல் போக நெல் சாகுபடிக்காக பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், 102 அடியில் இருந்து 133 அடி வரை 3 மாதத்துக்குள் கிடுகிடுவென உயர்ந்த அணையின் நீர்மட்டம், மளமளவென சரியத் தொடங்கியுள்ளது. தற்போது 128 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளதால், 136 அடிக்கு தண்ணீரைத் தேக்குவதே சிரமம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதனிடையே, மூவர் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சாய்குமார், பதவி உயர்வில் தலைமைச் செயலர் நிலையை அடைந்துவிட்டதால், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முனைப்புடன் இருந்த நிலையில், தற்போது அவர் சிறையில் உள்ளதால் பணிகளை மேற்கொள்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழகப் பிரதிநிதி பதவி உயர்வு, முதல்வரின் சிறை தண்டனை ஆகிய சூழலில், தற்போது அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் மூவர் குழு கூட்டம் கூட்டப்படுமா?, அதன் பிறகு பணிகளைத் தொடங்க முடியுமா? என்று தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு குழப்பமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ‘தி இந்து’ செய்தியாளரிடம் தமிழக பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் 142 அடிக்கு தண்ணீரைத் தேக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மூவர் குழு கூட்டத்துக்கு கேரள வனத் துறை அதிகாரிகளை வரவழைத்து விளக்கம் கேட்ட பிறகுதான், அணைப் பகுதியில் மின் வசதி, வல்லக்கடவு வழியாக புதிய சாலை அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள இயலும். தமிழகப் பிரதிநிதி சாய்குமார் பதவி உயர்வு பெற்றுள்ளதால், அவர் எந்த நேரத்திலும் பணியிட மாற்றம் செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் ஏற்கெனவே அறிவித்தவாறு இந்த மாதம் மூவர் குழு கூட்டம் நடைபெறுமா? அப்படியே நடந்தாலும் அடுத்த கட்டப் பணிகளைத் தொடங்க முடியுமா? என்று பொதுப்பணித் துறையினர் குழப்பமடைந்துள்ளனர் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago