ஜோதிமணி ஒரு விளம்பரப் பிரியர்: பாஜக மாநில இளைஞரணி துணைத்தலைவர் தாக்கு

By க.சே.ரமணி பிரபா தேவி

ஜோதிமணி ஒரு 'விளம்பரப் பிரியர்'. அதேநேரத்தில் அவரைத் தரக்குறைவாகத் திட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணியின் துணைத் தலைவர் சூர்யா.

ஜோதிமணியை இழிவு வார்த்தைகளால் பேசிய அனைவரையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செயல் இல்லை. ஆனால் இந்தச் செயலை பிரதமர் மோடியோடு தொடர்புபடுத்தி, கட்சியே செய்கின்றது என்ற தொனியை ஏற்படுத்துவது அபத்தம். இந்த அபாண்ட பொய்யை ஒரு நாளும் இவர்களால் நிரூபிக்க முடியாது.

அங்கீகாரத்துக்காக காத்திருக்கும் ஜோதிமணி

ஜோதிமணியின் செயல்களுக்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்தால் நிறைய தகவல்கள் முன்வந்து நிற்கின்றன. ஜோதிமணி அயராது அரசியல் களத்தில் சேவை செய்திருந்தாலும் அவருடைய கட்சியும், தமிழக மக்களும் அவருக்கு பெரிதாக அங்கீகாரம் தரவில்லை என்ற வருத்தமும், தன்னால் ஒரு பிரபலமான பெண் அரசியல்வாதியாக தமிழ்நாட்டில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கமும், வேதனையும் அவருக்கு உள் மனதில் நீங்கா துயரத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சமூக ஊடகங்கள் இல்லாத ஒரு காலத்தில் இப்படி ஒரு நிலையில் தள்ளப்பட்டிருந்தால் அவர் வேறு வழியின்றி அமைதியாய் இருந்திருப்பார். ஆனால் தற்போது தன் துயரத்தில் இருந்து மீள, சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து, களத்தில் இவர் மேல் மக்கள் கொள்ள முடியாத கவனத்தை, ஊடகங்கள் வழியாகப் பெற வேண்டும் என்பதற்காக கடந்த சில வருடங்களாகவே பாடுபட்டு வருகிறார்.

''மதிப்பிற்குரிய நரேந்திர மோடி'' என்று தனது கடிதத்தைத் தொடங்கி இருக்கும் ஜோதிமணி டிசம்பர் 29-ஆம் தேதி ''ஒரு பிரதமர் தூக்கில் தொங்குவதும், உயிரோடு எரிக்கப்படுவதும் நாட்டுக்கு அவமானம். சட்டப்படி குற்றம். மானஸ்தன் வேறு! ராஜினமா செய்யட்டும்'' என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு இருந்தார் .

அரசியல் நாகரிகத்தைக் கற்க வேண்டும்

இந்த பதிவுக்கு ஜோதிமணியை ஆதரிக்கும் பலரும் கூட (காங்கிரஸ்காரர்கள் உட்பட) முகநூலிலும், ட்விட்டரிலும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். நாட்டு மக்கள் தேர்வு செய்த ஒரு பிரதமரைத் தூக்கில் தொங்கு, தீயால் எரிபட்டு சாவு என்று சொல்வதெல்லாம் எவ்வகையான நாகரிகம்? இப்படி ஓர் அநாகரிக பதிவை செய்தால் பிரதமர் மோடி ஆதரவாளர்கள் நிச்சயம் ஏதேனும் எதிர்வினை செய்வர்; அதை பயன்படுத்த வேண்டும் என்பதே ஜோதிமணியின் திட்டம். துரதிர்ஷ்டவசமாக அந்த திட்டம் தற்போது நிறைவேறி இருக்கிறது.

ஜோதிமணியைத் தரக்குறைவாகத் திட்டியதில் ஒருசில பாஜகவினரும் இருக்கலாம். அதற்காக பொத்தாம் பொதுவாக கட்சியைக் குறை சொல்ல வேண்டாம். ஊடகங்களில் இயங்குபவர்கள் சுதந்திரமாக செயல்படக்கூடியவர்கள். அவர்களைக் கட்சியால் கட்டுப்படுத்த முடியாது. ஜோதிமணியைத் திட்டிய அதே நபர்கள் தமிழக பா.ஜ.க தலைவர்களை விமர்சிப்பதும், அநாகரிகமாகத் திட்டுவதும், ஆபாச வார்த்தைகளால் பேசுவதும் தினம்தோறும் நடக்கும் ஒன்று.

ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சிப்பவர்களை கண்டிக்கும் அதே வேளையில், பொய் மற்றும் அநாகரிகக் கருத்துகளை மையமாக வைத்து அரசியல் செய்யும் ஜோதிமணியையும் நிச்சயம் கண்டிக்கிறேன். ஜோதிமணி முதலில், தான் நாகரீகமாக நடந்துக்கொண்டு மற்றவர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்கட்டும்'' என்கிறார்.

பாஜக எப்படி பொறுப்பேற்க முடியும்?

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நம்மிடம் பேசும்போது, ''முதலில் ஜோதிமணிக்கு எதிராகப் பேசியவர்கள் மீது அவரை விட அதிகக் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கருத்துக்கு எதிர்கருத்து தெரிவிக்கலாம். ஆனால் ஆபாசமாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

அதே நேரத்தில், ஜோதிமணி 'ஆபாசப் பதிவிட்டவர்கள் அனைவரும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படைச் சித்தாந்தமே அப்படித்தான்' என்கிற ரீதியில் ஜோதிமணி கூறியிருந்தார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

பாஜகவின் அதிகாரபூர்வ பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் ஜோதிமணிக்கு எதிராக ஆபாசமாக எதுவும் பதிவிடப்படவில்லை. பாஜகவில் பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் ஜோதிமணிக்கு எதிராக எதுவும் எழுதவில்லை. பாஜக பெயரைப் பயன்படுத்தி யாரோ செய்யும் தவறுகளுக்கு பாஜக எப்படி பொறுப்பேற்க முடியும்?

கட்சியின் அடிப்படையையே குறைசொல்வது தவறு

பிரதமர் மோடி - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை ஆபாசமாக இழிவுபடுத்தி தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியபோது அதற்கு ஜோதிமணி எதிர்வினையாற்றவில்லை. ஏன் இளங்கோவன் என்னைப் பற்றியே தரக்குறைவாகப் பேசினார். அப்போதும் அவர் குரல் கொடுக்கவில்லை. அந்த நேரங்களில் நாங்கள் யாரும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்திலேயே கோளாறு இருப்பதாகக் கூறவில்லை.

ஜோதிமணி குறித்த வக்கிரத் தாக்குதல் தவறு. அதேபோல பாஜக குறித்தும், அதன் தலைமை, கோட்பாடுகள் குறித்தும் ஜோதிமணி விமர்சிப்பதும் தவறு'' என்கிறார் தமிழிசை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE